வெறுப்பிற்கு வாழ்வெனில்

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் ஏராளமான வாட்சப் குழுமங்கள். அனேகமாக வாட்சப்பில் இல்லாதவன் வாழ்க்கையே இல்லாதவன் என்று சொல்லும் அளவிற்கு வாட்சப் மோகம் தொற்றிப் படர்ந்து வியாபித்திருக்கிறது உலகை.

வலைப்பூ முகநூல் போன்றவற்றையெல்லாம்விட இன்று ஏன் வாட்சப் வெகுவாகப் பரவி நிற்கிறது என்று பார்த்தால் அதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று ஸ்மார்ட்போன். வலைப்பூ முகநூல் போன்றவை எல்லாம் கணினிகளில் சிறப்பாக இருக்கிறதென்றால் ஸ்மார்ட்போன்தான் வாட்சப் சேவையில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும்.

அடுத்து வலைப்பூவில் நீங்கள் ஆக்கப்பூர்வமாக எதையாவது எழுதவேண்டும். முகநூலில் உங்கள் சொந்த புகப்படங்கள் கருத்துக்கள் என்று எதையாவது இடவேண்டும். வாட்சப்பில் இது எதுவுமே தேவையில்லை. இங்கிருந்து வருவதை அங்கே தள்ளிவிட வேண்டும் அங்கிருந்து வருவதை இங்கே தள்ளிவிடவேண்டும். அதாவது இளகுவான ஏற்றுமதி இறக்குமதிச் சேவை. எங்கிருந்து வந்தாலும் வாசிக்கின்றோமோ இல்லையோ நண்பர்களின் உறவுகளின் பிறக் குழுமங்களின் தலையில் சட்டுச் சட்டென்று கட்டிவிடவேண்டியதுதான்.

விபரமான அரசியல்வாதிகள் இன்று பல பொறியாளர்களையும் ஓவியர்களையும்  எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் பணிக்கு வைத்திருக்கின்றார்கள். இவர்கள் செய்ய வேண்டிய பணி என்னவென்றால் மூச்சுவிடுவதற்கெல்லாம் எதிர் மூச்சாக மீம் உருவாக்குவதும் அதை உலகெலாம் பரப்புவதும்தான்.

மீம்ஸ் போடு மாமுஎன்ற கலாச்சாரம் எத்தனை ஆபத்தானது என்பதில் அரசியல்வாதிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களின் அக்கறையே வேறு அல்லவா?

அன்றுபோல் ஊடகங்களை நம்புவதற்கு இன்று ஒருவரும் இல்லை. சத்தியம் செய்துவரும் பல செய்திகள் பச்சைப்பொய். இதில் எது மெய் எது பொய் என்பதை அறியும் அறிவு தேர்ந்த அறிஞர்களுக்கும் இல்லாத நிலையே உருவாகிவருகிறது. அத்தனை சாதுர்யமாக வடிக்கிறார்கள் மீம்களை.

இது ஒருபுறம் இருக்க நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி வாட்சப் குழுமங்களை உருவாக்கி ஒரு நெருக்கத்தைத் தேடுகிறார்கள். அன்போடு முதலில் அதையும் இதையும் பகிர்கிறார்கள். உரையாடி உறவாடி பரவசம் கொள்கிறார்கள்.

சில தினங்கள் சென்றபின் இவர் இடுவது அவருக்குப் பிடிப்பதில்லை. அவர் இடுவது இவருக்குப் பிடிப்பதில்லை. முதலில் சகித்துக்கொண்டாலும் பின் மெல்ல மெல்ல வெறுபுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். அந்த வெறுப்பு நாடு காடு கொள்ளாததாக விசுவரூபம் எடுக்கிறது. பின் முழு விரோதியாகவே ஆகிவிடுகிறார்கள். சட்டுச் சட்டென்று வாட்சப் விட்டு வாட்சப் தாவும் குரங்குகளாய் ஆகிறார்கள்.

எங்கே தாவினாலும் அங்கேயும் ஒரு வெறுப்பு அவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒரே குழுவுக்குள் இருந்தாலும் உள்ளுக்குள் தனித்தனிக் குழுக்களாய் அமைத்துக்கொண்டு சொந்த அரிப்புகளை சுகமாகச் சொறிந்துகொள்கிறார்கள். இன்றைநாள் உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சகிப்பு என்பதோ இணக்கம் என்பதோ கிடையவே கிடையாது என்றே சொல்லலாம்.

எது எப்படிப் போனாலும் என்னைப் போன்ற சிலருக்கு வெறுப்பு என்பதை வளரவிடுவதில் துளியும் விருப்பம் கிடையாது. ஆகவே எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்தாலும் வெறுப்புக்குள் மட்டும் வீழ்ந்து விடாதீர்கள் என்று நான் எச்சரித்துக்கொண்டே இருப்பேன்.

அதை அழுத்தமாகச் சொல்வதற்காக நான் படைத்த ஒரு ஆக்கம்தான் இக்கவிதை. ஒரே மூச்சில் இந்தக் கவிதையை நான் எழுதிவிட்டேன். காரணம் இதில் சொன்னவை அனைத்தும் சிந்தனையைக் கசக்கி மூளைப் பிரசவமாய் வெளிவராமல் இதயத்திலிருந்து சட்டென்று ஒரு மாமழையாய்க் கொட்டிவிட்டதுதான்.

இக்கவிதையை வாட்சப் உறவு வெறுப்பிற்கு என்று மட்டும் கொள்ளாமல் உலக வெறுப்புகள் அனைத்திற்கும் ஏற்றதாகவே எழுதி இருக்கிறேன்.


வெறுப்பின்
    வேரறுக்க அன்புசெய்வோம்
வெறுப்போர்
    உள்ளத்தில் அறமிடுவோம்

வெறுப்பே
    விசமென்று எடுத்துரைப்போம்
வெறுப்பின்
    விருட்சமே நாசமென்போம் 
       

வெறுப்போர்
    அன்பையே வெறுத்திடுவார்
வெறுப்போர்
    அறத்தையும் வெறுத்திடுவார்




வெறுப்போர்
    அறிவினைத் தடுத்திடுவார்
வெறுப்போர்
    காரணம் தேடிடுவார்
         

வெறுப்போர்
    விழிகளின் கொதிப்பினிலே
வெறுப்போர்
    பார்வையோ குருடாகும்

வெறுப்போர்
    வெறுப்பது நியாயங்களை
வெறுப்போர்
    துறப்பது நடுநிலையை
         

வெறுப்போர்
    கருத்தினில் தெரிவதில்லை
வெறுப்பது
    முடிவினில் தமையேயென

வெறுப்போர்
    சினத்தினில் புரிவதில்லை
வெறுப்பது
    பேரின்ப வாழ்வேயென     
         

வெறுப்போர்
    நினைத்தே வாடுகின்றேன்
வெறுப்போர்
    உள்மனம் தேடுகின்றேன்




வெறுப்போர்
    மனநிலை அலசுகின்றேன்
வெறுப்போர்
    மாறிட எழுதுகின்றேன்
       

வெறுப்போர்
    வெறுப்பது புறத்தேதான்
வெறுப்போர்
    விருப்பமும் விருப்பேதான்

வெறுப்போர்
    நம்மிடை ஒருத்தர்தான்    
வெறுப்புகள்
    சிலநொடி மாற்றந்தான்
         
         
வெறுப்புகள்
    அழியட்டும் அன்பாலே
வெறுப்புகள்
    ஒழியட்டும் அறிவாலே

வெறுப்புகள்
    தீயட்டும் அறத்தாலே
வெறுப்புகள்
    வேகட்டும் இணைப்பாலே
       
       
வெறுப்பிற்கு
    அடித்தளம் சுயநலங்கள்
வெறுப்பிற்குப்
    பிடித்தவை ஆயுதங்கள்




வெறுப்பினில்
    விளைவது போர்முனைகள்
வெறிப்பினில்
    நிறைவது ரத்தநதிகள்

         
வெறுப்பினில்
    சாய்வதோ நல்லிணக்கம்
வெறுப்பினில்
    மாய்வதோ மனிதநேயம்

வெறிப்பினின்
    கெடுவதோ பண்பாடு
வெறுப்பினில்
    அழிவதோ அடையாளம்
         

வெறுப்பினில்
    தமையனும் விலையாகிறான்       
வெறுப்பினில்
    தாய்கூட கொலையாகிறாள்

வெறுப்பினில்
    மனிதகுல வேர்சாய்வதோ
வெறுப்பினில்
    சுடுகாடு நாடாவதோ       
       

வெறுப்பதன்
    நாற்றமோ மூக்குடைக்கும்
வெறுப்பதன்
    கழிவுகள் உயிரழிக்கும்     





வெறுப்பதன்
    இருப்பிடம் மலக்குடலே
வெறுப்புடன்
    செல்வோம் கழிப்பிடமே


வெறுப்பினை
    வெறுத்தே தூற்றிடுவோம்
வெறுப்பினை
    விருப்பால் வென்றிடுவோம்

வெறுப்பிற்கு
    வாழ்வெனில் நமக்கேது
வெறுப்பிற்கு
    மதிப்பெனில் இறையேது




No comments: