911 Twin Towers Terrorism



நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்

18 காதலியின் கடிதம்


என்னுயிர்க் காதலனே
காதல் என்ற
பரவசப் பட்டாம்பூச்சியை
இந்தப் பெண்மைக்குள்
பறக்க விட்ட
என்னழகுக் கள்வனே

துளையில்லா என் இதயத்துள்
ஊரறியாத் தருணத்தில்
தேர்பூட்டி நீ மெல்ல
ஊர்ந்ததுதான் எப்படி

என் நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய விழிகளில் அசைவில்லை
உன் முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச் சில்லானேன்

நீ உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு சிறகடிக்கும்
உன் வண்ணத்து மொழிகள்

நீ சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள் சிக்கவைக்கும்
உன் கன்னத்துக் குழிகள்

நீ அசைய அசைய
அங்குமிங்குமாய்த் தெறிக்கும்
பொற் கவிதை வரிகள்

அப்பப்பா
நான் எப்படிச் சொல்ல

நீ என்னை
அகலும் இமைப்பொழுதோ
இந்தச் சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய் அலறிக்கொண்டு
உயிரின் வேர்களில்
ஓங்கி ஓங்கி இடிக்க
மொத்தமாய்த் தகர்கின்றன
எனக்குள் அத்தனையும்


என் ஆருயிர்க் காதலனே

நீ என் உயிருக்குள்
உதடு வைத்து
ஒத்தி ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச் சுற்றி
புரியாத காற்றொலிகள்
ரிதம் மீட்டுகின்றன

அவை மல்லியைப்போல்
என் மனம்தொட்டு
மங்கா மணம்வீச நீ
எந்நாளும் என்னருகே
இருப்பாயா என்
காதலனே காதலனே காதலனே

என்று நான் உன்முன்
உருகி உருகி நின்றதெல்லாம்
சத்தியம் சத்தியம் சத்தியமே

ஆனால்
என் காதலனே

என் இதயத்தின்
ஒவ்வோர் அணுவையும்
ஆக்கிரமித்த உன்னையும்
உன் இதயத்தின்
ஒட்டுமொத்தத் துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான என்னையும்

இன்று நானே
சிலுவையில் அறைந்துவிட்டேன்

காதல் என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே சமுதாயம் என்ற
சாத்தான் தானே வலிமையானவன்

அவன் சட்டங்களுக்குள்
சிக்கிக் கிடக்கும்
பிணக் குவியல்களில்
இன்று நானும் ஒருத்தி

முனகவும் அனுமதியில்லாத
இந்தப் பெண்மை
மௌனிப்பதையே துறவாய்ப் பூண்டது

இன்று எனக்குள்
பரிதவித்துத் துடிக்கும்
ஒவ்வோர் அணுவும் நீ
என்னை மறந்து எங்கேனும்
நிம்மதியாய் வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது தவித்துக்கொண்டிருக்கும்
நான் மண்ணுக்குள் புதைந்த பின்னும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

YouTube கவிஞர் வைகைச்செல்வி



கவிஞர் வைகைச்செல்வியின் சிறப்புக் கருத்துரை

YouTube ஒன்றல்ல சொர்க்கம் இரண்டு



அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே. எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா

YouTube கவிஞர் அண்ணா கண்ணன் கருத்துரையில்

திசைகள் விழாவில் கவிஞர் அண்ணா கண்ணன் அவர்களின் கருத்துரை

YouTube நியூயார்க் நியூயார்க்

கட்டிடங்கள் அல்ல அவை எழுந்து நிற்கும் வீதிகள் - நியூயார்க் நியூயார்க்

வாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை

வாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை - புனிதமானது

***** 17

தஞ்சாவூர்




என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கி விடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டி வைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
        வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
        தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
        கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
        பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
        திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
        மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
        விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
        பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
        ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
        கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
        நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
        விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
        வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
        கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
        சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
        தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
        அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
        சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
        பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
        எழில்காட்டும் தஞ்சாவூர்

அன்புடன் புகாரி

கவிஞர் இந்திரனின் பார்வையில்



கவிஞர் இந்திரனின் சிறப்பு விமரிசனம் - சரணமென்றேன் காதல் கவிதை நூல் - கனடா கவிஞர் புகாரி

YouTube வேங்கூவர் கனடா



டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் வேங்கூவர் சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 3



சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன். விமரிசகர்கள் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 2



சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன். விமரிசகர்கள் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 1

சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரியை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன்.

*பொங்கல் வாழ்த்துக்கள்*

இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.




மஞ்சள் கொத்தோடு
        மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
        எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
        வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
        பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
        கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
        குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
        ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
        பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
        வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
        பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
        தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
        அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
        மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
        பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
        அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
        நிலம்புகழும் பொங்கலிது

YouTube கவிமுகம் அறிமுகம் புகாரி கனடா

திசைகள் விழா கவிமு்கத்தின் அறிமுகம் கவிஞர் புகாரி கனடா - சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து - தலைமை திசைகள் மாலன் - விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி வைகைச்செல்வி அண்ணாகண்ணன் - சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல்


*****12

மௌனமே உனை நான் நேசிக்கிறேன்

மௌனமே....
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்

மௌனம் கலையக் கலைய
வாழ்க்கை கலைந்து போகிறது

மௌனம் கலையக் கலைய
உணர்வுகள் உதிர்ந்து போகின்றன

மௌனம் கலையக் கலைய
அர்த்தமான அத்தனையும்
அனர்த்தமாகிச் சிதைகின்றன

மௌனம் கலையக் கலைய
உயரே உயர்ந்த மதிப்பீடுகள்
மெல்ல மெல்லச் சரிகின்றன

மௌனம் கலையக் கலைய
உதடுகளை உதிர்த்துவிட்டு
விழிகள் ஊமைகளாகின்றன

முத்தத்திலும்
நான்கு உதடுகளும்
ஒரு யுத்தத்தில் சிக்கிக்கொள்ளும்
மௌன முத்தமே மிக அழுத்தமானது

மௌன ரதங்களில்தான்
காதல் கற்பிழக்காமல்
உலா விருகிறது

மௌன முறங்களால்தான்
துயரம் துரத்தப்படுகிறது

மௌனச் சுவர்களால்தான்
பல யுத்தங்கள்
துவங்கப் படாமலே இருக்கின்றன

மௌன மூலிகைதான்
மனக்காயங்களின் மருந்தாகிறது

மௌனத் தழுவல்களில்தான்
அன்பு விரிந்து பரவுகிறது

மௌன மத்தியில்தான்
மனசாட்சியே விழித்திருக்கிறது

மௌனமே
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்

10

வார்த்தைகள் ஒன்றை ஒன்று
கவ்விக் கவ்விக் கூத்தாட
வேடிக்கை பார்க்கிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை

பல்லாயிரம் சிலிர்ப்புகளை
வார்த்தைகளாய் இறைத்து
அவற்றின் மீது நடந்து நடந்து
கரைந்து போகிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***10

யார் அனாதை

யாருமற்றுப் போனாயோ - கண்ணே
      ஏக்கவிழி அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ - கண்ணே
      விரலெறிந்த நகச்சிமிழோ

யாருந்தான் அடிக்கலியே -கண்ணே
     ஏனழுது நிற்கின்றாய்
யாருந்தான் அடிக்கலியே - கண்ணே
     அதற்கழுதோ நிற்கின்றாய்

தெருவோரம் கிடந்தாலும் - கண்ணே  
     தெய்வத்தின் உயிர்தானே
வருவோரும் போவோரும் - கண்ணே
     இருப்போரின் தொடர்தானே

வயிறெல்லாம் வேறென்றால் - கண்ணே
     உறவென்றால் பொருளுண்டோ
துயருள்ளம் கதறுகையில் - கண்ணே
     துணைநிற்கும் தூணுண்டோ

கையோடு கைகுலுக்கு - கண்ணே
     கைவளர்ந்து வான்கிள்ளும்
கையிரண்டும் உனதென்று - கண்ணே
     கர்வமனம் புவிவெல்லும்

மெய்யான உறவுதேடி - கண்ணே
     பொய்யான பூதலத்தில்
மெய்யறியும் வேளையுந்தன் - கண்ணே
     கைதானே கவசமாகும்

இடதுகையோ யாசிக்க - கண்ணே
     இல்லாளும் யோசிக்க
வலதுகையும் வந்துதானே - கண்ணே
     வாட்டத்தைத் தூசாக்கும்

கொடுக்கின்ற மாந்தருக்கு - கண்ணே
     எடுப்போர்கள் உறவாவர்
கொடுப்போனாய் நிலைத்துவிடு - கண்ணே
     குறையில்லா உயிராவாய்

*** 20  உலகோடு

என்னை
எனக்குப் பிடித்தபோது
இந்த உலகம்
எனக்குப்
பிடிக்கவில்லை

இந்த உலகம்
எனக்குப்
பிடித்தபோது
என்னை எனக்குப்
பிடிக்கவில்லை

09

உயிரின் சூடு
உதடுகளில் முகாமிட்டு
உணர்வுகளை வேட்டையாடி
உள்ளத்தைச் சமைக்க
ஒரு மலைப்பிரதேசத்தின்
பனி மூடிய உச்சியில்
உன்னைத் தொட்டு
நான் முதல் முத்தமிட்டேன்

எத்தனையோ
முத்தங்களுக்குப் பின்னும்
பத்திரமாய் பதுக்கிவைத்து
என்னிடம் சொல்லி சிலிர்க்கும்
உன் ஞாபகங்களுக்குள்
என் காதல் கூடுகட்டி
குஞ்சு பொரித்து
தலைமுறைகள் காணும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***19

ஆடுகளக்கோடுகள்


ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில்
என் கண்களை ஆடவிட்டேன்

மைதானச் சுறுசுறுப்பால்
வியப்பு மூளையிலாட
உதைபடும் பந்தைக் கண்டு
பரிதாபம் மனதிலாடியது

காலங்காலமாய்ப் பின்னப்பட்டு
பந்தின் எல்லைக்கோடுகள்
கடுமையாய் வரையறுக்கப்பட்டிருந்த
அந்த விளையாட்டில்...
கோட்டைத் தாண்டவிடாமல்
தரைக்கும் வானுக்குமாய்
புழுதி பறக்க பந்தைத்
பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்

பாவம் பந்து
உள்காற்று இருக்கும்வரை
கோட்டைவிட்டு வெளியேற வழியற்று
மேனியெங்கும் ரத்தக்கோடுகளோடு...

ஆர்வத்தோடு
பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் கூட்டம்
தடுப்பவனைத் தாண்டி
கோட்டைக் கடந்து
பந்து வெளியில் விழுந்து
ஒரு சிறு பொழுதேனும்
அமைதி கண்டபோதுதான்
உற்சாக மிகுதியால்
கைதட்டிக் காதைப் பிளந்தார்கள்

அறிந்துதான் தட்டுகிறார்களா
என்ற ஐயத்தோடு
நானும் கைதட்டினேன்

08

பிச்சைக்காரர்களுக்கெல்லாம்
தேடிச்சென்று காசுபோடுகிறான்
உலக உயிர் வதைகளை
எண்ணியெண்ணி உருகுகிறான்
புல்லும் பூண்டும்கூட
காயப்பட்டுவிடக் கூடாதென்று
கதறுகிறான்

வேகமாய் ஓடிக்கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்

ஈர நெஞ்சனாய்க் குமிழுடைகிறான்
கருணை விரிக்கிறான்
இவன்
காதலிக்கத் தொடங்கிவிட்டான்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****08

வேண்டும் அந்த வரம்



வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்

காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்

எட்டு மாடி கட்ட வேண்டாம்
எக்கச் சக்க அறைகள் வேண்டாம்
பட்டுத்திரைச் சீலை வேண்டாம்
பளபளப்புச் சுவர்கள் வேண்டாம்

கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்

கழுத்துப் பட்டை எனக்கு வேண்டாம்
கோட்டு சூட்டு எதுவும் வேண்டாம்
கப்பல் விட்டுக் காற்றில் ஏறி
கண்டம் தாண்டிப் போக வேண்டாம்

பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்

குடை விரிக்கும் கண்கள் வேண்டாம்
கொட்டும் அருவிக் கூந்தல் வேண்டாம்
நடை நிமிர்த்தும் படிப்பு வேண்டாம்
நல்லினியப் பேச்சும் வேண்டாம்

உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்

இப்படியாய் இருந்த தெல்லாம்
எப்படித்தான் மாறிப் போச்சோ
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அதுக்கு மேல கொடியை நட்டு

ஒய்யாரமா
வளந்து வளந்து
உசுரைத் தின்னு
வாழுதோ

வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ

தோண்டத் தோண்டப்
புதையல்கள்
தொலைந்து போகும்
இதயங்கள்

வேண்டாம் வேண்டாம் ஆசைகள்
வேதனையின் ஊற்றுக்கள்
வேணும் எனக்கு ஒற்றை வரம்
விபரமான மேன்மை வரம்

வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்
***** 18 
ஒரு கவிஞன் எழுதிக்கொண்டிருக்கிறான்

இறுக்கப் பாறை இடுக்குகளிலிருந்து
கசிந்து கசிந்து வளர்கிறது
பேரிரைச்சல் கொள்ளப்போகும்
மென்மையான ஓர் உயிர் அருவி

எதிர்பாராத திடீர்த் தாக்குதலால்
இடிபட்ட மேகத்தின் தலையிலிருந்து
வெடித்துத் தெறிக்கிறது
சக்தி வாய்ந்த மின்னல் கீற்றுகள்

இரவின் கண்ணீர் ஏந்திச் சேமித்த
அதிகாலைப் பச்சை இலைகள்
சொட்டுச் சொட்டாய் வடிக்கின்றன
பன்னீர்த் திவலைகள்

இயல்பு மாறாமல் தன் திசைகளில்
அதிவேகம் பயணிக்கும் மின்சாரம்
சுருள்கம்பி இழைகள்
குறுக்கிடும்போதெல்லாம்
பீய்ச்சுகிறது வெளிச்ச விருந்து

கரிப்புகளையும் சாதுர்ய அலகால்
நீண்டு உறிஞ்சும் வான அன்னம்
தீண்டலில் சிலிர்க்கும் பொழுதுகளில்
நிலம் பொழிகிறது அமுதம்

தடைகளில் அடிபடும் அவலத்தில்
குழிகளில் விழுந்தெழும் துயரத்தில்
வேதனையில் புலம்புகிறது காற்று
காதுகளில் பெயர்கிறது இசை

ஒரு கவிஞன்
எழுதிக்கொண்டிருக்கிறான்

07

கடும்பாலை வனத்தில்
கண்ணயர்ந்து உறங்கலாம்
கொடும்பனி பொட்டலில்
ஆடையின்றி கிடக்கலாம்
கரை தெரியா நடுக்கடலில்
நீச்சல் தெரியாமல் விழலாம்
கிரகங்கள் தென்படாத வானில்
ராக்கெட் இன்றி பறக்கலாம்
இன்னும்
பார்க்க ஒளி
பருக நீர்
நிற்க நிலம்
சுவாசிக்கக் காற்று
எதுவும் தேவையில்லை
ஆனால்
காதலில்லாமல் எப்படி
ஒரு நொடி நகர்த்துவது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*****17 

