கலக்... கலக்... கானிஸ்பேபல்கலைத்தென்றல் ஆரெஸ்மணியின் இசையில்


கனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கொயின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மாபெரும் தோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.

அதாவது அல்கான்கொயின் தோட்டத்தில் 5 லண்டன் மாகநகரங்களை அப்படியே வசதியாகப் படுக்க வைக்கலாம், அத்தனை பெரிய தோட்டம். நம்மூரில் இதைக் காடு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கனடாவிலோ இதைப் பெருந்தோட்டம் என்கிறார்கள். ஏனென்றால் இது முழுவதும் இவர்களின் 24 மணி நேர பராமறிப்பில் உள்ளது.

மிகப்பெரிய தோட்டம் இதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் வாழ்நாளில் பார்த்த மிகப்பெரிய தோட்டம் இதுதான். இங்கே ஈராயிரத்திற்கும் மேற்பட்ட கரடிகள் இயற்கையாய் வாழ்கின்றன. எண்ணற்ற ரக்கூன்களும் மூஸ்களும் ஓநாய்களும் பல்லாயிரம் பறவைகளும் இதில் வாழ்கின்றன. இத்தோட்டத்தில் பல ஏரிகள் உள்ளன.

இவ்வேளையில் கனடா ஏரிகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பொன்றைச் சொல்லியாக வேண்டும். கனடாவில் சுமார் ஒரு மில்லியன் நன்னீர் ஏரிகள் உள்ளன. அதில் அரை மில்லியன் ஏரிகள் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டும் உள்ளன. டொராண்டோ ஒண்டாரியோ மாகாணத்தில்தான் உள்ளது.

இந்த அல்கான்கொய்ன் தோட்டத்தில் சில இரவுகள் குடிசைபோட்டுத் தங்கி களிப்பதற்கு இணையான சுகம் வேறு ஒன்றுமில்லை என்று சொல்வேன். 2007 ஜூலை முதலாம் தேதி அங்கே சென்று வந்ததைப் பற்றிய அனுபவக் கவிதைதான் இது.மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
.......மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட
.......பொன்னழகு டெண்டுக்குள்ளே

ஆப்பிள் விதைச் சொகுசாக
.......அடுக்கு மல்லிச் சிரிப்பாக
தோப்புக் குயில் பாட்டாக
.......தொடர்ந்ததொரு கொண்டாட்டம்

ராப்பகலா ஆசைப்பட்டு
.......ரசனையோடு திட்டமிட்டு
ஆப்புவச்ச மழையக்கூட
.......அலட்சியமா ஒதுக்கிவிட்டு

மாப்பிள்ளையின் விருந்தாக
.......மரத்தடியின் பார்-பீ-க்யூ
சாப்பாட்டை வெட்டிக்கிட்டு
.......சந்தோசக் கொண்டாட்டம்

ஏரியோரக் குளியல்போட்டு
.......ஏரிக்குள்ளே படகுவிட்டு
வாரிவாரிக் குடிச்சாலும்
.......வத்தாத அழகையெலாம்

வாரம்பல தங்கினாலும்
.......வாராத சுகத்தையெலாம்
வாரயிறுதி ஒருநாளில்
.......வாரிக்கிட்ட கொண்டாடம்

பச்சைப்பசும் மரங்களோடு
.......பாட்டுப்பாடி கைகோத்து
உச்சிவெயில் வேளையிலும்
.......ஓடிவரும் தென்றலோடு

கொட்டுகின்ற அருவிதனில்
.......கும்மாளக் குளியல்போட்டு
மட்டற்ற மகிழ்ச்சியிலே
.......மத்தாப்புக் கொண்டாட்டம்

கொண்டாட்டம் கொண்டாட்டமென
.......கோடிகவி எழுதினாலும்
கொண்டாடிய உள்ளங்களின்
.......குதூகலத்தைச் சொல்லிவைக்க

உண்டான சொல்லென்று
.......ஓர்சொல்லும் கிடையாது
கொண்டாடித் திண்டாடிக்
.......கொண்டோமொரு கொண்டாட்டம்

அதிகாலை மூணரைக்கே
.......அவசரமாய்ப் புறப்பட்டோம்
மதி குளிரும் இளங்காலை
.......மலர் விரித்து வரவேற்க

ஒரில்லியா டிம்ஹார்டன்
.......ஒன்றினிலே ஒதுங்கினோம்
ஒருகுவளை 'டீ'பருகி
.......உடன்வந்தோம் கானிஸ்பே

கானிஸ்பே முகாமுக்குள்
.......காலெடுத்து வைத்தவுடன்
தேன்மதுவில் விழுந்ததுபோல்
.......தேகமெல்லாம் தித்திப்பு

மானினமும் மீனினமும்
.......மேப்பிள்இலைத் தோரணமும்
தோணியோட்டும் ஏரியோடு
.......தெவிட்டாத சுகங்களிங்கே

அல்கான்கொய்ன் என்கின்ற
.......அழகுபெருந் தோட்டமதில்
இல்லாத சுகங்கள்பல
.......இறைந்தெங்கும தான்கிடக்க

மெல்லயாம் ஊர்ந்தபோது
.......மேய்ந்துநின்ற மூஸ்கூட
சொல்லியதாய்ச் சிலிர்த்தோமே
.......சுகமாக சலாமலைக்கும்

மீண்டுவர மனமில்லாமல்
.......மிகுந்தசுகம் தந்தபயணம்
மீண்டுவந்த போதுநெஞ்சில்
.......மெத்தையிட்டுக் கொண்டதடா

வேண்டும்பல இதுபோலென
.......வேண்டிநிற்கும் போதினிலே
வேண்டிவந்த யாவருக்கும்
.......நன்றிகூறி நிற்கிறேன்

என்மனமோ உயரத்தில்
.......என்னுயிரோ பரவசத்தில்
இன்னுமின்னும் இதுபோன்ற
.......இனிப்பான அனைவருக்கும்

என்னுடைய நன்றிகளை
.......இனிதாகச் சொல்லுகிறேன்
என்னுடனே முகாம் வந்த
.......எல்லோர்க்கும் நன்றிநன்றி

Comments

பூங்குழலி said…
மாப்பிள்ளையின் விருந்தாக
மரத்தடியின் பார்-பீ-க்யூ
சாப்பாட்டை வெட்டிக்கிட்டு
சந்தோசக் கொண்டாட்டம்

ஏரியோரக் குளியல்போட்டு
ஏரிக்குள்ளே படகுவிட்டு
வாரிவாரிக் குடிச்சாலும்
வத்தாத அழகையெலாம்


மானினமும் மீனினமும்
மேப்பிள்இலைத் தோரணமும்
தோணியோட்டும் ஏரியோடு
தெவிட்டாத சுகங்களிங்கே

அமர்க்களமாக இருக்கிறது
(ரொம்ப பொறாமையாகவும் )
nidurali said…
ஒலிபரப்பும் பாடல், கவிதை தேனாக இனித்தது! மகிழ்ந்தேன்

கருத்தாழம் மழை பொழியும் கவிதை

என்னுடைய நன்றிகளை
இனிதாகச் சொல்லுகிறேன்
அனந்தநாராயணன் said…
கானடாவின் ‘தேசீயப் பூங்காக்களில்’ ஒன்றின் அழகான வர்ணனைகளுடன் அமைந்த எதுகை பயிலும் பேச்சுத் தமிழ்க் கவிதை. ஆரெஸ் மணியின் இசை அதற்கு மேலும் அழகூட்டுகிறது.
அதிகாலை மூணரைக்கே என்று தொடங்கி வரும் பகுதி பாடலின் முதலில் இருத்தல் இன்னும் பொருத்தமெனத் தோன்றுகிறது.

அனந்த்
பி.கு. சிங்கை வரதராஜன் சொன்னது போல ‘தடிச்ச் உதட்டுக்காரி’ பாடலை நானும் படித்து இரசித்தேன்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்