நீரெல்லாம் கங்கை


ஒரு நட்பை நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன். அது நட்புதானா? காதலில் மட்டும்தான் ஒருதலைக் காதலா? காதலில் மட்டும்தான் காதலன் காதலியை அல்லது காதலி காதலியை ஏமாற்றுவார்களா? இதெல்லாம் நட்பில் கிடையாதா?
உண்டு! உண்டு! உண்டு!
பலகாலம் நான் மட்டுமே நட்பாய் இருந்திருக்கிறேன் என் இனிய நண்பனிடம். அது தெரிய வந்தபோது மனம் ஏற்றுக்கொள்ளாமல் பலவருடம் அவன் முன் சென்று நின்றது. மூளைக்கு உடனே தெரிந்துவிடும். ஆனால் மனதுக்குத் தெரிய பல காலம் ஆகும்.
...
அப்படியான பலகாலம் கழிந்தபின்னும் இன்றும் ஞாபகத்தைக் கசியவிடும் மனதின் வெளிப்பாடுதான் இந்த இடுகை.
நான் முதன் முதலில் என் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து எழுதிய திருமண வாழ்த்துக் கவிதை இதுதான். இதுபோல் இன்னொன்றை நான் எழுதியதே இல்லை எவருக்கும்.
அப்போது நான் சவுதி அரேபியாவில் வாழ்கிறேன். எனக்குத் திருமணம் ஆக வில்லை. ஆனால் என் நண்பனின் திருமணத்திற்கு என்னால் நேரில் செல்ல இயலவில்லை. ஆனால் இந்த என் உயிர்க் கவிதையை அனுப்பி வைத்தேன். என் தம்பி அதை மணமேடையில் வாசித்ததாய்க் கூறினான்.


நீரெல்லாம் கங்கை
நிலமெல்லாம் காசி
நாரெல்லாம் பூக்கள்
நடையெல்லாம் நடனம்

தேரெல்லாம் மெல்லத்
தெருவெல்லாம் ஊர
வாராய்யென் தோழமையே
வற்றாத அன்பருவி


ஊராரைக் கேட்டேன்
உறவாரைக் கேட்டேன்
யாரென்றே அறியா
ஏனையரைக் கேட்டேன்

தேரென்ன இங்கே
தெருவென்ன வசந்தம்
ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று


மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து

ஊர்ந்து குவிந்த மக்கள்
உள்ளவனம் அசைய
சேர்ந்த ஒருகுரலில்
சொன்னமொழி தெரியுமா


வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்


தேர்ந்த குணமகனாம்
தெளிந்த விழிமகனாம்
பார்த்த கணமே நெஞ்சில்
படரும் இளையவனாம்

சேர்ந்து சிறக்கவோர்
சின்னமலர்க் கரத்தையின்று
கோர்த்து மகிழவந்த
கல்யாணத் திருநாளாம்


வேறென்ன வேண்டுமென்
விழியோரம் சுகமுத்து
நூறினில் ஒன்றல்ல
நூறுகோடியில் ஒன்றாகி

ஊற்றெனநல் சுகம்வளர
உதித்த இம்மணவாழ்வில்
ஏற்றிவிடு சுடரொன்று
எந்நாளும் ஒளிவீச

(நண்பர் சீனிவாசன் மணநாள் வாழ்த்து)

2 comments:

சீனா said...

ஒரத்தநாடில் - மண விழாவினை மகிழ்வுடன் ஊரே கொண்டாடும் காட்சி கண்ணில் தெரிகிறது

அழகான கவிதை அற்புதமான எளிய சொற்களைக் கொண்டே மகிழ்வினை விவரிக்கும் கவிதை

நன்று நன்று நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

பூங்குழலி said...

அருமை

//ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று//

அழகாக இருக்கிறது .ஊரே உயிர்ப்பூத்ததாக சொன்னது

//வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்//

அழகான வர்ணனை ...

அருமையான வாழ்த்து புகாரி