எட்டாத அதிசயம்  

விடாமல் கொட்டும்
விசுவரூபம்

குளிர் நீர்ச் சிறகுகள்
படபடத்துப் பறக்கும்
ராட்சசப் பறவை

விண்ணைத் தொட்டு
ஏழு வர்ணம் தீட்டும்
தண்ணீர்த் தூரிகை

நெருப்பையும் வெல்லும்
தீரா நீர்ப் புகை

நிலத்தின் மேனியில்
நீர்முத்தம் வரையும்
பருவ ஓவியம்

கவிதை மடியில்
கவிதை எழுதும்
நீரெழுத்துக் கவிதை

காற்றைக் கிழித்துக்
கரைகள் நிறைத்து
சந்தங்கள் பொழியும்
ஓயாத பாட்டு


துருவப் பனிக் குடங்கள்
துளித் துளியாய் உடைந்து
மில்லியன் கால்கொண்டு நடந்து
பேரரருவியாய் விழுந்து
கடல் சேரும் ஓட்டம்

இது நீரோட்டமல்ல
ரத்த ஓட்டம்

ஓர் ஐந்து வயது கேட்டது
ஞாயிற்றுக் கிழமையும்
விடுமுறை இல்லையா
நாளைக்கும் கொட்டுமா
நயாகரா

ஒரு
மூன்று வயது அழைத்தது
நடுவில் நின்று குளிக்கலாம் வா

பிஞ்சுமுதல் பிணக்கூடு வரை
எல்லோர்க்கும் அதிசயம்

அடடா
எத்தனை எத்தனை
ஆரவார ஆனந்தம்

விழுகிறாய் விழுகிறாய்
ஆனால்
சுவாரசிய முரணாய்
எழுகிறாய் எழுகிறாய்
எண்ணங்களில் இதயங்களில்

சூரியன் விழுந்தால்
பூமிக்கு உறக்கம்

முகில் விழுந்தால்
பச்சைக்கு விருப்பம்

நீ விழுந்தாலோ
உயிருக்கும் கர்ப்பம்

பறந்து பறந்து
தரையில் இறங்கும் தேவதையே

உன் திரவ தேகம் மட்டும்தான்
என்றும் என்றென்றும்
புதிது புதிது

ஓர் ஏரி
மற்றோர் ஏரியின் மடியில்
ஆறாத ஏக்கத்தில்
தீராது விழும்
ஜென்ம ஜென்ம தாகமே

கடல்முன் நின்றால்
மனம் அமைதி கொள்ளும்

உன்முன் நின்றால்தான்
மனம் காதலாய்ப் பொங்கிக் கொள்ளும்

விழுந்துகொண்டே இருக்கும்
உன்னைக் கண்டால்
எழுந்துகொண்டே உயரும்
தன்னம்பிக்கைதான்
அத்தனைக்கும் மேலான

அதிசயம் அதிசயம்
அதிசயத்திலும் அதிசயம்

No comments: