மழை பெய்துகொண்டிருக்கிறது

எந்தத்
தமிழச்சியின்
காற் சிலம்பிற்காக
தரை இறங்குகின்றன
இந்தத்
தண்ணீர்ப் பரல்கள்

வைரமணித் திவலைகளை
முகிலின்
முப்பத்து முக்கோடி
விரல்களுக்கும் இடையில்
இனிப்பாய்ப் பொழியும்
கருணைக் கரங்கள்
யாருக்குச் சொந்தமானவை

பாலை வெடிப்புகளின்
வறட்சி நிறுத்தம் கோரும்
சமாதானத் தூதாகப்
பொட்டல்
மொட்டுகளின் மீது
கொட்டும்
பொன்மழை மகரந்தங்கள்
யாருக்குச்
சொந்தமானவை

மழை
பெய்துகொண்டிருக்கிறது

காற்று விரல்களால்
கடல் நீரைச் சுத்திகரித்துத்
தன் நிலா முகத்தைக்
கழுவிக் கொள்கிறாள்
ஆகாய தேவதை

அவள்
விரலிடுக்கின் வழியாக
உதிரும் நீர்ப் பூக்களிலெல்லாம்
அடடா...
தேன் தேன் தேன்

மழை
பெய்துகொண்டிருக்கிறது

இதழ்களிலிருந்து
நழுவினால் முத்தம்

இதயத்திலிருந்து
நழுவினால் காதல்

மலையிலிருந்து
நழுவினால் அருவி

மேகத்திலிருந்து
நழுவினால் மழை

ஒவ்வொரு முறையும்
ஆனந்தச் சந்தம்

ஒவ்வொரு துளியிலும்
இளமையின் உச்சம்

மழை
பெய்துகொண்டிருக்கிறது

அலையலையாய்
அஞ்சலெழுதும் கடல்
மேகமாய் எழுந்து
நிலமேனியில்
சில்லென்று பொழியும்
காதல் இச்சுக்கள்
மழை

உடல் முழுவதும்
ஓடும் ரத்தம்
உப்புக்கரித்தாலும்
முத்த எச்சில் மட்டும்
இனிப்பாய் இருப்பது
மனிதருக்கு மட்டுமல்ல
கடலுக்கும்தான்

மழை
பெய்துகொண்டிருக்கிறது

மழைத்துளியாய்ப் பிறந்து
மேக மடிகளிலிருந்து
தொப்புள் கொடியைத்
தொல்லையில்லாமல்
துண்டித்துக்கொண்டு

நழுவி நழுவி
பரந்த ஆகாய வெளியின்
குளிர்ந்த காற்றில்
சறுக்கிக்கொண்டு

அடங்காத ஆவலோடு
குப்புறக் குதித்துத்
தாய் மண் முத்தமிட்டு

அதன்
எச்சிலாய் மீண்டும்
ஐக்கியமாவதைச்
சிந்தித்தாலே சிலிர்க்கிறது

அடுத்ததொரு
சறுக்கு விளையாட்டுக்கு
ஆவலாய்க்காத்திருக்கும்
அழிவில்லாத
அப்படியோர் மழைத்துளியாய்ப்
பிறப்பதே
இந்த இதயத்தின் ஆசை

மழை
பெய்துகொண்டிருக்கிறது

எந்தக்
கட்டுப்பாட்டையும்
தனக்குள்
விதித்துக் கொள்ளாமல்

மழை
பெய்துகொண்டிருக்கிறது

அதனால்
அது
அழகாய் இருக்கிறது

இயற்கை
என்றுமே அழகானது

உண்மைக்குக் கிடைக்கும்
விருதல்லவா
அழகு

மழை
பெய்துகொண்டிருக்கிறது

நாம் எப்போது
பொழியப் போகிறோம்
முழுச் சுதந்திரமும் கொண்ட
ஓர் இயற்கை மழையாக

மழை
பெய்துகொண்டிருக்கிறது