ஈரச்சுவை

சந்த வசந்தம் என்ற இணைய குழுமத்தில் ஈரச்சுவை என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம். ஈரச்சுவை பற்றி சிந்தித்துச் சிந்தித்து நிறையவே எழுதினேன், பின் சிந்திக்காமலேயே இதயத்தால் இப்படி எழுதி முடித்தேன். சிந்தித்து எழுதியதைவிட சிந்திக்காமல் என் இயல்பில் எழுதிய இந்த வரிகள் எனக்கும் சரி என் நண்பர்களுக்கும் சரி பிடித்துப் போயின.. ஒரு கவியரங்கத்தில் சொல்நயம் கூட்டி அடுக்கடுக்காக எழுதுவதும் அதை உச்சக்குரலில் வாசிப்பதும் நேசிப்புக்குரியதுதான் மறுபதற்கில்லை. 

காதல்விழி ஓரச்சுவை
கையணைவில் சேரச்சுவை
கவிதைகளில் ஊறச்சுவை
கனிந்தசொல் வாரச்சுவை

கனவுகளில் ஏறச்சுவை
நினைவுகளைக் கீறச்சுவை
நெஞ்சுக்குள் பாரச்சுவை
நிம்மதிக்குள் மாறச்சுவை

வஞ்சகத்தைச் சீறச்சுவை
வெறுப்புமனம் தீரச்சுவை
உறவுகளில் தூரச்சுவை
உடைந்தமனம் தேறச்சுவை

மதமூடம் மீறச்சுவை
மனிதநேயம் வீரச்சுவை
இனியசொல் கூறச்சுவை
இதயந்தான் ஈரச்சுவை

5 comments:

சந்தர் said...

புகாரி பாடல் பாடச்சுவை

சாந்தி said...

சுவையோ சுவை.

பூங்குழலி said...

சொற்களோடு அழகாக விளையாடுகிறீர்கள் புகாரி

புன்னகையரசன் said...

ச்சோ சுவீட்

விஷ்ணு said...

நல்ல சுவை
உங்கள் கவிதைச் சுவை

விஷ்ணு ..