முத்தக்காட்டில்
விட்டுவைத்தேன்
இந்தக் கவிதையை வாசிக்கும்
போதெல்லாம், இதை எழுதிய பொழுதில்
இதயத்தில் நிறைந்து வழிந்த
அந்த உன்னதமான பாச
வெள்ளத்தில் மீண்டும் விழுந்து
என்னை மறந்து நான்
மூழ்கிவிடுகிறேன். என் கவிதைகளுக்குப் பாராட்டு
என்பது பலவழிகளில் பல
வார்த்தைகளில் வரும். ஆனால்
இந்தக் கவிதைக்கான பாராட்டு
சற்றே வித்தியாசமானது.
என் மகளுக்கு நான்
எழுதினால் எப்படி இருக்குமோ
அப்படி இருக்கிறது இக்கவிதை
ஆகவே நான் என்
மகளிடம் வாசித்துக் காட்டினேன்,
பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தேன்,
நாங்கள் மகிழ்ந்து கூத்தாடினோம்
என்றுதான் வரும். தந்தை மகள் பாசப்பிணைப்பை
இப்படியான கவிதைகளினாலும் சொல்லிவிடமுடியாது என்பதே உண்மை.
தத்தித்
தித்தித்தத் தங்கநிலவே
நீ தாவணிப்
பூவுக்குள் பூவானாய்
முத்துத்
தெறித்திடும் மெய்யழகே
நீ
முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய்
பெத்த
மனங்களின் பொந்துகளில்
நீ பிறந்ததும்
மீட்டிய குரலிருக்கு
எத்தனை
வளர்ந்து நிமிர்ந்தாலும்
உனை
எடுத்தே கொஞ்சிடும் உயிரெனக்கு
பத்துத்
திங்கள் சுமந்தவளும்
உன் பருவம்
கண்டே வியக்கின்றாள்
ரத்த
இழையின் சின்னவனும்
நீ
ரத்தினத் தீவெனக் கூவுகின்றான்
நித்தம்
ஒளிரும் நெற்றி மொட்டே
என் நெஞ்சில்
வளரும் தாலாட்டே
புத்தம்
புதிய மழைத்துளியே
நீ
பேசிடும் மொழியும் தேனிசையே
முத்தக்
காட்டில் விட்டுவைத்தேன்
நீ
மூர்ச்சையாகிப் போகவில்லை
கட்டித்
தழுவி நொறுக்கிவைத்தேன்
உன்
கண்களில் தாகம் தீரவில்லை
எத்தனைப்
பாசம் பொன்னழகே
நீ ஏணிக்கு
எட்டாத வெண்ணிலவே
பொத்திய
கைக்குள் வைரமென்றே
உனைப் பெற்ற நிறைவுக்கு
ஈடில்லையே
No comments:
Post a Comment