தமிழ்முஸ்லிம் தந்தையை ஏன் அத்தா, வாப்பா என்று அழைக்கிறார்?

தமிழ்முஸ்லிம் என்றழைக்கப்படுபவர்களின் தாய்மொழி தமிழ் என்பதாலும் அவர்களுக்கு அரபு மொழியோ உருது மொழியோ தெரியாது என்பதாலும், வடமொழி நாட்டமும் அவர்களுக்கு இயல்பாகவே இல்லை என்பதாலும், தமிழ்முஸ்லிம்கள் பல தூய தமிழ்ச் சொற்களை அன்றாடம் அதிகம் புழங்குகிறார்கள்.

சோறு, ஆணம், பசியாறல், வட்டிலப்பம், பெருநாள், நோன்பு, தொழுகை, பள்ளிவாசல் என்று பல சொற்களை உதாரணமாகச் சொல்லலாம்.

அப்படியான தூய தமிழ்ச் சொற்களுள் அத்தா என்பதும் ஒன்று.

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். அத்தன் அத்தா அச்சன் முத்தன் அப்பன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.

அழைக்கும்போது அப்பன் என்பது அப்பா என்று ஆவதைப் போல அத்தன் என்பது அத்தா என்று ஆகிறது.

மாற்றுமத நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் சில தமிழ்முஸ்லிம்கள் இவர்தான் என் அப்பா என்று அவர்களுக்கு தகப்பனாரை அறிமுகம் செய்வார்கள். அது அவசியமற்றது, தாராளமாக அத்தா என்றே அறிமுகம் செய்யலாம்.

தமிழ்முஸ்லிம் வீடுகளில் தகப்பன் தகப்பனார் என்பவையும் புழக்கத்தில் உள்ள சொற்கள்தாம். தம் அப்பன் என்பதுதான் தகப்பன். தம் அப்பனைத்தான் அப்பா என்று அழைக்கிறோம்.

ஒரு தமிழ்முஸ்லிம் தகப்பனார் என்று சொல்லும்போதெல்லாம் அப்பா என்றுதான் தந்தையைக் குறிப்பிடுகிறார்.

அத்தா அப்பா என்ற சொற்களெல்லாம் பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறன. பழந்தமிழ் இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.

      பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா     
      எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
      வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
      அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

என்பது தேவாரப் பாடல்

      அன்னை நீ அத்தன் நீயே
      அல்லவை எல்லாம் நீயே
      பின்னும் நீ முன்னும் நீயே
      பேறும் நீ இழவும் நீயே

      அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இப்
      பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
      எத் தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
      ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?

என்பவை கம்பராமாயணப் பாடல்கள்

      முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
      அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
      தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
      பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

என்பது மணிவாசகரின் பாடல்
     
      அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
      அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
      எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
      எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்

இது திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்
     
      காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
      தேமொழி கேட்டல் இனிது

என்னும் வரிகள், மகனே, அனைவரும் விரும்பும் அழகனே, அத்தா அத்தா என்று சொல்லும் உன் தேன்மழலை மொழி கேட்பது என்றென்றும் இனிமையானது என்று சொல்லும் கலித்தொகையின் பாடல்

தமிழ்முஸ்லிம்கள் வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில்லை. பழந்தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதில் குறிப்பாக கடலோரம் வாழும் தமிழ்முஸ்லிம் வீடுகளுக்குச் சென்றால் அவர்கள் புழங்கும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தேநீர் என்பதை அதிராம்பட்டினம் போன்ற கடற்கரையோர ஊர்களில் தேத்தண்ணி (தே+தண்ணீர்) என்பார்கள். தேநீருக்கும் தேத்தண்ணிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தேத்தண்ணி என்பது பால் மிகக் குறைவாகவும் இஞ்சி அதிகம் சேர்க்கப்பட்டும் வெடவெடவென்று தண்ணீரைப்போல அடர்வற்று இருக்கும். உண்ட உணவை எளிதில் செரிக்க வைக்கக் கூடிய அருமருந்து அது.
தமிழ்நாட்டில் 5 மில்லியன் தமிழ்முஸ்லிம்களும் இங்கையில் 2 மில்லியன் தமிழ்முஸ்லிம்களும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். மேலும் மலேசியா சிங்கப்பூர் பாங்காக் போன்ற நாடுகளிலும் தமிழ்முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்

பிரியாணிக்கும் கவிதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நகைச்சுவையாக ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கேட்டாராம். காரணம் கவிஞர்களுள் அதிகமானோர் முஸ்லிம்களாக இருக்கிறார்களே அது எப்படி என்ற வியப்புதான். 

பௌத்தமும் சமணமும் ஆரியர்களால் அழிக்கப்பட்டபோது அவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சமணர்கள் தமிழ் இலக்கியங்கள் பல படைத்திருக்கிறார்கள்.

தமிழ்முஸ்லிம் வீடுகளில் மட்டும் எப்படி இத்தனை பழந்தமிழ்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன, எப்படி இத்தனைக் கவிஞர்கள் பிறக்கிறார்கள் என்பதற்கான காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.

இயல்பாகவே உலக அளவில் அராபியர்கள், பெர்சியர்கள், சூபிகள், துருக்கியர், உருதுக்காரர்கள், தமிழ்முஸ்லிம்கள் என்று பலரும் கவிதைகளில் மிகுந்த நாட்டம் உடையவர்களாகவே இருக்கின்றனர். சகோதரத்துவத்துக்கும் கவிதைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாமோ என்னவோ!

அத்தா என்பது அதன் வேரோடு புரிகிறது ஆனால் இந்த வாப்பா எங்கிருந்து வந்தது?

கடலோர தமிழ்முஸ்லிம் வீடுகளில் அம்மா என்று அழைப்பதற்குப் பதிலாக உம்மா என்று அழைப்பார்கள். இது பேச்சுவழக்கில் வந்தது. இப்படியானதொரு பேச்சுவழக்குதான் வாப்பா என்பதும்.

அப்பா என்பதை உப்பா என்றும் வூப்பா என்றும் இப்பா என்றும் கேரளாவில் அதிகளவில் சொல்வார்கள். அதையே தமிழ் நாட்டில் வாப்பா என்று சொல்வார்கள். இவை எல்லாமே அப்பா என்ற சொல்லின் பேச்சு வழக்குதானேயன்றி வேறில்லை.

வாப்பா என்று வாய்நிறைய அழைத்தவர்கள் அதிலிருந்து மாறத் தேவையில்லை. ஏனெனில் பேச்சுவழக்கிலிருந்து தமிழுக்குள் வந்த சொற்கள் ஏராளம்.

அத்தா என்பதும் வாப்பா என்பதும் அரபுச் சொற்களோ உருதுச் சொற்களோ அல்ல அச்சு அசலான பழந்தமிழ்ச் சொற்களே.

#தமிழ்முஸ்லிம்

அன்புடன் புகாரி

No comments: