கொடு


கொடு

கொடு

எல்லாம்
கொடு

பொன் பொருள் பணம்
என்பவை மட்டுமல்ல

அன்பு கருணை மன்னிப்பு
என்பவையும் மட்டுமல்ல

உன்னிடம் உள்ள
எல்லாவற்றையும்
கொடு

உனக்கே உனக்கானதென்று
எதுவுமே இல்லை

தயக்கம் வேண்டாம்
கோடுகள் வேண்டாம்
கொள்கைகள் வேண்டாம்

கொடுப்பதால் பெறுகிறாய்
நீ இழக்கவில்லை
கொடு

எல்லோரும் முன்வந்து
எல்லாமும்
கொடுக்கக் கொடுக்க
எல்லோரும் எல்லாமும்
எப்போதும்
பெறுகிறார்கள்

அடடா
அந்தச் சொர்க்கத்தை
அப்படியே
உன் கண்ணுக்குள்
சுகமாக
ஓடவிட்டுப் பார்

அதுபோதும்
நீ
கொடுப்பாய்

8 comments:

Anonymous said...

அன்புள்ள புகாரி,
தங்களின் "கொடு" வாசித்தேன்.
நிறைய செய்திகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.

கொடுப்பதற்கு மனமிருந்தால் அங்கே கோடுகளுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லைதான்.

எங்கிருந்து பெற்றாயோ அங்கேதான் கொடுக்கப்போகிறாய் என்பது காலம்காலமாய்
நிலவிவரும் சத்தியவாக்கு.

கொடுப்பதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டுமல்லவா!

அன்புடன்
மு.குருமூர்த்தி

Unknown said...

வணக்கம் குருமூர்த்தி சார்

உங்கள் பாராட்டுகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன்

நான் தற்போது விடுப்பில் இருப்பதால், என் எழுத்துக்களையெல்லாம் சேமிப்பாக ஓர் இடத்தில் குவிக்கலாம் என்று முடிவுசெய்து இந்த என் வலைப்பூவில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் வருகை தாருங்கள். மகிழ்வேன்

தொகுப்புகள் என்ற பகுதிக்குச் சென்றால் நான் வெளியிட்ட நூல்களும் வெளியிடப் போகும் நூல்களுக்கான கவிதைகளும் என்னிடம் மட்டும் வைத்துக்கொள்ளும் கவிதைகளும் காணக் கிடைக்கும்.

நன்றி

அன்புடன் புகாரி

cheena (சீனா) said...

கொடுத்து மகிழ்வதே மகிழ்ச்சியின் உச்சம். கொடு கொடு கொடு - எதையும் பார்க்காதே ! எல்லை வகுக்காதே ! கொடுத்துக் கொண்டே இரு. கொடுப்பதற்காக உன்னிடம் வருபவை உன்னால் பெறப் பட்டவையே - மற்றவர்கள் கொடுத்தவை தான். நல்லதொரு சிந்தனை - எளிய சொற்களில் அழகுக் கவிதை. நல்வாழ்த்துகள்

Agathiyan John Benedict said...

கொடுத்தால் குறையாது என்பது நீங்கள் கொடுக்கக் கொடுக்கக் கொஞ்சமும் குறையாமல் ஊறிக்கொண்டேயிருக்கும் உங்களின் கவிதையிலிருந்தே தெரிகிறது.

Anonymous said...

/அன்பு கருணை மன்னிப்பு
என்பவையும் மட்டுமல்ல//

உண்மையான முழுமையான அன்பைக் கொடுக்கிறான் என்றால் அனைத்தையும் கொடுக்கிறான் என்பது தானே பொருள்.

Unknown said...

எல்லோருமே உலகில் அன்பைத் தருகிறேன் என்றுதான் சொல்கிறார்கள் சேவியர். இதனால் நீங்கள் கூறும் உண்மையான முழுமையான என்பதெல்லாம் வரையறுக்கப்பட வேண்டியதாகிவிடுகிறது. ஆகவேதான் முதலில் பொன் பொருள் மட்டுமல்ல, அடுத்ததாக அன்பு கருணை மட்டுமல்ல அதையும் தாண்டி உடல் பொருள் ஆன்மாவென்றேல்லாம் சொல்வார்களே அதையெல்லாம் உள்ளடக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வாசிப்போருக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்வதே இதன் நோக்கம் சேவியர்.

Anonymous said...

அன்புள்ள புகாரி,

உங்களின் அன்புடன் இதயம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது எழுதுவேன்.

மொட்டுக்களைப் பார்த்துமகிழ்வது ஆசிரியப்பணி.
மொட்டுகள் மலர்ந்து மணம் வீசுவதைப்பார்க்க எத்தனை ஆசிரியர்களுக்கு
கொடுத்துவைத்திருக்கும்!
நீங்கள் மணம் வீசுகிறீர்கள்.

உங்களுக்கு கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார் என்பது நான் அறியவந்த செய்தி.
இன்றும் உடல் நலத்தோடு என்னுடைய வீட்டருகில்தான் கடிகாரம்
பழுதுபார்த்துக்கொண்டு இருக்கிறார்.

குனிந்ததலை நிமிராமல் தொழில் செய்துகொண்டிருப்பவரை ஒருநாள்
தொந்தரவுசெய்து உங்களைப்பற்றி கூற எண்ணியிருக்கிறேன்.

அது யார் நாடோடி இலக்கியன்?
அவருடைய முகவரி இந்த நள்ளிரவில் தேடியும் கிடைக்கவில்லை.

நானும் கருக்காடிப்பட்டி பள்ளியில் கணித ஆசிரியராக அவர் குறிப்பிட்ட
காலத்தில் பணியாற்றியிருக்கிறேன்.
சவரிநாதனுடன் இணைந்து கருக்காடிப்பட்டி மாணவர்களுக்கு சவரிநாதனுடைய
வீட்டில் வைத்து டியூஷன் எடுத்தேன்.

இந்த கடிதத்தை அந்த நாடோடி இலக்கியனுக்கு அனுப்பித்தரமுடியுமா?

அந்த நாடோடி இலக்கியன் என்னுடன் தொடர்புகொள்ள இசைவாரா?

அன்புடன்,
மு.குருமூர்த்தி

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.