இதயங்கள் இயங்கட்டும்

கூகுளின் நெற்றியில்
தமிழே நீயொரு
குங்குமப்பொட்டு

செல்பேசி அலைகளில்
தமிழே நீயொரு
பொங்குமாக்கடல்

இணையக் கூடுகளில்
தமிழே நீயொரு
தாய்ப்பறவை

கணினி முற்றங்களில்
தமிழே நீயொரு
கோடிநிலா

முகநூல் முகப்புகளில்
தமிழே நீயொரு
தேவதைநாட்டியம்

டிவிட்டர் இழைகளில்
தமிழே நீயொரு
ட்ரில்லியன் மீட்டர்

வலைப்பூ வனங்களில்
தமிழே நீயொரு
தீராத் தேன்கூடு

மின்னஞ்சல்கள் தோட்டங்களில்
தமிழே நீயொரு
ஆடும் பொன்னூஞ்சல்

குழுமக் கருத்தாடல்களில்
தமிழே நீயொரு
நான்காம் தமிழ்ச்சங்கம்

அந்தக்
கருந்துளை உதடுகளிலும்
எங்கள் தமிழ்ச்சொல்
பட்டால் போதும்
பிரபஞ்ச ரகசியங்கள்
ஏதுமற்றுப் போகும்

தமிழே தமிழே
என்னுயிர்த் தமிழே
உனக்கு என்
தலையாய முதல் வணக்கம்
ஈர இதழ் முத்த வணக்கம்

v   

சித்திரையை முடித்தாலும்
கத்திரியை முடிக்காத
கதிரோனின்
கக்கத்திலிருந்து வந்து
எங்கள் பக்கத்தில் அமர்ந்து 
கவியரங்கத் தலைமை ஏற்றிருக்கும்
எஞ்சோட்டுப் பெண்
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு
நீர்க்குடங்கள் கொட்டும்
நயாகராவிலிருந்து
கவிபாட வந்திருக்கும்
தமிழன்
தங்கச்சோழன்
புகாரியின்
கவி வணக்கங்கள்

ஓர் இலக்கிய விழாவிற்கு
கூட்டம் கூட்டுவதற்காய்
இங்கே குவிந்திருக்கும்
திரை நட்சத்திரங்களே

இலக்கியம் தேடி வந்தவர்களுக்கு
நாங்கள் உங்களைக் காட்டுகிறோம்
உங்களைக் காண வந்தவர்களுக்கு
நாங்கள் இலக்கியம் ஊட்டுகிறோம்

நிலவைக் காட்டி சோறு ஊட்டுவாள்
அந்தக்கால அம்மா
நட்சத்திரங்களைக் காட்டி
இலக்கியம் ஊட்டப் பார்க்கிறாள்
இந்தக்கால அம்மா
வட அமெரிக்க பெட்னா
அம்மா

திரை நட்சத்திரங்களுக்கு
என் மினுக் மினுக் வணக்கங்கள்

v   

பட்டாடை
கட்டிக் கொண்ட பெட்னா
கலை இட்டாடும்
வெள்ளி விழா பெட்னா
மொழி எட்டாத
சொல்லடுக்குத் தேனா
கவிக் கட்டோடு
வந்தவனும் நானா 

v   

வெள்ளிவிழா காணும்
சிம்பொனி அரங்கில்
திரைவெள்ளி
கலைவெள்ளி
இலக்கியவெள்ளி
என்று
அத்தனை வெள்ளிகளையும்
ஒரே புள்ளியில் நிறுத்தி
வெள்ளி விழா எனச் சொல்லி
எழுந்த வெற்றி வெள்ளிவிழா
வெள்ளியில் தொடங்கிய
இந்த பெட்னா வெள்ளிவிழா

வந்து குவிந்த தமிழவைக்கும்
வெள்ளிவிழாப் பேரவைக்கும்
என் பொன்னன்பு வணக்கங்கள்
பூவன்பு வாழ்த்துக்கள்

v   

இயங்கா இதயங்கள்
பிணங்கள்

பிணங்களைக்கூட
பொறுத்துக் கொள்ளலாம் 
வக்கிர நஞ்சாய் இயங்கும்
இதயப் போலிகளை
நறுக்குதலே
அறம்

நல்ல இதயங்கள்
இயங்கட்டும்

v   

காதலுக்கு இதயம் உண்டா?

