வெறும் கடமை தருவது வெறுமையான இயந்திர வாழ்க்கை.
ஒரு நகலெடுக்கும் (Photo Copy) இயந்திரம் தன் கடமையைச் செய்வதற்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்?
மனிதர்கள் ரோபாட்டுகள் அல்ல!
காதல் மிகச் சாதாரணமானவனைக்கூட சாதிக்கும் சக்தியாய உயர்த்தும்.
எதற்குமே லாயக்கற்றவனைக்கூட கடமை வீரனாக்குவது அவன் கொண்ட காதல்தான்.
வறுமையாலும், உறவுகள் கீறிவிடுவதாலும், தோல்விகளாலும் தற்கொலைகள் உண்டு.
காதலில் தற்கொலை செய்துகொள்பவர்கள் காதலித்துவிட்டோம் எனவே தற்கொலை செய்துகொள்கிறோம் என்று தற்கொலை செய்வதில்லை.
காதல் என்றால் என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டிகள் அவர்களை வாழவே விடாமல் முழு சக்தியையும் பயன்படுத்தி சாகடிப்பதால்தான் சாகிறார்கள்.
ஆனாலும் தற்கொலை கூடாது. அதற்குப்பதில் சாகும் வரை அவர்களை எதிர்த்துப் போராடலாம்.
காதல் என்றதும் முகம் சுழிப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாதவர்கள்.
ஏனெனில் இந்தப் பிரபஞ்சமே காதலில்தான் இயங்குகிறது. ஆகாயத்திலும் எல்லாமே ஈர்ப்புதான். அந்த ஈர்ப்புகள் அழிந்துவிட்டால் ஒன்றுமே இல்லை.
ஒரு வாழ்க்கை வெற்றிகரமாய் அமைவதற்கு காதலும் கடமையும் மிக முக்கியம்.
ஓர் உயிர் மண்ணில் வந்து விழுகிறது என்றால் அது காதலின் பரிசாகத்தான்.
கடமை என்பது காரியம் செய்வது. காதல் என்பது ஈடுபாடு கொள்வது. ஈடுபாடு இல்லாத காரியம் நரகத்துக்குச் சமம்.
ஊரில் செக்குமாடுகளை உருவாக்குவார்கள்.
வாழவேண்டிய காளைகளைக் காயடித்து, செக்கில் கட்டி நாளெல்லாம் அதை சுற்றிச் சுற்றி நடக்க வைத்து அதன் கடமையைச் செய்ய வைப்பார்கள்.
அதைவிட ஒரு உயிர் வதை இருக்க முடியுமா?
அதுதான் காதல் இல்லாமல் கடமையைச் செய்ய வைக்கும் கொடுமை.
காதல் வேண்டாம் கடமைதான் வேண்டும் என்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ வேண்டும். அன்னைத் தெரிசாவைப்போல் நேரடியாய் சேவைக்கு வந்துவிடவேண்டும். திருமணம் என்று செய்துகொண்டு தன் துணையிடம் காதல் காட்டாமல் துணையைக் கொடுமைப்படுத்தி சாகடிக்கக் கூடாது.
கடமை கடமை என்று சொல்லும்போது முதல் கடமையே தன் துணையைக் காதலிப்பதுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
அன்னை தெரிசா கூட தான் செய்யும் சேவையைக் காதலித்தார். உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் காதலித்தார். அவர் போன்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
எந்த ஒரு விசயத்துக்கும் முன்னுதாரணம் எடுக்க வேண்டும் என்றால் அதை பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்க வேண்டும்.
ஆறு கால்களோடு ஒரு ஆடு பிறந்திருக்கிறதே எனவே ஆட்டுக்கு ஆறு கால் என்று சொல்லக்கூடாது.
ஒருவன் சட்டைப்போடாமல் அலுவலகம் வருகிறான். கேட்டால் எங்கள் தேசப்பிதாவே சட்டை போடவில்லை என்று அவன் சொன்னால் அவன் பைத்தியக்காரன்.
காதலே வேண்டாம் கடமை மட்டும் போதும் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
ஆனால் காதல் வேண்டும் என்று சொல்லும் யாருமே காதல் மட்டும்தான் வேண்டும் கடமை வேண்டாம் என்று சொல்வதே இல்லை.
வாழ்க்கை என்பது இருவர் இணைவது என்பதிலிருந்துதான் உருவாகிறது. அந்த இருவரைக்கொண்டுதான் பின் பல்லாயிரம் உறவுகள், உரிமைகள், வாழ்க்கைகள்.
தாய் என்பவள் காதலின் காரணமாகத்தான் பிள்ளை பெற்றுக்கொள்கிறாள்.
ஒரு சாதாரண பெண்ணைத் தாயாய் உயர்த்துவதும் காதல்தான்.
எனக்குக் காதல் வேண்டாம், மருத்துவமனையில் போய் ஒரு ஊசி போட்டுக்கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்கிறேன். ஏனெனில் பிள்ளைகளுக்கு நான் என் கடமையைச் செய்ய விரும்புகிறேன். கணவனும் வேண்டாம் காதலும் வேண்டாம் என்று கூறும் பெண்கள் இருக்கலாம் தான். ஆனால் அவர்களைப் பெண்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?
முதலில் கடமை கடமை என்று பேசுபவர்கள் காதலை மிகவும் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
காதல் என்றால் ஏதோ கனவுலகில் மிதந்துகொண்டிருப்பதுபோலவும், வேறு எந்த வேலையுமே செய்யாமல் கடலோரங்களில் பாட்டுப்பாடிக்கொண்டு திரிவுபோலவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.
காதல் என்று ஒன்று வந்துவிட்டாலே பொறுப்புணர்ச்சிகள் அதிகமாக வந்துவிடும்.
ஒரு குடும்பத்தலைவன் தன் மனைவியைக் காதலிக்காவிட்டால், ஏன் நான் உழைத்துக்கொட்டணும் என்று கடமையைச் செய்யாமல் அப்படியே இமயமலையை நோக்கிப் போய்விடுவான். திரும்பி வரவே மாட்டான்.
பாசம் அன்பு நேசம் நட்பு என்பதெல்லாமே ஒரு வகையான காதல்கள்தான். உள்ளங்களுக்கு இடையில் உருவாகும் ஈடுபாடுதான் காதல்.
உனக்காக நான் எதையும் செய்வேன் என்று ஒரு பெண் ஏன் கூறப்போகிறாள்? அதைச் சொல்வதற்கான தேவை என்ன என்று பார்க்க வேண்டும். அவளுக்குப் பிடித்திருக்கிறது. இந்தப் பிடித்திருக்கிறது என்ற சமாச்சாரம்தான் காதல்.
ஈடுபாடு இல்லாமல் எதைத்தான் ஒருவரால் தொடர்ந்து செய்யமுடியும்?
வேக வைத்த கறியை அப்படியே உண்பதற்கும். ருசியோடு சமைத்து உண்பதற்கும் வித்தியாசமில்லையா? இரண்டிலும் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கத்தான் போகிறது. ஆனால் எதை ஒருவன் விரும்புவான்.
காதல் என்பது ருசியோடு பார்த்துப் பார்த்துச் சமைப்பதைப் போன்றது.
உடனே வம்படியாய், ஹோட்டலில் சரக்குமாஸ்டர் ருசியோடு சமைத்துத் தருகிறானே அது காதலா என்று கேட்கக் கூடாது. அந்த சரக்குமாஸ்டர் அங்கே தன் கடமையைச் செய்வதற்குப் பின்னால் சரக்குமாஸ்டரின் காதல் குடும்பம் இருக்கிறது.
காதல் என்பது அன்பு, பாசம், நேசம், நட்பு, உறவு, ஈர்ப்பு, பிடித்தம், விருப்பம், சுவாரசியம், கலை, இலக்கியம், நிம்மதி, பாதுகாத்தல், அக்கறை என்பவை போன்றவற்றால் ஆனது
கடமை என்பது சேவை, பொருள் ஈட்டுதல், செய்ய வேண்டுவன, கொடுக்க வேண்டியன என்பவற்றைச் செயல் படுத்துவ்து.
இந்த இரண்டும் சேர்ந்தால்தானே வாழ்க்கை.
இன்னொன்று காதல் என்றால் அது என்னவோ வாலிப்பப்பருவத்தில் குத்துப்பாட்டு போட்டு ஆடுவது என்பதுபோல் நினைத்திருக்கிறார்கள் சிலர்.
ஒரு தொண்ணூறு வயது தம்பதியருக்கு இடையில் இருக்கும் காதலைப் பார்க்க வேண்டும். அதை எல்லாம் அனுபவைக்க ஆயுள் வேண்டும். பார்க்கும் போதே பரவசப்படும் காதல் அது.
உங்களுக்குக் காதல் இல்லாவிட்டால் ஏன் இன்னொரு உயிரையும் கடமையே என்று கட்டிக்கொண்டு சாகும்வரை அவர்களையும் சாகடிக்க வேண்டும்?