நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து


நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து

நயாகரா நீர்வீழ்ச்சியை
சொகுசு படகிலேறி
மிக அருகில் சென்று
கண்கள் விரிய விரிய
காதலோடு பார்த்ததுண்டா

இதுதாண்டா தண்ணீர்
என்பது போல்
அது
ஆக்ரோசமாக வீழ்வதை
அனுபவித்ததுண்டா

அது
எத்தனைச்
சுகானுபவம் தெரியுமா

நயாகரா
கோபமாய்க் கொட்டுகிறதா
காதலாய்க் கொட்டுகிறதா
என்று
முடியாத பட்டிமற்றம்
ஒன்று
நடத்திக்கொண்டே இருக்கலாம்

பேரருவியை
நோக்கிய பயணமாக
தற்காலிக மழையாடை அணிந்து
விசைப்படகின்
தாழ்வாரங்களில் நின்று
பயணப்படும்போது
மனதில் இருப்பது

போகலாம் போகலாம்
நயாகராவைத் தொட
சீக்கிரம் போகலாம்

என்ற தவிப்புதான்

விசைப்படகு
நதியை எதிர்த்து நீந்திக்கொண்டு
நயாகராவின்
...ஹோ... என்ற
ராட்சசப் பொழிவை நோக்கி
முன்னேற முன்னேற

சாரல்
சாரல்
சாரல்

பல திசைகளிலிருந்தும்
உற்சாகச் சாரலின்
உத்வேகக் கொண்டாட்டம்

இன்னும் இன்னும்
முன்னேற ஆவல்

குளிர்
பயம்
பதட்டம்
எல்லாம் தொற்றிக்கொண்டு
அருகிருக்கும் நண்பரை
இறுகக் கட்டிக்கொள்ளத்
தூண்டும்

முகமெல்லாம்
அதீத பூரிப்பு

உதடுகளில்
அப்பட்டமாய் நடனமாடும்
குளிரின் தடதடப்பு

வாவ்
பயணப்பட்ட அனைவரிடமிருந்தும்
ஒரே குரலில் மீண்டும் மீண்டும்
வாவ்... வாவ்....

முப்புறமும் சூழ்ந்து
கொட்டோ கொட்டென்று
கொட்ட

நடுவில்
நயாகராவின்
கோபாவேசத்தை எதிர்த்துக்கொண்டு

அதன் சாரல் காதலை
முகங்களில் ஏந்திக்கொண்டு

வெகு அருகில் விசைப்படகில்
திகிலோடு நிற்பது
விவரிக்கமுடியாத ஆனந்தப் பெருக்கு

அவ்வளவுதானா?

கொட்டும் நயாகராவுக்கு
இன்னும் இன்னும் அருகில்
செல்லவேண்டுமே

அதன் முகத்தைக்
கிட்டத்தில் பார்த்தாயிற்று
அதன் முதுகையும் பார்க்கவேண்டுமே

எப்படி?

அதற்கும் வைத்திருக்கிறார்கள்
ஒரு வழி


பேரரருவியில் பின்வழிப் பயணம்
Journey Behind the Falls
என்னையும் பார்த்துவிட்டுப் போ
என்று தன் சாரல் மொழியில்
என்னைக் கூவி அழைத்தது

ஆகா அற்புதம்
அதையும் பார்த்துவிடலாம்
என்று அங்கும் சென்றேன்

அடடா
அது இன்னொரு வகையில்
திகைப்பும் சிலிர்ப்பும் ஊட்டும்
திகில் பயணம்

இம்முறையும்
தற்காலிக மழையாடை அணிந்து
நயாகராவைத் தொடப்போகும்
அதீத கிளர்ச்சியோடு முன்னேறினேன்

நயாகரா நீர்வீழ்ச்சிக்குப் பின்புறம்
சில பல குகைகளைச்
சிறப்பாகச் செதுக்கி இருக்கிறார்கள்

அதன் சரித்திரங்களை
அழகாகச் சொல்லிக்கொண்டு
மின்தூக்கியை
கீழ்நோக்கி இயக்கினார் பணியாளர்

குகைவழியாகவே நடந்து
கிட்டத்தட்ட நயாகராவின்
பின் இடுப்புப் பகுதிக்கு வந்தாயிற்று

அப்பப்பா

நெருப்புப்புகை
நம் கண்களை நோகடிக்கும்

ஆனால்
இந்த நீர்ப்புகைதான்
என்ன சுகம் என்ன சுகம்

கண்களில் குளிர்ச்சியை ஏற்றி
மூளைக்குள்
ஒரு முதலிரவே நடத்தியது

குகை வழியாய் நயாகராவின்
அருகே அருகே செல்லச் செல்ல
உடம்புக்குள் பதுங்கி இருக்கும்
எலும்புகளும் கூச்செறிவதை
அப்பட்டமாய் உணரலாம்

வெள்ளை வெளேர் என்று
படு வேகத்தில் நயாகரா
மகா அடர்த்தியாய்க் கொட்டுகிறது

பத்தடி தூரத்தில்
இடுப்புயரக் கம்பிக் கதவால்
பாதுகாப்பு கருதி தடுக்கப்படுவோம்

கைகளால் தொடமுடியவில்லையே என்று
ஒரு நொடி வருத்தம் கொண்டேன்

அங்கிருந்து
மக்கள் தங்களின் வேண்டுதல்களை
மனதுக்குள் சொல்லிக்கொண்டு
சில்லறைக் காசுகளை எறிகிறார்கள்

இளசுகள்
காதல் எண்ணங்களோடும்
எதிர்பார்ப்புகளோடும்
எறிவதுதான் அதிகம்

நம்புகிறோமோ இல்லையோ
அந்த இடம் சென்றதும்
மனதில் நமக்கென்ன ஆசை என்று
எண்ணத் தோன்றிவிடுகிறது

நிறைவேறுமோ நிறைவேறாதோ
நம்பிக்கையோடு
ஒரு நாணயத்தை  வீசும்போது
ஆனந்தம் வந்து
ஒட்டிக்கொள்ளத்தான் செய்கிறது

இதோ என் விருப்பம்

என் தாய்மொழியாம் தமிழ்
என்றென்றும்
சீரும் சிறப்புமாய் வாழவேண்டும்

தீவிரவாதமில்லாத
உலகம் வேண்டும்

ஒவ்வோர் இதயத்திலும்
உலகக் குடிமகன் என்ற எண்ணமே
மேலோங்க வேண்டும்

பிறந்த ஒவ்வோர் உயிருக்கும்
நிறைவான காதலே
வாழ்க்கையாய்க் கிடைக்க வேண்டும்

இவ்வாறு
அந்தக்
குகைகள் அத்தனையையும்
நடந்து நடந்து….

முழு உடம்பாலும்
பூரித்த உள்ளத்தாலும்
பார்த்துவிட்டு

நயாகராவின் இடப்புறத்தில்
அதற்கு
மிக அருகாமையில்

பாதுகாப்புக் கம்பிகளால்
சூழப்பட்ட மேடைக்கு
வந்துசேர்ந்தேன்

சிலீர்... சிலீர்...
என்று
நயாகராவின்
 நெருக்கமான சாரல்
நம் உடம்பை
நேசத்தோடும் பாசத்தோடும்
தொடுகிறது


முதன் முதலில்
அரைகுறையாய்
விபரம் தெரியவரும்
சின்னஞ்சிறு வயதில்

பிரம்மாண்டமான
கோவில் யானை
தன் துதிக்கையால்
நம்
பிஞ்சுத் தலை தொட்டு
வாழ்த்துச்சொல்லுமே

அப்போது
எப்படியிருக்கும்?

அப்படித்தான் இருந்தது
அந்த அனுபவம்

நயாகரா
என்ற மகா நீர்வீழ்ச்சி
எனக்குச்
சாரல் வாழ்த்துச் சொல்லுவதாய்ச்
சிலிர்த்தேன்

அவ்வளவுதான்
எனக்கு குளிர் விட்டுப் போய்விட்டது

உள்ளே இருந்து ஓர் ஆட்டம்
மெல்ல மெல்ல தன் அசைவுகளை
எனக்குள் மீட்டி மீட்டி
மூர்க்கம் கொண்டது

தற்காலிக
மழையாடையைக் கழற்றினேன்

சிலீர்சிலீர்

கைகளை உயரே உயரே
நயாகராவை நோக்கி உயர்த்தி ஆடினேன்

சிலீர்சிலீர்

என் சட்டையையும் கழற்றினேன்
அப்பப்பாஅப்பப்பா

சிலீர்சிலீர்

உலகில் அங்கும் இங்குமாக
ஆயிரம் அருவிகளும்
அதி உயர நீர்வீழ்ச்சிகளும் இருக்கலாம்

ஆனால்
இதுதான்
இதுமட்டும்தான்
ஈடு இணையில்லாத
உலக நீர்வீழ்ச்சி
என்று உறுதியாகச் சொல்வேன்

1999ல் குடும்பத்தோடு முதன் முறையாக நான் நயாகரா சென்று வந்த அனுபவம்

4 comments:

தருமி said...

அருவிக்குப் பின்னால் போவது அமெரிக்கப் பகுதியில்தானே .. நீங்கள் கனடாகாரராயிற்றே என்பதால் கேட்டேன். அந்த அனுபவம் ஒரு அபூர்வமான அனுபவம்தான் - கல்லுக்குள் குடைந்த மின்தூக்கிக் குகை..
ஆனால் maid of mist அன்று இல்லாமல் போய்விட்டது. ஆகவே அந்த அனுபவம் கிடைக்காது போயிற்று.

அன்புடன் புகாரி said...

தருமி சார்,

நயாகராவின் மொத்தத்தையும் சுவைக்க வேண்டும் என்றால் நீஙக்ள் கனடா பகுதிக்குத்தான் வரவேண்டும். அனைத்தும் இங்குதான் அமர்க்களம்.

அன்புடன் புகாரி

பூங்குழலி said...

அழகாக வர்ணனை செய்திருக்கிறீர்கள் புகாரி

சாந்தி said...

அழகான வர்ணனை.