இறைவா உன்னைத் தொழுகின்றேன்


எனக்குள் நானே ஓடுகிறேன்
என்றன் இறைவனை எங்கும்
தேடுகிறேன்

வணங்கும் மௌன விழிவிரித்து
பொழுதும் வெறுமை வீதியில்
வாடுகிறேன்

விதிகள் போலே வீதிகளில்
இறையின் வழித்தடம் ஒன்றும்
கிடைக்கவில்லை

விதிகள்தாமே அவன்தேடி
என்னை விரட்டும் மின்னல்
பிரம்படிகள்

யாரோ எவரோ வந்தார்கள்
விரலை இங்கும் அங்கும்
சுழித்தார்கள்

ஆர்வம் பொங்க விழிகுவித்தேன்
கேள்வி ஆயிரமாயிரம்
கேட்டுவைத்தேன்

பேசும் எந்தன் பேச்செல்லாம்
அவனின் பாசச் செவியைச்
சேருமென்றார்

ஆசையில் ஓடித் தேடிவிட்டேன்
அவனை அருகினில் எங்கும்
காணவில்லை

அருகே எங்கும் நில்லாமல்
பேசும் அனைத்தும் கேட்கும்
ஒருவனெனில்

உருவம் என்பது இறைக்கில்லை
என்ற உண்மைக் கருத்தில்
பிழையில்லை

இங்கே இருந்து உரைப்பதையும்
உலகில் எங்கோ மூலையில்
கதைப்பதையும்

பங்கம் இன்றிக் கேட்பதனால்
அவனும் பரந்து விரிந்து
நிறைந்தவனே

அண்டம் போலப் பெருத்தவனால்
அதனுள் அடங்கிக் கிடக்க
வழியில்லை

அண்டம் என்பது வேறில்லை
அதுவே ஆண்டவனென்றால்
மறுப்பில்லை

உருவம் இல்லா இறையென்று
முன்னர் உணர்ந்த கருத்தில்
பொருளில்லை

உருவம் உண்டு இறைவனுக்கு
அதுதான் உருவம் கொண்ட
பிரபஞ்சம்

படைத்தவன் யாரெனும் கேள்வியுண்டு
இந்தப் பிரபஞ்சமெப்படித்
தோன்றியது

படைத்தவன் தனியே கிடையாது
படைத்த படைப்பும் அவனே
படைத்தவனே

தன்னைத் தானே படைத்திட்டான்
தனியே எதையும் எங்கும்
படைக்கவில்லை

தன்னைத் தானே படைத்ததனால்
அவனும் தனக்குள் பூரணம்
ஆகிவிட்டான்

தன்னைத் தானே தொழுதாலும்
மனிதன் தெய்வம் தேடித்
தொழுதாலும்

எண்ணச் சிறகால் மேலெழுந்தால்
செயல் இரண்டும் ஒன்றெனப்
புரிந்துவிடும்

தன்னைத் தானே தொழவேண்டி
எவரும் ஆலயம் தேடி
ஓடுவரோ

இந்தப் பிறப்பே பிழையென்று
அவனை இழிவாய்ப் பழித்துச்
சபிப்பாரோ

உன்னைப் போற்று உடல்போற்று
அனைத்து உயிர்கள் பொருள்கள்
மனம்போற்று

உன்னில் உயிரில் துகளெல்லாம்
இறைவன் ஒருவன் என்றே
போற்றுபோற்று

சரிகள் பிழைகள் பகுப்பில்லை
அவனுள் சுற்றும் யாவும்
தவறில்லை

திரியும் சுடரும் அவன்தானே
இந்த நினைவே தொழுகை
சரிதானே

Comments

இறைவனைப் புரிந்து கொள்ளும் சிறு முயற்சி. அருமையான தத்துவப் பாடல்.

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே