***35

கண்ணீருக்கு வணக்கம் சிந்துவோம்


கண்ணீர் துளிகள்தான்
சந்தோசக் கோலங்களின்
சரியான புள்ளிகள்

விழியின் ஒவ்வொரு துளியும்
வாழ்வின் பொருள் சொல்லும் கவிதை

கண்ணீர் சிந்தாத கண்களில்
வாழ்க்கையின் ஒளி வீசுவதே இல்லை

ஒரு ஜீவனின்
படைப்பு ரகசியங்கள்
அதன் கண்ணீரில்தான் மிதக்கின்றன

ஒரு துளி கண்ணீரில்
நம் முழு உயிரின் பிம்பமும் தெரிகிறது

கன்னம் அழகாக இருப்பது
கண்ணீர் பாதங்களை மேடை ஏற்றும்
பாக்கியம் பெறத்தான்

கண்ணீர்தான்
கடல்தாயின் உறவினைச்
சொல்லி நிற்கும் பனிக்குடப் பிணைப்பு

கண்ணீரில்
புனிதமான உறவுகள் பூக்கின்றன
வெற்று உறவுகளும்
விரும்பத்தகு உறவுகளாகின்றன

கண்ணீர்
கண்களிலிருந்து வெளிவரவில்லை
உயிரிலிருந்து கசிகிறது

கண்ணீருக்கு
வணக்கம் சிந்துவோம்
வாழ்த்தி விழி பொழிவோம்

Comments

சிவா said…
கண்ணீரை பற்றி இவ்வளவு விளக்கமா .. இது நாள் வரையில் அது பெண்களின் மிகச் சிறந்த ஆயுதம் என்று தான் எண்ணி இருந்தேன் ... இன்று தெளிவு பிறந்தது..


லேசாக துளிர்த்த கண்ணீர் துளியோடு நன்றிகள் பல ஆசான்
பூங்குழலி said…
//கன்னம் அழகாக இருப்பது
கண்ணீர் பாதங்களை மேடை ஏற்றும்
பாக்கியம் பெறத்தான்//

அருமையான கவிதை புகாரி
கண்ணீர் சிந்துவது கோழைத்தனம் என்றே பரவலாக கருதப்படுகிறது ...பெண்களுக்கான
ஆயுதமாகவும் .....உயிரின் பிம்பம் என்று அழகாய் சொன்னீர்கள்
ஆயிஷா said…
கண்ணீர் கசிவது சோகங்களைப் புதைப்பதற்காக மட்டும் அல்ல. உறவுச் செடியை உலராமல் காப்பதற்குமே இல்லையா ஆசான். பல நேரங்களில் கண்ணீர் என்பது நம் மனதின் பாரத்தைக் குறைக்கின்றது என்பது என் அனுபவம்.
அன்புடன் ஆயிஷா
அன்பின் புகாரி

கண்ணீரைப் பற்றிய அருமையான கவிதை. கண்ணீர் எதற்கும் பயன்படும். ஆனந்தம் துக்கம் இரக்கம் நெகிழ்வு அனைத்து உணர்ச்சிகளுமே கண்ணீரால் வெளிப்படுத்தலாம்

நல்வாழ்த்துகள் புகாரி
Vijay said…
//கண்ணீரில்
புனிதமான உறவுகள் பூக்கின்றன
வெற்று உறவுகளும்
விரும்பத்தகு உறவுகளாகின்றன

கண்ணீர்
கண்களிலிருந்து வெளிவரவில்லை
உயிரிலிருந்து கசிகிறது//

கண்ணீருக்கு உங்கள் கவிவரிகள் புது அர்த்தங்கள் கூறுகின்றன
அருமை புகாரி

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்