ஆயிரம் கடல் பேரலைகள்

எல்லாம்
அந்நிய மோகம்தான்

உள்ளூர்க் காரன்
அரைவேக்காடு

வெளிநாட்டுக்காரன்
அதிமேதாவி

மூர்மார்கெட்டில் மட்டுமல்ல
இலக்கிய உலகிலும்கூட
இதுவே கதி

தன் பாரம்பரியப்
பண்பாடுகளின் வேர்களில்
நெருப்பு
வைத்துக்கொள்ளும்
ஈனப் பாதை
மேதாவிகளுக்குப்
புனித யாத்திரை

நல்ல
இலக்கியக்காரனின்
உயிர் துடித்துக் கிடப்பது
தாய்மண் இலக்கியச்
செழுமையில்தான்
தமிழ்மண் பண்பாட்டின்
திண்மையில்தான்

தாயைத்
தள்ளிவைத்துவிட்டுத்
தாசிவீட்டுக் கொண்டாட்டம்
விடலைத் துடுக்குகள்

யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்று
ஒரு பெருஞ்சிறகுப் பறவையாய்
உலகெலாம் பறந்து
உன்னதங்களை முகர்ந்து
ஒப்பீட்டில் உயர்ந்து
தன் கூட்டையே ஆழ நேசித்துத்
தன் வேர்களின் உறுதிக்கு
நாட்டு நெய் தடவி
கிளைகளில் இலைகளில்
உலக வர்ண மெருகூட்டி
மகிழ வேண்டுமடா
மான்புத் தமிழா

அவ்வழியே
உன் பெருமை பொங்கட்டும்
ஆயிரம் கடல் பேரலைகளாக



20171125

No comments: