தமிழ்முஸ்லிம்
நண்பரை ஏன் சிலர் பாய் என்று அழைக்கிறார்கள்?
இஸ்லாம் சகோதரத்துவத்தைப்
போற்றும் ஒரு வாழ்க்கை நெறி. சகோதரத்துவம் என்பது மனிதர்களுக்கு இடையே
ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் வேற்றுமைகள் கொள்ளாமல் ஒன்றாக இணைந்து உறவுகளாய்
வாழ்வது. உலக மக்கள் அனைவரையுமே அன்புச் சகோதரர்களாகப் பாவித்து வாழும் ஓர் உயரிய
நிலைப்பாடு.
மக்களிடையே சகோதரத்துவம்
நிலவாவிட்டால் உலகில் ஒற்றுமை என்பது கைக்கு எட்டாத அருஞ்சுவைக் கனியாகிவிடும்.
உண்மையான சுதந்திரம் என்பது மக்களிடையே நிலவும் சமத்துவமும் சகோதரத்துவமும்தான்.
ஆகவே உலகில் எல்லோரும் எல்லோரையும் சகோதரர்களைப் போல உறவாகக் காணவேண்டும். அதுதான்
இந்த உலகை உய்விக்கும் அற்புத மந்திரம்.
அப்படிச் சகோதரத்துவம் போற்றி
அனைவரையும் சகோதரர்களாய்க் கண்டு அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப்
பண்புகளுள் ஒன்று.
சகோதரத்துவம் சரி சகோதரன் சரி, இதில் பாய் என்ற சொல்
எங்கிருந்து வந்தது?
ஆங்கிலத்தில் Bro Bro என்று சிலர்
அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம். அதாவது சகோதரா என்று பொருள்.
இன்று தமிழ்த் திரைப்படங்களில்
இந்த புரோ என்ற சொல் ஒட்டிக்கொண்டு கதாநாயகன் காமெடியன் நாவுகளில் வழுக்கிக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறது. அதை ஒரு புதுமைக்காகப் பயன்படுத்துகிறார்கள்
திரைப்படத்தில். அதையே உளப்பூர்வமாகப் பயன்படுத்தினால் அதுதான் சகோதரத்துவம்.
அப்படிச் சகோதரத்துவத்தைப்
போற்றும் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைக்க வேண்டும்?
பாய்... பாய்... என்றா?
இல்லை, அது தவறாக அழைப்பு.
சரியான அழைப்பு சகோ அல்லது
சகோதரா என்று இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ. அல்லது அண்ணா
தம்பி என்று அழைக்க வேண்டும். அண்ணன் தம்பி என்று அழைப்பதே நம் தமிழ்ப்
பாரம்பரியம்.
பிறகு ஏன் பாய் பாய் என்று
அழைக்கிறார்கள் சில தமிழர்கள்?
இது உருது முஸ்லிம்கள் மற்றும்
இந்திக்காரர்கள் பயன்படுத்துவைப் பார்த்து பழகிக்கொண்டது. அவ்வளவுதான். முஸ்லிம்
வீடுகளில் சில உருதுச் சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும் என்று சில உருது
முஸ்லிம்களால் இது திணிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். இந்திக்காரர்களால்
கொண்டுவரப்பட்ட பழக்கமாகவும் இருக்கலாம்.
இன்றெல்லாம் அண்ணன், தம்பி, சகோ, சகோதரா என்ற தமிழ்ச் சொற்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஜி ஜி என்று
அழைக்கிறார்கள் சிலர். அதுவும் ஒரு புதுமை மோகம் சிலருக்கு. சகோதரத்துவத்தை
விட்டுவிட்டு உயர்ந்தோன் தாழ்ந்தோன் என்ற கருத்தியலை முன்வைப்பதாகவே பலநேரம் அது
படுகிறது. கூடவே தமிழைக் கைவிடுவது ஒரு நாகரிகம் என்றல்லவா நினைக்கின்றனர் சிற்சில
அறிவிலா தமிழர்கள்.
உருது மற்றும் இந்தி மொழிகளில்
பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம். அவர்கள் அதை மிகுந்த மரியாதையுடனும்
அன்பாகவும்தான் பயன்படுத்துகிறார்கள். அதையே அவர்கள் தமிழிலும் பயன்படுத்துவதால்
பிழை என்றும் இல்லை. ஆனால் உருதுக்காரர்களும் இந்திக்காரர்களும் பாய் என்பதன்
சரியான பொருள் அறிந்து சகோதரா அண்ணா என்பதுபோல பாசத்தோடு அழைத்துக்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கதையே வேறு. இங்கே
பாய் என்றால் அண்ணா என்று பொருள் இல்லை, சகோதரா என்று பொருள் இல்லை. முஸ்லிம் மதத்தவர் என்று பொருள். எத்தனைப் பெரிய
பிழை இது?
ஆகவே பாய் என்று ஒரு தமிழ்
முஸ்லிமை ஒரு தமிழன் அழைப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி அழைத்தால் அது
முதலில் ஒரு தமிழனைத் தமிழைவிட்டுத் தூரத்தில் நிறுத்துகிறது. ஒரு தமிழனை தமிழ்
வழக்கில் அழைக்காமல் உருது மற்றும் இந்தி வழக்கில் அழைப்பது தமிழுக்கும் இழுக்கு.
நீயம் தமிழ் நானும் தமிழ்
என்றால் சகோ என்றோ சகோதரா என்றோ அண்ணா என்றோ தம்பி என்றோ அழைப்பதுதானே சரி.
தமிழரல்லாதவர்களை அழைக்கும்போது Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம்.
அல்லது சகோதரா என்றே தமிழிலேயே அழைக்கலாம். காலப்போக்கில் தமிழ் தெரியாதவர்களும்
சகோதரா என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
அரபு மண்ணில் அஹூ என்று
அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோதரா என்றுதான் பொருள். அரபுக் காரர்கள் யாரும்
பாய் பாய் என்று அழைத்துக்கொள்ளமாட்டார்கள்.
இனியாவது இந்த பாய் பாய் என்னும்
நோயை விட்டுவிடுவோம். அதை ஒரு தமிழனிடமிருந்து இன்னொரு தமிழன் கேட்கும்போது
தாய்த்தமிழ்க் காதுகள் சன்னமாய் நெளிகின்றன?
இதில் பாயம்மா என்று அழைப்பது
இதனினும் கொடுமை. தமிழ்முஸ்லிம்களின் அன்னையரை, மனைவியரை, சகோதரிகளை என்று அனைத்து முஸ்லிம் பெண்களையும் பாயம்மா என்று அழைக்கிறார்கள்
சிலர், அதாவது பாய் என்றால் ஆண்பாலாம் பாயம்மா என்றால் பெண்பாலாம். இது எப்படி
இருக்கு, எத்தனைப் பெரிய நகைச்சுவைக் குலுங்கு?.
தமிழ்ச் சகோதரர்கள் அனைவரும்
ஒன்றைப் புரிந்துகொள்வோம், தமிழ்நாட்டில் தமிழையே தாய் மொழியாய்க் கொண்ட முஸ்லிம்கள்தாம் மிகப்
பெரும்பாலானவர்கள். அவர்களை பாய் என்று உருது மொழியில் அல்லது இந்தி மொழியில்
அழைத்தால் அவர்கள் வேதனையே அடைகிறார்கள். ஒவ்வொருவரிடமும் விளக்கம் சொல்லிச்
சொல்லிக் களைத்தும்விடுகிறார்கள். சில தமிழ் முஸ்லிம்கள் தாங்களே இதை
அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
இதில் இன்னொரு வேதனை
என்னவென்றால், சிலர் நினைத்துக்கொள்கிறார்கள் முஸ்லிம்களின் தாய்மொழி அரபுமொழி என்று. வேறு
சிலர் நினைத்துக்கொள்கிறார்கள் முஸ்லிம்களின் தாய்மொழி உருது மொழி என்று. இரண்டுமே
பிழை என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.
முஸ்லிம் அல்லது இஸ்லாமியர்
என்பது இந்து என்பதைப் போல கிருத்தவர் என்பதைப் போல ஒருவர் பின்பற்றும் மார்க்கம்
காரணமாக வந்த பெயர். எந்த நாட்டில் எந்த ஊரில் எந்தத் தாய்க்கு ஒரு முஸ்லிம்
பிறந்தானோ அவனின் தாய்மொழி அவன் அன்னையின் தாய்மொழிதான்.
தெலுங்கானாவில் வாழும் ஒரு
இந்துவின் தாய்மொழி தெலுங்கு, கேரளாவில் வாழும் ஒரு கிருத்துவரின் தாய்மொழி மலையாளம் தமிழ்நாட்டில் வாழும்
ஒரு முஸ்லிமின் தாய்மொழி தமிழ். இந்துக்கள் எல்லோரின் தாய்மொழியும் சமஸ்கிரதம்
என்று சொல்வோமா அல்லது இந்தி என்றுதான் சொல்வோமா?
முஸ்லிம்கள் எல்லா நாட்டிலும்
உள்ளனர். அந்தந்த நாட்டில் உள்ளவர்களுக்கு அந்தந்த நாட்டின் மொழிதான் அவர்களின்
தாய் மொழி. தமிழ்முஸ்லிம் பின்பற்றும் குர்ஆன் அரபி மொழியில் இருந்தாலும் அரபி
அவர்களின் தாய்மொழியாய் ஆகிவிடாது.
ஓர் இந்து நண்பரைச்
சந்திக்கும்போது அண்ணா சகோதரா என்று அழைத்துவிட்டு ஒரு முஸ்லிம் நண்பரைச்
சந்திக்கும்போது பாய் என்று அழைப்பது தமிழ்முஸ்லிம்களைத் தமிழினத்திலிருந்து
ஒதுக்கிவைப்பதாய் ஆகிவிடும். அப்படி ஒரு தமிழச் சகோதரனை தனித்துப் பிரிப்பதென்பது
அன்பில் பாகுபாடு காட்டி தனிமைப்படுத்தும் தீண்டாமையைச் செய்வதாகவும் ஆகிவிடும்.
பிறப்பால் தமிழ்இந்து என்பவன்
ஒரு தமிழன், அவன் பின்பற்றும் மதத்தால் அவன் ஒரு இந்து என்பது போலவே
இனத்தால் தமிழ்முஸ்லிம் என்பவன்
ஒரு தமிழன், அவன் பின்பற்றும் மார்க்கத்தால் அவன் ஒரு முஸ்லிம்.
இவ்வேளையில் சங்கத் தமிழன் சொன்ன
சொல்லையும் ஒப்பிட்டு நோக்குவோம். யாதும் ஊரே யாவரும் கேளிர். கேளிர் என்றால் உறவு
என்று பொருள். தமிழன் இந்த உலகையே தனது ஊராய்க் கருதுகிறான். எல்லோரையும்
உறவுகளாய்ப் போற்றுகிறான் என்ற உயர் தத்துவத்தை எளிய வரிகளில் சொன்னதே நம் தமிழினம், இஸ்லாம் மற்றும் சகோதரத்துவம்
போற்றவில்லை தமிழினமும் சகோதர்த்துவம்தான் போற்றுகிறது.
நன்றி சகோதரா
No comments:
Post a Comment