அன்று

அன்பே
இனி
ஒருபோதும்
கடற்கரைக்கு
வராதே
எத்தனை பெரிய
கடல் அது
நீ
எழுந்துபோனபின்னும்
பேரலைகளாய்த்
தாவித் தாவித்
தவிக்கிறது பார்
பாவம்

என்றான் காதலன்

நீ என்னைக்
கோவிலுக்கு
அழைத்துச் சென்றாய்
தெய்வத்தின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
கோவிலுக்குச் சென்ற
ஒரே பக்தை
நானாகத்தான் இருக்க முடியும்

என்றாள் காதலி

தேனுக்குள் விழுந்த
திராட்சைகளாய்த்தான் சிலிர்த்தார்கள்

இன்று

திருமண ஆல்பம்
வீடுவந்து சேரும்முன்

இவ்வுலகில்
சொர்க்கத்திலும் சொர்க்கமானது
ஒரு பெண்ணுடனான
உறவு
நரகத்திலும் நரகமானது
மனைவியுடனான
உறவு

என்கிறான் கணவன்

காமம்
உறக்கத்திற்குமுன்
நிகழும்
உடற்பயிற்சி
என்றாகும்போது
செத்துக் கிடக்கிறது
படுக்கைக்குக் கீழ்
காதல்

என்கிறாள் மனைவி

v   

அண்டை மாநிலங்களுக்கு இதயம் உண்டா?

தமிழ்நாடு
நதிகளின் புகுந்த வீடு
பெற்றெடுத்தப் பெண்களையே

அணையிட்டு முடக்கி
வாழாவெட்டிகளாக்குவதோ
கர்னாடகா கேரளா ஆந்திரா?

v   

பெட்ரோலுக்கு இதயம் உண்டா?

காரையே விற்றாலும்
இரண்டே லிட்டர் பெட்ரோல்தான்

மிதிவண்டி நம்பாதான் வாழ்வில்
மரணமிதி காண்

v   

சன்னியாசத்துக்கு இதயம் உண்டா?

மதுரை ஆதீனா
மாபெருங் கோடீஸ்வரா
ரஞ்சிதாவின் ரகசியா
தம்பீ நித்யாநந்தா
அவசரப்பட்டு அமெரிக்காவில்
கால் வைத்துவிட்டேனே
கொஞ்சம் உள்ளூரிலேயே
கை வைத்திருக்கலாமே

v   

வளர்ந்துவிட்ட நாடுகளுக்கு இதயம் உண்டா?

வணிகம்செய்ய வந்தார்கள் அன்று
நாம் அடிமைப்பட்டோம்
குளிர்பான உற்பத்திசெய்ய வருகிறார்கள் இன்று
நம் வாழ்வாதாரங்கள் சுரண்டப்படுகிறோம் 

இதில் தீக்கொடுமை யாதெனிலோ
உப்புமூட்டை தூக்கி மாப்பிள்ளை ஊர்வலமாய்
அவர்களை அழைத்து வருகிறார்கள்
நம்மிடம் ஓட்டு கேட்டு சீட்டுப் பிடித்த
கூட்டுக் களவாணிகள்

v   

அமெரிக்காவுக்கு இதயம் உண்டா?

அவ்வப்போது என்னை இப்படியோர்
கற்பனை வந்து முட்டும்

வாழ்வாங்கு வாழ
அமெரிக்கா வந்த தமிழன்
நிலைகெட்டு மனம் நொந்தால்
கோட்டும் சூட்டும் இட்டு
கழுத்தில் டையும் கட்டி
அமெரிக்கக் கடற்கரையை
சென்னை மெரினாவாய் நினைத்து
இப்படியொரு தெருப்பாடல் பாடுவானோ?


ஆசையாக ஓடிவந்தேன்
   அமெரிக்காவே - இப்போ
அத்தனையும் ஒடஞ்சிபோச்சே
   அமெரிக்காவே

பாசமான ஊரை விட்டேன்
   அமெரிக்காவே - இப்போ
படுறபாடு கொஞ்சமில்லே
   அமெரிக்காவே


காதலிச்சேன் வெள்ளைக்காரி
   அமெரிக்காவே - அவள்
கழுத்தறுத்துப் போட்டுட்டாளே
   அமெரிக்காவே

வளைஞ்சிநெளிஞ்சி ஒருத்தன்வந்தான்
   அமெரிக்காவே - வந்து
கட்டிக்கலாம் வாரியான்னு
   கேட்டுட்டானே


வீடு வாங்கி செட்டில் ஆனேன்
   அமெரிக்காவே - அதை
வங்கிக்காரன் ஆட்டைபோட்டான்
   அமெரிக்காவே

காலமெல்லாம் உழைச்ச காசு
   அமெரிக்காவே - இப்போ
கடங்காரன் ஆயிப்புட்டேன்
   அமெரிக்காவே


காலையில வேலையில
   சேத்துக்கறான் - அந்த
ராத்திரிக்கே வேலைவிட்டு
   தூக்கிடறான்


வெள்ளக்காரன் மேலாளரா
   இருந்துக்கறான் - நான்
மேல போனா காலவாரி
   விட்டுடுறான்


சேந்து படிச்ச பசங்க எல்லாம்
   அமெரிக்காவே - அங்க
ஜில்லாக் கலெக்டர் ஆயிட்டாங்க
   அமெரிக்காவே

சொந்த ஊரப் போல சொகம்
   ஏதும் இல்லே - இதை
சொல்லப் போனாக் கேட்க
   ஒரு நாதி இல்லே

v   

சிங்களத் தீவுக்கு இதயம் உண்டா?

முள்ளிவாய்க்காலைக்
கொள்ளி வாய்க்காலாய்

கொடுந்துயர் பீரிடும்
கண்ணீர் வாய்க்காலாய்

செங்குருதி கொப்பளிக்கும்
சதைக்கூழ் வாய்க்காலாய்

ஆக்கிய
பௌத்தப் பொய்யாடை
நரமாமிசப் பட்சிகளே
மகிந்தராஜ பட்சேக்களே

குள்ளநரி கூத்துகட்டி
நீங்கள் ஆடியதல்ல வெற்றி

அறம்காத்து வருவதொன்றே
நிரந்தர வெற்றி

தமிழுக்காய்
தமிழ் இனத்திற்காய்
தமிழ் மண்ணிற்காய்
தமிழ் மானத்திற்காய்
வாழ்ந்தவனும்
வாழ வந்தவனும்
வீழ்ந்தவனும்
வீழ்ந்ததாலேயே
எழுந்தவனுமே
தமிழன்

தன்னிகரற்ற
வெற்றியாளன்

நின்றுபோன இதயங்கள்
இயங்கட்டும்

அறத்தால்
வென்றுவாழும் உதயங்கள்
துலங்கட்டும்

v   

இயங்கா இதயங்கள்
பிணங்கள்

பிணங்களைக்கூட
பொறுத்துக் கொள்ளலாம் 
வக்கிர நஞ்சாய்
இயங்கும்
இதயப் போலிகளை
நறுக்குதலே அறம்

நல்ல
இதயங்கள் இயங்கட்டும்

v   

கணித்திரையில்
கனவுகளைக்
கவிதைகளாக்கிக் கொண்டும்
விழித்திரையில்
கவிதைகளைக்
கனவுகளாக்கிக் கண்டும்
எனக்கே எனக்கான
சுவாச வெளியில்
மிதக்கும்
இந்த
அன்புடன் புகாரியின்
நன்றியும்
வணக்கமும்

2012 பெட்னா வெள்ளிவிழா கவியரங்கத்தில் வாசித்த கவிதை

No comments: