கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன


நான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்


கண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன

எல்லாம் உதிர்ந்துபோக
எஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே
மொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல
நிற்கிறேன் நான் இந்த மேடையில்

ஒரே நாளில் சட்டென்று வந்த துக்கமல்ல இது
சிறுகச் சிறுக என் இதய உண்டியலில்
கண்ணீர் கண்ணீர் என்று விழுந்து... சேமித்துக்கொண்ட துக்கம்

சட்டென்று இன்று... ஓர் இடிமழையாய்க் கொட்டியபோது
எதிர்பார்த்ததுதான் என்றாலும்... முற்றுப் பெறாத சிக்கல் வந்து
நகர மறுக்கும் வீம்போடு.... மூச்சுக்குழாய்களில் சிக்கிக்கொண்டது

என் அன்பிற்கினிய ஐயா....
பாதியாய்க் குறைந்துபோன மேனியோடு நீங்களிருக்க
இரட்டிப்பாய் விரிந்துபோன விழிகளோடு நான் பார்த்தேன்
உங்களை என் புத்தக வெளியீட்டு விழாவில்

என்னய்யா இப்படி என்றேன்
என் ஆச்சரியம் நெற்றிப் பொட்டில் முட்டிமோத

ஆமாம் புகாரி... கொஞ்சம் உடல்நலமில்லை
மருந்துண்பதால் இப்படி... விரைவில் மாறிப்போகும் என்று
கவலைகளின் பெரும் பள்ளத்தாக்கை
தவறியும் தளராத.... வார்த்தைத் திரைகளால் மூடி மறைத்தீர்கள்

ஆனால்.... உன்னைக் காணத்தான் வந்தேன் புகாரி என்று
உங்கள் விழிகள் என்னைத் தேடித் தேடித் தேடி முத்தமிட்டன

இங்கிருக்க வேண்டாம் வாருங்கள் என்று
மேடைக்கு அழைத்துவந்து அமரவைத்தேன்
எப்போதும் நான் உங்களுக்குத்தரும் மரியாதை... அன்று....
இரட்டிப்பாய் உயர்ந்ததை என் ஒவ்வொரு செல்களிலும் உணந்தேன்

"புகாரியின் விழாவிற்கு வந்தே தீருவேன் என்று
வம்பு செய்து வந்திருக்கிறார் அண்ணே" என்று... செய்தி தந்தார் செந்தி

நான் காணாத நேரம்பார்த்து
மேடையை விட்டுப் போய்விட்டீர்கள் ஐயா
நான் விட்டுவிட்டேன்

நான் காணாத நேரம்பார்த்து
மண்ணையும் விட்டுப் போய்விட்டீர்களே ஐயா
எப்படியய்யா விடமுடியும்?

அன்று மேடையை விட்டு விடைபெற்றதும்
இன்று மண்ணையே விட்டு விடைபெற்றதும்
உங்களுக்கு உங்களின் சங்கடம் போக்கும்
சௌகரியமானமான காரியங்கள்தாம்

எப்படித்தான் மனதைத் தேற்றித் தேற்றிப் பார்த்தாலும்
எங்களுக்கோ சங்கடமொன்றையே தருவதாகவே இருக்கிறதே ஐயா

நான் தமிழ்ப்பற்று மிக்க பலரை
அவ்வப்போது என் வாழ்வில் கண்டிருக்கிறேன்
தமிழாகவே நிற்கும் உங்களைப்போல் நான் அதிகம் கண்டதில்லை

என் மேடைகளை விட்டிறங்கி மெல்லிய குரலில்
நான் உங்களிடம் அவ்வப்போது கேட்பேன்
எப்படி ஐயா என் பேச்சு என்று

உள்ளன்போடு பாராட்டிவிட்டு... உரிமையோடு ஒரு முறை சொன்னீர்கள்
கவிதைகள் வாசிக்கும் போதுமட்டும்
இன்னும் கொஞ்சம் உரத்து வாசியுங்களேன் என்று

இன்றும் உங்கள் சொல் கேட்கவே நான் விரும்புகிறேன் ஐயா
ஆனால் இயலவில்லையே... எனக்கு இயலவில்லையே...

மேலுலகம் என்றொன்றிந்தால்... வள்ளுவர் காத்திருப்பார் அங்கே
"கேட்டது.... உன் குரலில் என் குறள்"
என்று உங்களை.... வாரியணைத்து நன்றி சொல்ல

நான் கவிஞன்தான் ஐயா....
ஆனால்.... நானிங்கே வாசிப்பது கவிதையல்ல

இன்று... வாழும் வாய்ப்பிருக்கும் எனக்கு
அன்பும் அறிவும் பொங்கும் உங்கள் திருமுகத்தை
ஆறுதலாய்க் காண.... ஓடி வருகின்ற வாய்ப்பு அமைந்தது

அதைக் கண்டு வலுவிழந்து துடிக்கும் இதயத்தின்
புலம்பல்களை இறக்கிவைக்காமல்... நான் எங்கே போகமுடியும்?

அழுவோன் எவனும் என்னை அணுகாதே என்ற வைராக்கிய உள்ளத்தோடு
தெரிந்துபோன மரணத்தை உங்களின் சுண்டுவிரலால்
சுண்டிச் சுண்டி நகைத்த மன உரம் உங்களுக்கே வரும்

புகாரி... பதினைந்து தினங்களில்
நான் இந்த மருத்துவமனை விட்டு வீடுவருவேன்
நாம் ஆற அமர அமர்ந்து தமிழ் பேசுவோம் என்றீர்களே ஐயா
......எந்த வீட்டைச் சொன்னீர்கள்?

சாவு ஒன்றும் புதியதில்லைதான்
இந்த உலகின் எத்தனையோ மனிதர்கள்
பிறக்கிறார்கள் தினம் தினம்.... இறக்கிறார்கள் தினம் தினம்...

இறந்தும் பிறக்கும் ஜீவ உயிர் கொண்ட தமிழறிஞர் நீங்கள்
.....உங்களுக்கு ஏது மரணம்?

என்னில்... எழில் தமிழில்... தமிழர்தம் நெஞ்சில்....
என்றும் என்றும் என்றென்றும்
வாழ்வீர் வாழ்வீர் வாழ்வீர் ஐயா

நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்து


சொல்ல இனித்தால்தான் சொல்
உண்மைதான் - ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே

புள்ளி சேர்த்தால்தான் கோலம்
உண்மைதான் - ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே

அல்லி பூத்தால்தான் அழகு
உண்மைதான் - ஆயினும்
அலையலையாய் விரிந்தாலும்
அது அழகுதானே

கல்லை உடைத்தால்தான் சிலை
உண்மைதன் - ஆயினும்
கருத்துக்குள் வடித்தாலும்
அது சிலைதானே

முல்லை மலர்ந்தால்தான் வாசம்
உண்மைதான் - ஆயினும்
மனதுக்குள் மலர்ந்தாலும்
அது வாசம்தானே

உள்ளம் இணைந்தால்தான் உறவு
உண்மைதான் - ஆயினும்
உதிரத்தில் வெடித்தாலும்
அது உறவுதானே

வள்ளல் கொடுத்தால்தான் கொடை
உண்மைதான் - ஆயினும்
வார்தையால் அணைத்தாலும்
அது கொடைதானே

0

இல்லை உனக்குவோர் பரிசு
உண்மைதான் - ஆயினும்
இதயத்தால் ஏந்திவிட்டால்
அது பரிசுதானே

பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
எல்லாமும் எல்லாமும்
இனிதாக இசையாக

நல்லோர்கள் புடைசூழ
நாற்திசையும் தமிழ்மணக்க
நடைபோடு நடைபோடு
நல்லதமிழ் மகனாக

சொல்லில்லை சொல்லில்லை
நெஞ்சத்தின் கவிசொல்ல
சொல்லாமல் போனாலும்
சுவையன்றோ நட்புறவில்

உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன்
ஓவியமாய்க் காவியமாய்
வாழ்வாங்கு வாழ்கவாழ்க

ஆயுளென்று நூறிருந்தால்
அதுவொன்றே பெரும்பேறு
அடடாவோ நீயதிலே
அரைவாசி வென்றுவிட்டாய்

தாயுள்ளம் தானுனக்குத்
துயர்கண்டு துடிக்கின்றாய்
தங்கத்தால் சொல்லெடுத்துத்
தரணியையே அணைக்கின்றாய்

வாயாரப் புகழ்ந்தாலும்
விடுபட்டுப் போகுதய்யா
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்க

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து

தமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்


கனடா டொராண்டோவில் ஜிம் கரிஜியானிஸ் என்ற அமைச்சர் தமிழர்களின்பால் மரியாதை கொண்டிருந்தார். தமிழனின் ஆதரவை அவர் நாடினார். அவரின் ஆதரவைத் தமிழன் நாடினான். இருவரும் கைகுலுக்கிக்கொண்டதன் விளைவாக அவருக்கு ஒரு விழா எடுத்த ஓர் தமிழ்மாலைப் பொழுதில் அவருக்கு நான் சூட்டிய நன்றி மாலை


நம் தமிழர்வானில் ஜிம் கரிஜியானிஸ்

தேர் கேட்டா
புறப்பட்டான் தமிழன்
ஊர் விட்டான்
நீரும் வேரும் அற்று
உயிர் வாடும்
முல்லைக் கொடியானான்

வம்பால் விரட்டப்பட்டு
ஒரு கொம்புக்காய்த்தான்
துடி துடித்தான்
அடடா
தேரல்லவா தந்தது நம் கனடா

தேம்பியழும் விழிகளில்
ஒரு பழைய போர்வையைத்தான்
கேட்டான் தமிழன்

மாளிகையின் மத்தியில்
ஓராயிரம்
தங்க நாற்காலிகளையல்லவா
போட்டுத்தந்தது நம் கனடா

உயிர் துறப்பான் தமிழன்
ஆனால் தன் மொழி துறப்பானா
மொழி துறந்தால் அவன் ஒரு
தமிழன்தானா

மொழியின் மேடைகளில்தானே
தமிழனின் கர்வம்
விண்ணளந்து நிற்கிறது
அவன் பண்பாடு
தலைநிமிர்ந்து வாழ்கிறது

ஊர்விட்டால் என்ன
மொழிவிடாத வரை
தமிழன் என்றென்றும்
ராஜ சிம்மாசனத்தில்தான்

O

நம் தமிழர்வானில் - திரு
ஜிம் கரிஜியானிஸ்

இந்தப் பெயரை உச்சரிக்கும் போதே
நமக்குள் நன்றியின் நாளங்கள் நிமிர்கின்றன

யார் இவர்?

கற்றையாய் ஒரு கறுப்பு மீசை வைத்துவிட்டால்
இவர் நம் கட்டபொம்மன் ஆகிவிடுவாரோ
என்றுகூட நான் ஐயப்படுகிறேன்

இவர் இன்று தமிழனுக்குச் செய்யும் தொண்டு
சரித்திரத்தில் சில கோடுகளையாவது
கிழித்துவிடும் என்பதில்
எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது

தமிழன்கூட மறந்துபோகிறான்
ஒரு தமிழ் விழாவுக்கு வருவதற்கு
இந்தத் தமிழ் நேசனோ
ஒருபோதும் மறப்பதில்லை

இந்த வெள்ளையர் மனதின்
உள்ளுக்குள்ளும் வெள்ளை

இவர் ஓரிரு வார்த்தைகளை
மழலைத் தமிழில் மொழியும்போது
தமிழ் ஒரு தங்கப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்து மின்னுவதையும்
பூரித்துச் சிரிப்பதையும்
தமிழரின் கண்களும் காதுகளும்
பார்க்கவும் கேட்கவும் தவறுவதில்லை

ஆம்
தமிழ் அப்படித்தான்
அறியாதவன் பேசும்போதும்
அழகோடு அவன் நாவினில்
நர்த்தனம் ஆடி செங்கோல் ஊன்றும்
கேட்போரின் செவிகளில்
தேன் வாரி இறைக்கும்

வண்ணம் வேறானாலும்
தமிழன் முன்னேற்றத்தில் கொண்ட
எண்ணம் உயர்வான ஜிம் கரிஜியானிஸ்

நம் தமிழர் வானில் - திரு
ஜிம் கரிஜி யானிஸ்
விண் வளரும் நட்பால் - தமிழ்
இன் அகமும் தேனில்
கண் விரியும் தொண்டு - தினம்
என் மனமும் கண்டு
நல் இதயம் வாழ - பசும்
பொன் இனிய வாழ்த்து

நான் இக்கவிதையின்
ஒரு வார்த்தையைக் கூட
உன் மொழிக்கு மாற்றப் போவதில்லை

ஏன் தெரியுமா?

கவிதை என்பது
உணர்வுகளின் உற்சவம்
நீயதை
இந்நேரம் உணர்ந்திருப்பாய்
உணர்வுகளுக்கு ஏது மொழி

பிறகு
நான் ஏன் மொழிமாற்றவேண்டும்
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
உயர்ந்தோங்குக தமிழர்களின்
நன்றி உணர்வுகள்

கவிநாயகர் வி கந்தவனம்


டொராண்டோ தமிழரங்கம் விழாவில் கவிநாயகர் கந்தவனம் அவர்களை அறிமுகம் செய்யும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை நான் இப்படிச் செய்தேன்


நீறு நீக்கி
நிலம் பெயர்ந்த நெஞ்சுக்குள்
அழகு தமிழ் நெருப்பு கூட்டி
அணையுடைத்த கன்னிக் காவிரிபோல்
கனடியத் தமிழ் மனக் கரைகளில்
இனிப்பாய்க் குதித்தோடும்
தமிழரங்கத்துக்கும்

போற்றிப் பாதுகாக்கும் பொக்கிசமாய்ப்
புலம்பெயர்ந்த மண்ணிலும் - கவி
வளம்பெயர்த்துக் கொண்டுவந்து
வற்றாது என்றென்றும் கொட்டும்
கவிநாயகர் கந்தவனம் அவர்களுக்கும்

ஏனைய தமிழ் நெஞ்சங்களுக்கும்
என் பிஞ்சு மாலை வணக்கங்கள்


கவிநாயகர் வி. கந்தவனம்

எழுபத்தோரு வயது இளைஞர்
ஈழமண் பெற்றெடுத்தக் கவிஞர்

சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி
பலநூறு கவியரங்கங்களுக்குத் தலைமை ஏற்று
தாக இதயங்களில் தமிழ்த்தேன் இட்ட மாரி

