***** 17

தஞ்சாவூர்




என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கி விடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டி வைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
        வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
        தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
        கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
        பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
        திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
        மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
        விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
        பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
        ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
        கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
        நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
        விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
        வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
        கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
        சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
        தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
        அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
        சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
        பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
        எழில்காட்டும் தஞ்சாவூர்

அன்புடன் புகாரி

12 comments:

Unknown said...

சூப்பர் கவிதை!! தஞ்சையின் எல்லாச் சிறப்புகளையும் அழகாக பட்டியலிட்டுள்ளீர்கள்...அருமை!! ஒரத்தனாடு எங்கள் முன்னோர்களின் ஊர்!!

நாடோடி இலக்கியன் said...

நம்ம ஊரைப் பத்தி மிகவும் அழகாக எழுதியிருக்கின்றீர்கள்.ஆமாம் நீங்கள் ஒரத்தநாடு தானா,நானும் பக்கத்து ஊர்தான்.

Unknown said...

ஆமாம் நாடோடி இலக்கியன்,

நான் ஒரத்தநாட்டுக்காரனேதான்.

http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_5644.html

இந்த என் இடுகையையும் பாருங்கள். ஒரத்தநாட்டைப்பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறேன்.

நீங்கள் எந்த ஊர்? கொஞ்சம் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.

அன்புடன் புகாரி

Unknown said...

நன்றி தஞ்சாவூரான்,

கிட்டத்தட்ட எனக்கும் ஒரத்தநாடு முன்னோர்கள் ஊர் என்பதுபோல்தான் ஆகப்போகிறது!

நான் பிறந்தது வளர்ந்தது பள்ளியில் படித்தது எல்லாமே ஒரத்தநாடுதான். ஒரத்தநாடு என்ற என் பதிவைப் பாருங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி

அன்புடன் புகாரி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தஞ்சையைப் பற்றிய தங்கள் கவிதை அருமையிலும் அருமை!
நன்றாக ரசித்தேன்!!

தாங்கள் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவரா? மகிழ்ச்சி!

நானும் தஞ்சை மாவட்டத்துக்காரன் தான்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Unknown said...

வருக வருக ஜோதிபாரதி

இன்னுமொரு சோழத்தோழர் இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நீங்கள் தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊர்?

அன்புடன் புகாரி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நான் பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டியைச் சேர்ந்தவன்.


அன்புடன்,
ஜோதிபாரதி.
http://jothibharathi.blogspot.com

Unknown said...

ஓ அத்திப்பட்டியா, நன்று
என் மனைவி ஊர் பட்டுக்கோட்டைதான்

=======
பாமரனுக்கும்
புரியாமல்
படித்தவனுக்கும்
புரியாமல்
பண்டிதனுக்கும்
புரியாமல்
படைத்தவனுக்கு
மட்டுமே
புரியும்
கவிதைகள்
வெடிக்காத
பட்டாசுகள்
====

இந்த வரிகளை உங்கள் வலைப்பூவில் இட்டது மிகநன்று

அன்புடன் புகாரி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர் மாதங்கிக்குதான் நன்றி சொல்லவேண்டும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Unknown said...

மாதங்கி தந்த வரிகள் என்று அறிவேன் ஜோதிபாரதி. அதை நீங்கள் எடுத்து இட்டதற்கு என் சிறப்புப் பாராட்டுகளைத் தந்தேன்

உங்கள் உரையாடலுக்கு நன்றி ஜோதிபாரதி

அன்புடன் புகாரி

cheena (சீனா) said...

நண்பரே !! - நான் பிறந்தது தஞ்சை. 12 ஆண்டு வளர்ந்ததும் அவ்வூரிலேதான். பின் 45 ஆண்டுகளாக மறந்ததும் அவ்வூரே. என்ன செய்வது. ஒரு முறை போக வேண்டும்.

Unknown said...

இருவரும் சேர்ந்தே போகலாம் சீனா!

நானும் போய் ரொம்ப காலம் ஆச்சு

அன்புடன் புகாரி