***19

ஆடுகளக்கோடுகள்


ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில்
என் கண்களை ஆடவிட்டேன்

மைதானச் சுறுசுறுப்பால்
வியப்பு மூளையிலாட
உதைபடும் பந்தைக் கண்டு
பரிதாபம் மனதிலாடியது

காலங்காலமாய்ப் பின்னப்பட்டு
பந்தின் எல்லைக்கோடுகள்
கடுமையாய் வரையறுக்கப்பட்டிருந்த
அந்த விளையாட்டில்...
கோட்டைத் தாண்டவிடாமல்
தரைக்கும் வானுக்குமாய்
புழுதி பறக்க பந்தைத்
பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்

பாவம் பந்து
உள்காற்று இருக்கும்வரை
கோட்டைவிட்டு வெளியேற வழியற்று
மேனியெங்கும் ரத்தக்கோடுகளோடு...

ஆர்வத்தோடு
பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் கூட்டம்
தடுப்பவனைத் தாண்டி
கோட்டைக் கடந்து
பந்து வெளியில் விழுந்து
ஒரு சிறு பொழுதேனும்
அமைதி கண்டபோதுதான்
உற்சாக மிகுதியால்
கைதட்டிக் காதைப் பிளந்தார்கள்

அறிந்துதான் தட்டுகிறார்களா
என்ற ஐயத்தோடு
நானும் கைதட்டினேன்

2 comments:

சீனா said...

அன்பின் புகாரி

அருமை அருமை - கவிதை அருமை

காற்று உள்ளிருக்கும் வரை நாம் படும் பாடு - சொல்ல இயலாது

உலக இயல்பின் வரைமுறைக்குள் உழலும் நாம் உதை படுகிறோம்

கோட்டைக்கடந்து சற்றே அமைதி பெற நினைத்தால் உலகம் மாறாக நினைக்கிறது

எண்ணமும் எழுத்தும் நன்று நண்ப புகாரி

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
---------------------------------

பூங்குழலி said...

பந்தைக் கருப்பொருளாக்கியது அருமை .

ஆர்வத்தோடு
பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் கூட்டம்
தடுப்பவனைத் தாண்டி

கோட்டைக் கடந்து

பந்து வெளியில் விழுந்து
ஒரு சிறு பொழுதேனும்
அமைதி கண்டபோதுதான்
உற்சாக மிகுதியால்
கைதட்டிக் காதைப் பிளந்தார்கள்

அருமை