ஆசிரியராய்த் துவங்கி அதிபராய் வளர்ந்தவர்
அயல்நாட்டுக் கூடங்களிலும் நற்கல்வி வழங்கியவர்

கவிதை நூல் கதை நூல்கள் மட்டுமல்ல்
பாடநூலும் பயிற்சி நூலும் வெளியிட்ட பெருமைக்குரியவர்

எண்பத்தெட்டில் கனடா வந்தபின் மட்டுமே இவர்
இருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார்

கனடாவில் அதிகம் தமிழ்நூல் வெளியிட்ட
முதல் தமிழர் இவரே
இதனால் கனடியத் தமிழீழ
இலக்கியத் தந்தையென்றும்
கவியரங்குக்கோர் கந்தவனம் என்றும்
பாராட்டப்பட்டவர்

இதுவரை வெளியான நூல்களின் எண்ணிக்கையே
நாற்பதைத் தொடும்
நல்லூர் நாற்பது என்ற இவரின் பக்தி நூல்
பலர் வீடுகளில் ஓதப்படும்
இருந்தும் இவர் எளிமை ஒன்றையே தொட்டு வாழும்
இனிய பண்பாளர்.

வண்ண வண்ணமாய் உன் எண்ணஅருவி
வென்றுகுவித்த கவி கொஞ்சமல்லவே
மண்ணும் விண்ணும்பார் நீ மதுரகவி
மணிவிழாவும் கண்ட மகுடபதி

கன்னித் தமிழால் கவி நாயகமே
கனடாவின் தேச கீதமுமே
கண்டு கொடுத்தாய் புகழ் அள்ளியெடுத்தாய்
கன்னல் மொழியே நீ வாழியவே

ஆம், கனடிய தேசிய கீதத்தைத் தமிழில் அதன் இசை மாறாமல்
ஆக்கித்தந்த வித்தகர் இவர்தான்

பல இலக்கிய வட்டங்களை உருவாக்கித் தந்தவர்
வாழ்நாளெல்லாம் எதோ ஓர் அமைப்பின் தலைவராய்
சளைக்காமல் பணியாற்றிவருகிறார்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் இவர்
தற்போது மேற்குலக கவிஞர் கழகத்தை உருவாக்கி இருக்கிறார்

கலை, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, சைவ சமயம்
ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாளர்

ஆங்கிலத்திலும் கவிதை கதைகளை
இவர் விட்டு வைக்கவில்லை
இவரின் கவிதை ஒன்றுக்கு
Editor's Award கிடைத்துள்ளது
இவரது ஆங்கிலக் கவிதைகளை
The National Library of Poetry வெளியிட்டுள்ளது

இவரது 12 short stories, Lasting Light- என்னும் இரு நூல்களை
உயர் வகுப்புகளில் உபபாடங்களாகப் பயன்படுத்தலாம் எனக்
கனடிய பாடவிதான சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவரது இலக்கிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள
உலகப் பல்கலைக் கழகம் 2001ல்
டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது


அருங்கலைகள் ஆயிரம் வளர்க்கும்
இவரே ஓர் பல்கலைக் கழகம்
கரும்பிற்கு இனிப்பு வழங்குவதாய்
மதுரகவிக்குக் கலாநிதி பட்டம்


இனி இந்தத் தேன்மழை நம்மீது பொழியட்டும்
தாகச் சிற்றோடையாய் அதை ஏந்திக்கொள்ள
நான் என் ஆவல் மணல்களோடு அமர்கிறேன்


தங்கரதமே தமிழ்ச் சங்கமணமே
சிங்கநடையே குளிர்த் திங்களகமே
சங்குநயமே புதுச் சந்தமொழியே
கங்குமலரே கவிக் கந்தவனமே


அன்புடன் வருக வருக
உங்கள் கவிதை அனுபவங்களால்
இந்தத் தமிழரங்க இதயங்கள்
நிறைக நிறைக

சிந்தனைச் செல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து


சிந்தனைச் செல்வரே சிந்தனைச் செல்வரே
செந்தமிழ்த் தேன்மலரே - உங்கள்
சிந்தனைப் பூக்களின் அற்புத வாசனை
சுத்துது தேசங்களை

சந்தமும் மயங்கச் சிந்துகள் பாடும்
சந்தனச் சங்கீதமே - உங்கள்
சுந்தர இசையில் சொக்கிடும் சொக்கிடும்
சோலையின் பூங்குயிலே

நெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்
நிறைந்தச் செல்வந்தரே - விண்ணை
மிஞ்சிடும் ஞாபகப் பேரொளி கண்களில்
மிதக்கும் வல்லவரே

தஞ்சமும் பெற்று வந்தஇந் நாட்டில்
தமிழாய் வாழ்பவரே - வந்து
கொஞ்சிடும் சொல்லை மேடைகள் தோறும்
கொடுக்கும் வான்மழையே

கண்டதும் கேட்டதும் கருத்தினை வென்றதும்
கருவென உருவாக - சிந்தை
கொண்டவர் மத்தியில் கூறி மகிழ்வதில்
குழந்தை மனதாக

வண்டுகள் தேனைத் தேடித் திரியும்
வெற்றி வெறியோடு - தகவல்
மண்டலம் புகுந்து மாமலை பெயர்க்கும்
மாவரம் பெற்றவரே

புரிந்தநல் அறமும் பொன்மனச் சுடரும்
பூமியில் வாழ்வளிக்கும் - உள்ளம்
திறந்தநல் வாழ்த்தினை அகவையில் சிறியவன்
திசைகளில் ஏற்றுகின்றேன்

அறிந்ததை அள்ளி அருந்தமிழ்க் கவியில்
அன்புடன் வழங்குகின்றேன் - என்றும்
அறிவினில் அன்பினில் குறைவிலா உங்களின்
ஆயுளை வேண்டுகின்றேன்

அறுபது வயதைப் போற்றுந் திருவிழா
அமர்க்களம் போடுதிங்கே - அகவை
அறுபது என்ன அறுபது மேலும்
அடைந்திட வாழ்த்துகின்றேன்

சிறப்புச் செழித்துச் சிறுகுறை கூட
சிதறித் தெறித்தோட - இன்பம்
பிறந்த இந்நாள் இன்னும் இனிதாய்ப்
பிறந்திட வாழ்த்துகின்றேன்

பல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி


பல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி அவர்கள் தலைவராய் இருந்த ஒரு கவியரங்கத்தில் கவிதைபாட என்னை அவர் அழைத்தார். நான் அவருக்கு ஒரு வாழ்த்துப்பா பாடினேன்.



பட்டு மிளிர்கின்ற
விழிமணி - உயிர்
தொட்டு அணைகின்ற
கவிமணி

இட்டு நிறைகின்ற
புகழ்மணி - பனி
கொட்டும் கனேடியத்
தமிழ்மணி

மெட்டுக் கவிபாடும்
குரல்மணி - நிறம்
சொட்டித் தாளேறும்
விரல்மணி

எட்டுத் திசைவெல்லும்
நவமணி - கலை
விட்டு விலகாத
தவமணி

அன்புடன் புகாரி

*

ஆரெஸ்மணி அவர்கள் என்னை அழைத்தது

மதவெறி அறியா நல்ல இதயம்
துடிக்கும் மார்பைக் கொண்ட மனிதர்
இறைவனை எதிலும் காணும் சித்தர்
தோன்றுவதெல்லாம் மறைவதனாலே
மாற்றம் ஒன்றே நிலையென்றுணர்ந்து
மாற்றமே இறையெனும் சிந்தனையாளர்

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி

புலம்பெயர்ந்த தமிழர் பெருமை


ஆழ்கடல் எறிந்தாலும்
அழகு
முத்தோடு வருவான்
தமிழன்

அந்த
ஆகாயம் எறிந்தாலும்
புதுக்
கோளோடு வருவான்
தமிழன்

வண்ண
வேல்விழி மாந்தரும்
வீணே
விளையாடிக் கிடப்பதில்லை

நல்ல
வாழ்வின் வழியறிந்தே
பெருகி
வாழ்வாங்கு வாழ்வர்

*

அல்லல்பட்டத் தமிழனிங்கு
ஆளவந்தாய்
ஆகாயம் எல்லையென
ஓங்கவந்தாய்

தொல்லைதந்த
அரக்கர்விழி பிதுங்கிச்சாக
தூரம்வந்தும்
இடியெனவே முழங்குகின்றாய்

நல்லநாளும்
தூரமில்லை கூறுகின்றேன்
நான்மட்டும் அல்ல
இந்த வையகமே

அல்லும்பகல்
உழைப்பினையே போற்று
அருகில்வரும்
வெற்றியொளிக் கீற்று

*

வேர்களுக்கு வாசமுண்டு
ஓரடிக்குள் வீசும்
விழுதுகளின் வாசனையோ
ஈரடிக்குள் வீசும்

நார்மாவின் வாசனையோ
மூன்றடிக்குள் வீசும்
நல்லமலர் வாசனையோ
நாலடிக்குள் வீசும்

பார்புகழ வீசுதைய்யா
தமிழர்தம் வாசம்
பன்மடங்கு வளரவேண்டும்
மேலும் மென்மேலும்

ஊர்பெயர்ந்து
உயிர்த் தமிழின்
தேரிழுக்கும் தமிழா
உயரட்டும் உயரட்டும்
தமிழினம் உலகெங்கும்

முத்தமிழ் வளர
எத்திசை பெயர்ந்தும்
முத்திரை பதிக்கும்
வித்தகத் தமிழா
என்றென்றும் உயர்ந்துயர்ந்து
வாழ்க வாழ்க பல்லாண்டு

கவியரங்க அவை வணக்கம்


சந்தவசந்தம் குழுமத்தில் நான் ஒரு கவியரங்கக் கவிதை பாடும்முன் நான் தந்த அவை வணக்கங்கள் இரண்டு


வைய அவைக்குயென் வணக்கம் - நான்
பையப் பழகிவரும் கவிஞன்
மெய்யும் பொய்யுமே கவிதை - அதைச்
செய்யக் கிடைத்ததே பெருமை

சந்த வசந்தமென் சொந்தம் - மனம்
உந்த உயிர்க்கவிப் பந்தம்
இந்த வானமே போதும் - இனி
எந்த மேகமும் பொழியும்

*

விற்பனர்க்கும் அற்புதமாய்
விண்நிறைந்த கற்பகமாய்
உயிர்பெருக்கும் தமிழுக்கென்
முதல் வணக்கம்

சொற்குவித்துப் பொன்முகட்டில்
கவிக்கொடிகள் பறக்கவிடும்
கவியரங்கத் தலைவர்க்கென்
தனி வணக்கம்

சுற்றமெனச் சூழ்ந்துகொண்டு
சந்தவிரல் கைகுலுக்கும்
வயதேறா வசந்தங்களே
அவை வணக்கம்

5. அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை


பெற்றோர் காத்தும்
பெற்ற பிள்ளைகளைப் பேணியும்
கரம் பற்றியவள் மகிழ என்றும்
உற்ற துணை நிற்பவன்
குடும்பத்தன்

வயிற்றில்
பசியோடு வாடுவோர்க்கும்
வாழ்வில்
பிடிப்பற்று விழுந்தோர்க்கும்
யாருமற்ற
பிணமாகக் கிடப்போர்க்கும்
பெருந்துணையாக நிற்பவன்
குடும்பத்தன்

மூதாதையர் பெருமை
மனத்தால்
மேலானவர் தொண்டு
வீடுவந்த
விருந்தினர் உபசரிப்பு
சுற்றியுள்ள
சுற்றங்களின் நலன்
தன்னோடு
வாழ்வோரின் வாழ்வென்ற
ஐவகையினரையும்
அன்போடு காப்பவன்
குடும்பத்தன்

பொருள் தேடும் முயற்சிகளில்
பழிபாவத்திற்கு அஞ்சுவதும்
ஈட்டிய பொருளை
இல்லாதவனுக்கும் பகிர்ந்தளிப்பதும்
நெறிகள் நிறைந்த
நேர்மை வாழ்வாகும்

நெஞ்சமெங்கும்
அன்புமலர் பூப்பதும்
செயல்கள் யாவிலும்
நீதிநெறி காப்பதும்
குடும்ப வாழ்வின்
சிறந்த பண்புகள்
குறையாது
நிறையும் பயன்கள்

நீதிநெறி போற்றி என்றும்
குடும்ப வாழ்வில் சிரிப்பதே
இன்பம் இன்பம்
துறவியாகித் தொலைந்து போவதில்
வருவதெல்லாம் துன்பம் துன்பம்

இயற்கையின் இயல்பு வழியில்
இனியநல் குடும்ப வாழ்வை
இன்பமாய் வாழ்பவனே
துறவு, பிரமச்சரியம் என்று
வேற்று வழி போற்றிப்
பின்பற்ற முனைபவனைவிட
பன்மடங்கு மேலானவன்

நீதிநெறி போற்றி வாழும்
குடும்ப வாழ்வைத் தானும் வாழ்ந்து
தன்னோடு பிறரையும்
வாழ்ச் செய்பவனின் வாழ்வானது
தவம் செய்து வாழ்பவனின்
துறவு வாழ்வை விட
பன்மடங்கு உயர்ந்தது

நீதிநெறி என்பதும்
நல்ல குடும்ப வாழ்க்கை
என்பதும் ஒன்றேதான்
அத்தனைச் சிறப்புடைய
குடும்ப வாழ்வில்
பிறரின் பழிச்சொல்லும்
பெற்றிடாமல் வாழ்வதோ
சிறப்பின் உச்சம்தான்

இந்த மண்ணுலகில்
வாழும் நெறி காத்து
நல்ல குடும்ப வாழ்வில்
நிலைபெற்று வாழ்பவன்
அந்த விண்ணுலக மேலோர்க்கு
இணையாகப் போற்றப்படுவான்


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்


2005ல் கனடாவின் டொரோண்டோ மாநகரில் 'புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்' என்ற தலைப்பில் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்களைத் தலைவராய்க்கொண்டு ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டு வாசித்த கவிதை இது. இந்தத் தலைப்புக்காக நான் புதிதாக ஏதும் கவிதை எழுதவில்லை, இதன் முதல் பாடலை மட்டும் சிரமப்பட்டு எழுதினேன் :) மற்றவையெல்லாம் நான் முன்பே நம் தமிழன்னைக்காக எழுதியவைதாம்.


புதுமைக் கவிப்புலத்தில் பொன்மகுடம் சூடும்
மதுகைக்கப் பாவடிக்கும் மாட்சி - எதுகைக்கே
ஏங்காக் கவிஏறு ஓங்கு புகாரி!பாப்
பூங்காவந் தேபாடும் பூத்து!



என்று வெண்பா மாலை சூடி என்னை வரவேற்றார் தலைவர் பெருங்கவிக்கோ. நான் மேடைக்கு வந்தேன். வந்தவன் ஏதும் சொல்லாமல் அவையைச் சில நொடிகள் மௌனத்தில் இருக்க வைத்துவிட்டு பின் உரத்த குரலில் இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினேன். அப்படியே அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள் டொராண்டோ தமிழர்கள். என்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாத அந்தப் பாடலை நான் பாடினேன்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்க்கு என் வாழ்த்து

டாமில் வால்க டாமில் வால்க
டாமில் வால்கவே
டாமில் பேசும் டாமில்ஸ் எல்லாம்
ஃபைனாய் வால்கவே

கமான் பீபுள் கமான் பீபுள்
கமான் கமான்யா
கேசட் போட்டு பாய்ஸ் பாத்து
கமான் கமான்யா

டோண்ட் கிரை மம்மி டோண்ட் கிரை மம்மி
நோ நோ டாமில் மம்மி
டாமில் வலத்து சீயென் டவரில்
இடுவோம் டாமில் மம்மி

வாக்கிங் போனா டாக்கிங் உண்டு
டாக்கிங் ஃபுல்லா
டாமில் பேசி டாமில் பேசி
விவில் சேவ்யூ டாமில் மம்மி


இப்படித்தான் தமிழ் காக்கப்போகிறோமா? புலம்பெயர் தமிழ்த்தாய் இதைத்தான் புரிந்துகொள்கிறாளா? புலம்பெயர்ந்தாலும் தாய் தாய்தான். ஆனால் இன்று தமிழ் அறியாதவன்தான் தமிழன் என்று ஆகிவிட்டான். அவனுக்குத் தமிழின் பெருமையைக் கொஞ்சம் நான் கூறத்தான் வேண்டும்.



தமிழைப் பிறந்த மண்ணில் மறந்தாலும் புகுந்த மண்ணில் முத்தமிட்டுக் காப்பது இன்று இணையம்தான் என்று உறுதியாகச் சொல்வேன்.....


இணையம்
தமிழ் வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கம்

இன்றைய தெருக்களில்
குப்பைத் தொட்டியில்
எறியப்பட்ட
தொப்புள் கொடி உலராத
அனாதைக் குழந்தையாய்த்
தமிழ்

அதன் கைகளில்
சில்லறையே விழாத
பிச்சைப் பாத்திரம்

ஆங்கிலக்
குட்டைப் பாவாடையை
அங்கும் இங்கும்
கிழித்துக் கட்டிக்கொண்டு
தமிழரின் தனிமைச்
சந்திப்புகளிலும்
நாவழுக்கும்
அந்நியச் சொல்லாட்டங்கள்

சோத்துக்காகப்
போடப்படும் இந்தத்
தெருக்கூத்துத் தாளம்
இந்த நூற்றாண்டிலும்
நீடிக்கும் தமிழ் அவலம்

இந்நிலையில்தான்
கணித்தமிழ் என்னும்
புதுத்தமிழ்
இணையத்தில் எழுந்த
ஓர் இனிப்புப் புயல்

ஆலமரத்தடி அரசமரத்தடி,
தேனீர்க்கடை ஆத்துப் பாலம்
எல்லாம் அந்தக்
கிராமத்துக்கு மட்டுமே மேடை

ஆனால்
இணையம் என்பதோ
உலகின் ஒற்றை மகா
மின்மரம்

தமிழோடும்
நல்ல தமிழர்களோடும்
புது உறவோடு
இணையவைத்தக்
கணினிக்கும் இணையத்திற்கும்
என் உயிர் முத்தங்கள்




3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா?

லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்



எனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.

எழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலேயே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.

எல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழ விடவில்லை.

தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை.

எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு.

கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது.

வாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்?


கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களின் சந்தவசந்தம் குழுமம் எனக்கொரு பாடசாலை. என் சந்தக் கவிதைப் பறவைகளுக்கொரு வேடந்தாங்கல். அங்கே பல கவியரங்களில் நான் பங்கெடுத்து இயன்றதைச் செய்திருக்கிறேன். இனிப்பாக நாட்களைச் சுவைத்திருக்கிறேன். ஒருமுறை ஒரு கவிதைப் பட்டிமன்றம் ஏற்பாடானது. அதைப் பட்டிமண்டபம் என்றழைப்பதே சரியென்று இலந்தையார் கூறி தொடங்கி வைத்தார். பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பின் கீழ் கவிதை பாடவேண்டும்.

பட்டிமண்டபம் தலைப்பு:

வாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்?
1. நல்ல நண்பர்கள்
2. உழைப்பு
3. அனுபவம்
4. அறிவு
5. முகஸ்துதி
6. பிறர் உதவி
7. நெஞ்சுறுதி
8. தன்னம்பிக்கை
9. விடாமுயற்சி
10. எதையும் தாங்கும் இதயம்

தலைவர்: ராஜரங்கன், சென்னை
(என் இதயம் கவர்ந்த இவர் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி)

எனக்குத் தரப்பட்ட தலைப்பு: எதையும் தாங்கும் இதயம்


தலைவரின் அழைப்புக் கவிதை:

புஹாரி ஒரு புதிர்.

மின்னலைச் சிக்கெடுத்து
மெலிதாக அணி செய்து
மின்னாளின் இடுப்பினிலே
மேகலையாய்ச் சூடுகின்றார்.

விரலெடுத்தால் காதலியின்
விதவிதமாம் சுவைகளெலாம்
விவரித்து எழுதுகிறார்
விந்தைகளைச் சொல்லுகிறார்.

வானவில்லை இழுத்து
வண்ணப் புடைவை நெய்து
தேன் உடலாள் சிலிர்க்கத்
துகிலாகப் போர்த்துகிறார்

ஆயிரம் காதற் கவிகளிலே ஓரிரண்டு
ஆன்மீகச் சிந்தனையை அழகாய்ப் பதிக்கின்றார்.
தோயுநெய்ப் பேடாவில் முந்திரி பதிப்பதுபோல்!
தேனீக்கள்கூட்டத்தில் ராணி ஈ வைப்பது போல்!

எதையும் தாங்கும் முதுகு பலர்க்குண்டு
எதையும் தாங்கும் இதயம்தான் அரிதாகும்.
எதையெடுத்துக் கொடுத்தாலும் எளிதாக எழுதுகிற
புதிரான புஹாரியே! எடுத்துவிடும் உம் சரக்கை!

ராஜரங்கன்


என் கவிதை:

சந்த வசந்தப் பந்தலில்
சந்தனக் கிண்ணம் ஏந்திய
அன்புத் தலைவர் ராசரங்கருக்கும்

சுற்றிச் சுழலும் கற்றோர்க்கும்
நற்றமிழ்க் கவிதைக் குமரிக்கும்
அவளெழில் அள்ளி வழங்கும்
பொற்சொல் தமிழன்னைக்கும்

சுகந்த சந்தனம் அள்ளிப் பூசிய
குளுமை குறையா நெஞ்சுடன்
வாசம் வீசும் என் வணக்கம்

0

ஏனிப்படி...
எனக்குமட்டும் இப்படியோர்
அற்புதத் தலைப்பு?

ஆட்டங்கொண்ட தலைப்புகளின்
ஓட்டை உடைசல்களை
தட்டித் தட்டிச் சுட்டிக்காட்டி
பேரீச்சம் பழக்காரனிடம் வீசியெறிய
மனம்வரவில்லைதான் - என்றாலும்
அதுதானே இக்களத் தர்மம் -
வஞ்சகர் ராசரங்கரடா....(கர்ணா...)!

0

நல்ல நண்பர்கள் என்பது
கற்பனையின் உச்சம் - வாழும்
காலம் தராத கனவு முத்தம்

உழைப்பென்பதோ
தேகநலத்தின் பிள்ளை
அள்ளியணைக்கும் ஆவலோடு
ஓடித்திரிந்தாலும் - கைக்கெட்டாமல்
கண்ணாமூச்சு ஆடும் அதிர்ஷ்டம்
பொற்கலை விரல்களால்
புழுதிக் கணக்கெழுத நேரும்
அவலச் சுவடு

அனுபவம் எப்போதும்
நிகழ்த்திய தவறைச்
சுட்டிக்காட்டும் வெட்டி விரல்கள்
முற்றும் முடிந்துபோனபின்
மூலையில் உட்கார்ந்து
அச்சச்சோ என்று
உச்சுக்கொட்டவைக்கும்
குற்றப் பத்திரிகை

அறிவென்பதோ
அரைகுறைச் சொத்து
அகங்கார ஆட்டம்போடும்
ஏட்டுச் சுரைக்காய்
இதய நிறுத்தங்களால்
நிராகரிக்கப்படும் பேருந்து

முகஸ்துதி என்பது
வஞ்ச வார்த்தை லஞ்சம்
மனித இனத்தின்
மகா வெட்கக்கேடு

பிறர் உதவி என்பதோ
பிச்சைதானே உண்மையில்
இந்த யாசகப் பாத்திரமும்
ஒட்டடைகளால் நிரம்பிக்கிடப்பதே
இந்நாள் நடைமுறையன்றோ

நெஞ்சுறுதி என்றால் என்ன
பலகீன இதயத்தில்
உதிக்கும் சூரியனா?

தன்னம்பிக்கை எப்போது
பூத்துக்குலுங்கும்
நடுங்கும் இதயத்தின்
ஒப்பாரி கேட்டா?

விடாமுயற்சி என்போது
விண்ணளக்கும்
ஒளிந்தோடும் இதயத்தின்
முக்கல் முனகல்களிலா?

அடடா... இப்போது
விடை மிகவும் சுலபமாயிற்றே
வெற்றி எனக்கும் நிச்சயமாயிற்றே!

ஆமாம் ஆமாம் பட்டிமன்றமே
உனக்கும் எனக்கும் இப்போது
பட்டென்று விடை சொல்வது
சுலபம் சுலபம் மிகமிகச் சுலபம்!

0

தீண்டும் தீண்டும் துயரம் - தினம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம் - அது
எதையும் தாங்கும் இதயம்

0

வெந்துபோன சோற்றுக்குள்
வேகாத அரிசிகளாய்
விடைதேடி விடைதேடி
விடைகாணா மயக்கமா?

தெரிந்தவோர் விடைகூட
பச்சோந்தித் தோல்போல
நேற்றுவோர் முகமாகி
இன்றுவோர் நிறமானதா?

தேய்கிறதா மணித்தோழா
துயிலாத உயிர்க்குஞ்சு
விலகாத கதவின்முன்
விரல்கூட்டித் தினந்தட்டி?

நண்பர்களே பகைவரெனில்
பகைவர்தாம் நண்பர்களோ
இருட்டுகளின் தத்துவங்கள்
உறக்கத்தை மேய்கிறதா?

ஒளிந்திருக்கும் இருட்காட்டில்
விகாரத்தின் எச்சங்கள்
உனக்குள்ளும் நஞ்சென்ற
நிசங்காட்டிச் சுடுகிறதா?

நிசமென்று வந்ததெலாம்
நிழல்தானோ முழுப்பொய்யோ
தொப்புள்கொடி அறுத்தெறிந்த
அப்பொழுதே தாய்பொய்யோ?

காலத்தின் சுழற்சிகளில்
அனுபவத்தின் ஆய்வுகளில்
கண்டஞானக் கீற்றின்முன்
நீயுந்தான் ஓர்பொய்யோ?

அய்யய்யோ நடுக்கங்கள்
அசராத தண்டனைகள்
இடுகாட்டுத் தீப்பொறியாய்த்
தளிருயிரைத் தீய்க்கிறதா?


துயர்வேண்டாம் உயிர்த்தோழா
தீய்க்கட்டும் தீருமட்டும்
தெரிந்துகொள் புரிந்துகொள்
தெளிவாய்ஓர் பேரூண்மை!

இன்றுதான்உன் வாழ்வமுதின்
இனிப்பான சுகப்பயணம்
உண்மையான பொற்தளத்தில்
உயிர்ச்சுவடு பதிக்கிறது!

முட்டையிருள் ஓடுடைக்கக்
குட்டிகளும் அழுமோடா
முட்டியதை உடைத்தெறிந்து
முளைவிட்டு வெளியில்வா!

சத்தியங்கள் அனைத்தும்நீ
சந்தித்துத் தெளியாமல்
வாழ்வென்னும் வெண்குதிரை
விவரமுடன் ஓடுமோடா!

துயரங்கள் பெருக்கெடுக்க
துக்கத்தின் கணக்கெடுத்தாய்
இன்பங்கள் வேண்டுமெனில்
இருபுறமும் அலசிப்பார்!

வரவுகளும் செலவுகளும்
வாழ்வென்னும் நியதியடா
வரப்போகும் இன்பமினி
வந்தவற்றை விஞ்சுமடா!

செலவுகளில் சிதையாமல்
சொர்க்கவழி தினந்தேடு
வரவுகளை எதிர்நோக்கி
வலுவாக நீச்சலிடு!

ஓடுடைத்து இம்முறைநீ
உனக்காகப் பிறக்கின்றாய்
வீரனாகப் பிறக்கின்றாய்
விழவில்லை மரணத்துள்!

0

தீண்டும் தீண்டும் துயரம் - தினம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம் - அது
எதையும் தாங்கும் இதயம்

மனித இனம்


அறைந்த
கன்னத்துக்கு
அடுத்த கன்னத்தைக்
காட்டினாலும்
அதிலும் அறையும்
ஒரே உயிரினம்
மனித இனம்

இப்படி
அவநம்பிக்கைக்
கவிதை எழுத வேண்டுமா
என்று அழுகிறது இதயம்

இல்லை
இதை வாசிக்கும் நெஞ்சம்
யோசிக்கும் என்று
சமாதானம் சொல்கிறது
நேர்மறை அறிவு

ஓடிவரும் கன்றுதான் உறவு


ரத்தத்தில்
பிணைக்கப்பட்டதென்றாலும்
தொப்புள் கொடி
அறுந்தால்தான்
குழந்தை
உயிர் வாழும்

உயிர்கரைத்து
வளர்த்தெடுத்தாலும்
பெற்றோர் பந்தம்
தளர்ந்தால்தான்
பிள்ளை வாழ்வு
சிறக்கும்

கயிறவிழ்ந்த பின்னர்
சுற்றித்
திரிந்துவிட்டு
ஓடிவரும் கன்றுதான்
உறவு

எழுது இளையவனே எழுது


உள்ளதை உள்ளத்தை
உளறுவது கவிதை

மன்னன் நடந்தால்தான்
நடையென்றில்லை

மழலை நடந்தாலும்
அது நடைதான்

எழுது இளையவனே
எழுது

நீ உன்
கவிதையை
நிதானமாய் நிம்மதியாய்
எழுது

விமரிசனம்
உனக்கான பாதை
தடுப்பு அல்ல

பாராட்டு
உனக்கான நிதானம்
ஓட்டம் அல்ல

எழுது இளையவனே
எழுது

இன்னாட்டு இளவரசர்கள்


எந்தக் கிரீடமும்
நமக்குச் சூட்டப்படவில்லைதான்
அதற்காக முட்கிரீடங்களையா
நாம் சூடிக் கொள்வது

நெஞ்சத்தின்
அழிக்க மாட்டா ஆசைகளுக்கு
வடிகால்களென எண்ணி
கற்பனைக் குதிரைகளைக்
கஞ்சாப் புகையால் தட்டிவிட்டுக்
கல்லறை வீதிகளிலா பவனி வருவது

கல் தடுக்கலுக்கெல்லாம்
கல்லூரிக் கதவுகளுக்குத்
தாலாட்டுப் பாடிவிட்டு
பொது உடைமைகளில்
நம் ஆத்திரங்களைக் கக்கி
நாசமாக்குவதா நமக்கு வீரம்

சிகரெட்டுப் புகையால்
தற்காலிக மேகங்களெழுப்பி
ஜாக்கி ராணி ராஜாக்களைத்
தோகைகளாக்கிக்
கால முத்துக்கள் கணக்கின்றி அழிய
இதய மயிலைக் காபரே ஆடச் செய்வதா
நம் முழுநேரப்பொழுது போக்கு

குட்டிச் சுவர்களுக்குப் பக்கத்தில்
குட்டிச் சுவர்களாய்
முக முக்காடுகளுக்குள் புகுந்து
புட்டிகளைப் பொசுக்கெனக் கவிழ்த்து
நடு வீதிகளில் நாணம் துறந்து
தலை கவிழும் சுதந்திரமா
நாம் பெற வேண்டும்

என்னருமை இளவரசர்களே
உங்கள் வெள்ளை ரோஜாக்களில்
சேற்றுக் கறைபடிவதை
அறிவு முட்களால் தடுக்கவேண்டாமா
வாலிபம் இப்படியா கெடுவது

தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
உலகை அழிக்க வேண்டாம்
உருவாக்குவோம் வாருங்கள்

நிழலோடு நிழலாய்


நிழலைத் தேடி
ஓடும் ஓட்டம்
இருளில் நின்று
தேம்பியே விம்மும்

பகலில் நிழலும்
தெளிவாய்த் தோன்றும்
இரவில் தேட
உயிரே நடுங்கும்

கனவின் காலில்
விலங்குகள் இல்லை
நினைவின் முதுகில்
சுமைகளும் இல்லை

நிஜத்தை நினைத்து
நிம்மதி இல்லை
விலகிப் போக
விருப்பமும் இல்லை
புத்தாண்டே புத்தாண்டே

வளர வளர
நாங்களெல்லாம்
பழையவர்கள்

நீ மட்டும் எப்படி
புதியவள்?

புது நரையாய்
மூப்பு
வலுக்கட்டாயமானாலும்

இன்று
புதிதாய்ப் பிறந்தேன்
என்று
உன்னோடு நானும்
கை குலுக்கும்போது

உன்னைக் குதூகலமாய்க்
கொண்டாடுகிறேன்

நீ
புத்தாண்டேதான்
நான்
புதுப்பிறப்பேதான்

துளிர்ப்
புத்தாண்டின்
தளிர்
வாழ்த்துக்கள்

புதிய சொர்க்கம்


எண்ணங்களை
வானத்தில்
முடிச்சுப் போடு
அந்த மேகத்தையேனும்
தொட்டுவிடலாம்

உடலை
உழைப்பில்
வருத்தி வை
நல்ல நித்திரையையாவது
பரிசாகப் பெறலாம்

கைகளைக்
கொடுக்கப்
பழக்கிச் செல்
நிம்மதிச் செல்வம்
வாசல்வரக் காணலாம்

மனதைக்
காலடியில்
கட்டி வை
பழைய நரகங்களை
விற்றுவிட்டு
புதிய சொர்க்கம்
வாங்கிவிடலாம்

எனக்கொரு பயம்


பொருளாதாரப் புண்கள்
நெஞ்சில் புரையோடிவிட்டன

அன்பு பாசம் நேர்மை
என்பனவெல்லாம்
படுபயங்கரமாய் நொறுக்கப்படுவது
இந்தப் பொருளாதாரச்
சுத்தியலால்தான்

எதுவும் பறிபோகும் பொல்லா உலகில்
எப்படியேனும் வாழவேண்டும்
என்பதே இதயங்களின்
ரகசிய விருப்பாகிவிட்டது

ஒற்றைக் காலில் நின்று
தன் தசையையே
கொதிக்கும் கண்ணீராய்
உகுத்து உகுத்து
மரித்துக் கொண்டிருந்தாலும்
மனிதர்களுக்கு
மெழுகுவர்த்தியிடமிருந்து
கண்டிப்பாய் வெளிச்சப் பலன்
வந்துதானே தீரவேண்டும்

தன்னைப் பிழிந்து வரும்
இரத்தத்திற்கே
மனிதர்கள்
தாபப்படுகிறார்களென்றால்
எந்த இதயம்தான்
பொறுத்துக்கொள்ளும்

எங்கு நோக்கினாலும் மனிதர்கள்
அகலத் திறந்த வாயுடன்தான்
அலைகிறார்கள்

அடுத்தவனை எப்போது
அடித்து விழுங்கலாமென்றே
ராஜ திராவகமாய்க் கொதிக்கிறார்கள்

இப்பொழுதெல்லாம்
எனக்கொரு பயம் பிறக்கிறது

எங்கே
என்னுடைய கைகளே
என் மூக்கிற்கு வரவேண்டிய
மூச்சுக் காற்றைத் திருடிக் கொண்டு
உயிருக்கு உலைவைத்து விடுமோ
என்று
*****32

வேணுமுங்க ஒங்கதொணை

#தமிழ்முஸ்லிம்


கிராமத்தின் நதிக் கரைகளில் ஓடிவிளையாடிய கோடி வர்ண வானவில் அவள். ஏழ்மையின் தாழ்வாரங்களில் பிறந்தாலும், ஒரு மச்ச அழுக்கும் தொற்றிப் பிறக்காத பேரழகுப் பெட்டகம். அவளின் ஓடிய கால்களை நிறுத்தி ஆடிய கரங்களைப் பற்றி இழுத்துவந்து மணமேடையில் ஒரு குங்குமப் பொட்டாய்க் குந்த வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.

முப்பதே நாட்கள், முத்தமும் மூச்சுக்காற்றுமாய் இருந்துவிட்டு காசுதேடி கண்ணீரோடு கடல் கடந்தான் அவன். மாதம் ஒன்றுதான் ஆனது என்றாலும், அந்தக் கற்பூரக் காதலுறவு அவளுக்குள் ஒரு புத்துயிருக்கு முன்னுரை எழுதி விட்டது.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற அறிவுரைக்குப் பின் எத்தனையெத்தனை சோகங்கள் கிடக்கின்றன என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அதில் ஒரு சிறு பகுதிதான் இந்தக் கவிதை, அந்தச் சூல்முகில் எழுதும் மடலாக கிராமத்து மொழியிலேயேமலர்கிறது.


காசு பணஞ் சேத்துவரக்
கடல் கடந்த மச்சானே
ஊசி மொனை மேல நின்னு
ஒங்க வுசுருத் துடிக்குதுங்க

பேசி நீங்க வச்சப்படி
பெசகாம வந்துருங்க
காசு கொஞ்சம் போதுமுங்க
காலடிதான் எனக்கு வேணும்

காலையில எழுந்திருச்சா
கண் மூடப் பாய் விரிச்சா
மாலையிட்ட ஒங்க மொகம்
மனச வந்து உசுப்புதுங்க

சேல மாத்தக் கசக்குதுங்க
சீவி முடிக்க நோவுதுங்க
வேல முடிஞ்சக் கையோட
விம்மியழுவத் தோனுதுங்க

ஆச வச்சேன் ஒங்கமேல
அதுக்கெனவே அலங்கரிச்சேன்
நேசமுள்ள ஒங்களோட
நெனப்புல நான் பூப்படைஞ்சேன்

பாசமுள்ள எந்தகப்பன்
பரிசத்தையும் போட்டாங்க
காசுபணம் பாக்காமக்
கல்யாணமும் ஆயிருச்சு

ஆனப்புறம் முப்பதுநாள்
அருகிலயே இருந்தீங்க
தேனப்போல எனையள்ளித்
தெவிட்டாமக் குடிச்சீங்க

மானைப்போல துள்ளிநானும்
மருதாணையாச் செவந்தேங்க
ஏனுன்னே தெரியாம
எதுக்கெதுக்கோ சிரிச்சேங்க

ஊரு நம்மப் பாத்ததுமே
ஓமலிப்பு வச்சதுங்க
தேருபோல நீங்கவரத்
தெருக்கண்ணே பட்டதுங்க

காருகாரா மாறியேறிக்
காட்டினீங்க ஊரெல்லாம்
சோறுதண்ணித் தேடாமச்
சொகத்துலநான் மெதந்தேங்க

ஊரொலகம் நம்மப்போல
உசுருசுரா இருக்குமான்னு
நூறுமொறக் கேட்டிருப்பேன்
நொரையலையா பூத்திருப்பேன்

யாருசெஞ்ச புண்ணியமோ
எனக்குநீங்க கெடச்சீங்க
வேருபோல நாயிருந்து
வெளங்கவெப்பேங் குடும்பத்தை

சேதியொன்னு நாஞ்சொன்னாச்
சின்னமீனாத் துள்ளுவீங்க
சேதிசொல்ல வாயெடுத்தா
சிலுக்குதுங்க எம்மனசு

பாதி ஒலகம் பாத்தநம்மை
மீதி கூடத் தேடிவருது
தேதி தள்ளிப் போயிருச்சி
தெரியுதாங்க என்னன்னு

தேதி தள்ளிப் போனதாலத்
தேட்டமாகிப் போனதுங்க
பாதி உசுரு நீங்கதானே
பக்கத்துல காணலியே

சாதிசனம் இருந்தாலும்
சமம்வருமா உங்களுக்கு
வேதனையா இருக்குதுங்க
வேணுமுங்க ஒங்கதொணை
***31

தீயினில் தளிராய் வாடுகிறேன்
தினமென்னை நானே தேடுகிறேன்
ஆயிரம் கூறியும் கேட்பதில்லை
ஆசைகள் அறிவிடம் தோற்பதில்லை

பாயினில் பருவம் தூங்குதில்லை
பனிபட்டும் தகிப்பு நீங்குதில்லை
நோயெனில் நூதன நோயானேன்
நீள்விழிப் பூவே நீயறிவாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

கைகளைக் கட்டிப்போட போதிக்காதீர்


எக்கணமும் எவர்முன்னும்
கோபமாய்க் கொப்பளிக்க
விருப்பற்றவனே
நான்

சத்தியம் மொழிவதாயின்
கோபத்தைக்
காலைக்கடன் முடிப்பதற்கும்
முன்னதாகவே
ஓர்
அதிகாலைக்கடனாய்
அகற்றிவிடலாமென்றுதான்
ஆசைப்படுகிறேன்

எனினும்
அறுத்தெறியப் படவேண்டிய
சாக்கடை நாக்குகள்
புனிதத் தருணங்களிலுங்கூட
அளவுக்குமிஞ்சி
அலட்டிக் கொள்ளும்போது
என்னை
என் ஆசனத்திலேயே
நிரந்தரப் படுத்திக் கொள்ள
இயலுவதில்லை

அறையப் படாத அடுத்த கன்னமும்
அகப்படாதாவென
எச்சிலூறிக் காத்திருக்கும்
எச்சங்களே
மனிதமன மிச்சங்களாகும்போது

அந்த ஏசுபிரான்
திருப்போதனையின்
வழிநடக்கத்
தெம்பற்றே போகிறேன்

திராவகமே
தேகக் குருதியாகிப்போன
கொடூரர்களிடமும்
புத்தபிரானின் பொன்மொழி கேட்டுக்
குசலம் விசாரித்துக் கொஞ்சிப்பேச
என் பிஞ்சுமனம்
மறுதலிக்கவே செய்கிறது

தயைகூர்ந்து
இங்கே எவரும் என்னை
இடைமறிக்காதீர்

என்
கைகளைக் கட்டிப் போட
போதிக்காதீர்

அழுகுரலில் ஆனந்திக்கும்
அரக்கர்களின் எலும்பொடிக்க
அவ்வப்போது
ஒரு சராசரி மனிதனாகவே
என்னைச்
சஞ்சரிக்க விட்டுவிடுங்கள்

நீதி கேட்டு ஓர் அநீதி


ஒரு பெண் சிசுவைக் கொல்ல
தாயெனும் பெண்
நாத்தனாரெனும் பெண்
மாமியாரெனும் பெண்
மருத்துவச்சியெனும் பெண்

அடடா
தங்களைத் தாங்களே
அழித்துக்கொள்ள
எப்படித் துணிந்தார்கள்
ஏன் இந்தத் தற்கொலை

இரக்கத்தின் சிகரங்கள்
ஏன் தங்கள்மேல்
இரக்கம் காட்ட மறந்தன

பெண்ணுரிமைக்குப் போராடும்
அகிம்சைப் புரட்சியில்
தங்களையே
பலியிட்டிக் கொள்ளும்
அவலமோ இது