ஊடகத்திரு எஸ்தி 50+ நூல் வெளியீடு 20190309
எத்தனையோ நூல்
வெளியீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அத்தனையிலிருந்தும் மொத்தமாய் மாறுபட்ட ஒரு
வித்தியாசமானதொரு நூல் வெளியீடு இதுதான். இது நூல் வெளியீடு அல்ல கண்ணீர்
வெளியீடு. ஆமாம் நூல் வெளியீடு என்றுதான் அழைத்தார்கள் ஆனால் அது எல்லோருடைய
கண்ணீர் வெளியீடாகவும் மாறிவிட்டது.
விழா நாயகர்
திருச்செல்வம் அவர்கள் ஏற்புரை வழங்கியபோது அரங்கில் நிலவிய அமைதியை மறக்கவே
முடியாது. இதழ்கள் மூடி மௌனம் நிரம்பிக்கிடக்க அதன்மீது கண்கள் திறந்து கண்ணீர்
பெருக்கெடுத்தோடியது.
ஊடகத்துறையில்
எல்லோரும் பத்திரிகை செய்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட சவால்களைச்
சொல்லி மாளாது. அதிலும் திருச்செல்வம் அவர்கள் இலங்கையில் நேர்கொண்ட கொடும்
இன்னல்களைக் கேட்கவே மரண பயம் சூழ்கிறது. அவரின் இழப்புகளும், எந்த இழப்பையும்
பொருட்படுத்தாமல் ஊடகத்துறையில் முன்னேறிச் சென்ற உறுதியுள்ளமும் அவரை மிக
உயரத்திற்கு ஏற்றி வைத்துவிட்டன.
மூன்றாண்டு
காலத்திற்கும் மேலாக திருச்செல்வம் அவர்களைப் பற்றிய கட்டுரைகளை உலகின் பல
பாகங்களிலும் வாழும் பலரிடமும் கேட்டு 51 கட்டுரைகளை காத்திருந்து காத்திருந்து பெற்று
பெருவெற்றிபெற்ற பொன்னையா விவேகானந்தன் மற்றும் எஸ். ஜெகதீசன் அவர்களை எத்தனைப்
பாராட்டினாலும் தகும்.
ஒரு நூல்வெளியீடு
என்றால், பொன்னாடைகள் போர்த்தவேண்டாமா? மலர் மாலைகள் சூட்டவேண்டாமா? வாழ்த்துக்கவிதைகள் வாசிக்க வேண்டாமா? வேண்டாம் வேண்டாம்
வேண்டாம் என்றே அனைத்தையும் தடுத்து ஒரு புதுமையான நூல்வெளியீடு செய்தார்கள்.
ஆனால் வந்திருந்த
உள்ளங்கள் அத்தனைபேரும் திருச்செல்வம் அவர்களை இறுகக் கட்டியணைத்துத் தங்களையே பொன்னாடைகளாய் ஆக்கிப்
போர்த்தினார்கள். கண்ணீராலும் பெருமிதப் புன்னகையாலும் கோத்தெடுத்த மாலைகளையும்
செண்டுகளையும் அணிவித்து நெகிழ்ந்தார்கள்.
வந்தால் வா
வராவிட்டால் போ என்று பொருளைப் பின்தள்ளி நடக்கும் தமிழர் தகவனின் சிறப்புமிக ஊடகப்
பெருமைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக வெகு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல காலம் காத்திருந்துக்
கோத்தெடுத்த பெரும் உழைப்பைக் கொட்டி படைத்த ஊடகத்திரு எஸ்தி 50+ என்ற
அருமையான நூலை இலவாசமாகவே தருவோம். எவரும் அதற்காக ஒரு டாலரும் கொடுத்துவிடக்
கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்கள்.
கூடியிருந்த கூட்டம்
பொருள்தந்து அந்த நூலைப் பெற்றிருந்தால், குறைவாகப் பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் டாலர்களாவது
தேறியிருக்கும். அந்தப் பத்தாயிரம் அரங்கம், நூல் அச்சு, சிற்றுண்டி ஏற்பாடு
என்றவற்றுக்காவது பயன்பட்டிருக்கும். ஆனால் அது எதுவுமே தேவையில்லை என்று சொந்த
செலவிலேயே வெளியிடப்பட்டது ஊடகத் துறையை மெய்சிலிர்க்க உயர்த்திப் பிடித்த
தனித்தரம்.
உண்மையில் இந்த நூலை
உலகநாடுகள் அனைத்திலும் வெளியிட்டுப் பொருள் சேர்த்தால் நுறாயிரம் டாலர்களை வெகு
சுலபமாக ஈட்டித் தந்துவிடும். அத்தனை நண்பர்களோடும் நன்மதிப்போடும் உலகம்
முழுவதும் பெயர் பெற்றவர் ஊடகத்திரு திருச்செல்வம்.
இப்படியே நிறைய
விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். கண்ணீர் வெளியீடு நிகழ்ந்ததற்கான காரணங்களைச்
சொல்லப் போனால் இங்கும் கண்ணீர் பெருக்கெடுத்துவிடும்.
51 கட்டுரைகள் ஒன்றாய் ஒரு நூலில் சேர்ந்து திருச்செல்வம்
அவர்களின் 55 ஆண்டுகால ஊடக வாழ்க்கைப் பாதைக்கு வீசுவொளி பாய்ச்சி
இருக்கின்றன.
ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும், போர்க்காலத்தில் பத்திரிகைத் துறையின் சவால்கள் என்னென்ன, எதையெல்லாம் இழந்து
உண்மையான ஊடத்துறையாளர்கள் பொற்தடம் பதிக்கிறார்கள் என்ற பல விடயங்களை ஒரு நூலில்
வாசிக்க வேண்டுமா? அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது, உங்களுக்கும்
கிடைக்க ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
உண்மையான நேர்மையான
தரமான சத்தியமான ஊடகத்துறை என்பது என்ன என்பதற்கான முழுவிளக்கம் இந்த நூல் வெளியீட்டுவிழா என்றே
எனக்குத் தோன்றியது.
கவிஞர் புகாரி
No comments:
Post a Comment