***** 18 
ஒரு கவிஞன் எழுதிக்கொண்டிருக்கிறான்

இறுக்கப் பாறை இடுக்குகளிலிருந்து
கசிந்து கசிந்து வளர்கிறது
பேரிரைச்சல் கொள்ளப்போகும்
மென்மையான ஓர் உயிர் அருவி

எதிர்பாராத திடீர்த் தாக்குதலால்
இடிபட்ட மேகத்தின் தலையிலிருந்து
வெடித்துத் தெறிக்கிறது
சக்தி வாய்ந்த மின்னல் கீற்றுகள்

இரவின் கண்ணீர் ஏந்திச் சேமித்த
அதிகாலைப் பச்சை இலைகள்
சொட்டுச் சொட்டாய் வடிக்கின்றன
பன்னீர்த் திவலைகள்

இயல்பு மாறாமல் தன் திசைகளில்
அதிவேகம் பயணிக்கும் மின்சாரம்
சுருள்கம்பி இழைகள்
குறுக்கிடும்போதெல்லாம்
பீய்ச்சுகிறது வெளிச்ச விருந்து

கரிப்புகளையும் சாதுர்ய அலகால்
நீண்டு உறிஞ்சும் வான அன்னம்
தீண்டலில் சிலிர்க்கும் பொழுதுகளில்
நிலம் பொழிகிறது அமுதம்

தடைகளில் அடிபடும் அவலத்தில்
குழிகளில் விழுந்தெழும் துயரத்தில்
வேதனையில் புலம்புகிறது காற்று
காதுகளில் பெயர்கிறது இசை

ஒரு கவிஞன்
எழுதிக்கொண்டிருக்கிறான்

7 comments:

Agathiyan John Benedict said...

ஓவ்வொரு உலக நடப்பிலும் ஒரு கவிதையைக் காண்பவன் தான் கவிஞன். உங்களுக்கு அந்தக் கவிக் கண்கள் இருப்பது கண்டு பொங்குது எந்தன் மனசு. சோகம் தொக்கியவனின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுப்பதைப் போல உங்களின் கவிக் கண்களில் ஊற்றெடுக்கிறது கவிதைப் பெருமழைகள். உம் கவிதை மழைகள் நில்லாது பொழியட்டும்.

ஒளியவன் பாஸ்கர் said...

எழுதுங்க எழுதுங்க... கலக்கல் கவிதை

துரை said...

நான் கடந்தவாரம் குற்றாலத்தில் இருந்தேன்
இன்றுநான் கோவையிலிருந்தாலும் உங்களின் கவிதையை படித்துக்கொண்டிருக்கும்போதே குற்றாலம் போய்விட்டேன்
500 கி.மி தூரத்தை 5 நொடியில் கடக்கவைத்த ஆசானுக்கு நன்றி

கவிநயா said...

அருமை அருமை. இன்ன வரின்னு சொல்ல முடியாம எல்லாமே அழகு

சீனா said...

அன்பின் புகாரி

இடுக்குகளில் கசியும் துளிகள் பேரருவியாக மாறுகிறது
எதிர்பாரா இடியுடன் மேகத்தின் தலையில் இருந்து மின்னல்
நிலம் பொழியும் அமுதம்
தடைகளைக் கண்டு புலம்பும் காற்று

நீர் நிலம் காற்று வான் என ஐம்பெரும் பூதங்களையும் வைத்து அழகான கவிதை படைத்த புகாரி - நன்று நன்று கவிதை நன்று


இரவின் கண்ணீர் ஏந்திச் சேமித்த
அதிகாலைப் பச்சை இலைகள்
சொட்டுச் சொட்டாய் வடிக்கின்றன
பன்னீர்த் திவளைகள்


வளமான கற்பனை

நட்புடன் ..... சீனா

பூங்குழலி said...

கவிதை மொத்தமும் அழகு

ரிஷான் said...

அருமையான கவிதை நண்பர் புகாரி.
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.