உணர்வினைத்தா

சுத்தமாய்ப்
புணர்ந்தெறியும்முன்
கட்டிக்கட்டி அணைக்கிறாய்
தொட்டுத் தொட்டு
இங்கும் அங்குமாய்
முத்தம் முத்தமாய் இடுகிறாய்
ஆனால்
அனுபவிக்கத் தெரியவில்லையே
எனக்கு

என்னை நீ
அனுபவிப்பதைப்போல்
உன்னை நான் அனுபவிக்கும்
உணர்வினைத்தா என் மரணமே

07 பூட்டிவைத்த உணர்வுகள்


உள்
ஓர் அலுப்பு சுகமறியாத
உணர்வுகளின் பிரசவ அறை

உணர்வுகளோ
பிறந்த கணமே தாயைத் தகிக்கும்
நெருப்புக் குஞ்சுகள்

வெப்பம் தாளாமல்
வெளியேற்றும் வழிகேட்டு
மனம் அறிவுக்கு அனுப்பும்
ஓர் அவசர விண்ணப்பம்

கூடாதென்று கூக்குரலிட்டு
வழிகளை அடைத்து வாசலை மூடி
வைராக்கியனைக் காவலிடும்
அறிவு

முட்டி மோதி நினைவுகளை
நிமிசம் தவறாமல் அழைத்து
சிந்தனையை நச்சரித்து
மறுப்பு வார்த்தைகளை மிதித்து
சபல சந்தர்ப்ப மரங்கொத்திகள்
கொத்திக் கிழித்த பலமற்றத் தளங்களைப்
பயன்படுத்தத் துடிக்கும் உணர்வுகள்

இமைகளை வெட்டி வீசிவிட்டு
முழு விழியையும்
விளக்கெண்ணையில் நீராட்டி
விறைப்பாய்க் காவல் காக்கும்
வைராக்கியம்

கால நார் காரிய சிரத்தையில்
நிமிசங்களைச் சேகரித்துக்
கனமான மணிமாலைகளைத்
தொடுத்துக் கொண்டிருக்க

பிறந்து பிறந்து
அடர்ந்த உணர்வுகளோ
நிமிசங்களைப் பலவந்தமாய்ப் புணர்ந்து
சடசடவென்று பிரசவித்த
நெருப்பு நகம் பூட்டிய ஊசி விரல்களால்
உயிரையே குத்தி
வைராக்கியக் காவலனைச் சாம்பலாக்கிப்
பாய்ந்து...
படர்ந்து...
வடிந்து...
வீரமிழக்கும்

பின்
காற்றுத் துப்பிப் போட்ட
பலூனாய் மனம்
கண்ணீர்க் கண்களை
உடைத்து விட்டுக் கொண்டு அறிவு

06

முதல் முத்தத்தால்
மூச்சுக் குழாய்களும்
தங்கமுலாம் பூசிக்கொண்ட
அந்த சிலிர்ப்பு நாளில்
எல்லாமுமாய் ஒருவர்
எப்படித்தான் இருப்பதென்றாய்

பின்னெல்லாம்
ஒவ்வொரு தருணத்திலும்
தாயாய் மகளாய் தோழியாய்
என்று நொடிதோறும் மாறும்
உன் பரிமாற்றங்களில்
நீயே ஆகிவிட்டாய்
எனக்கு எல்லாமுமாய்

யாதுமாகி நிறையாது
காதலில்லை என்று
அறிந்தனையோ கிளியே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

6 ஆண்டவனே கண்ணுறங்கு


யாராரோ யாரெவரோ
ஏதேதோ சொன்னாரோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

தேரோட்டிப் போனாலும்
தேர்மீதே போனாலும்
தெருவோரம் கிடந்தாலும்
திருவாகி நின்றாலும்

யாராரோ யாரெவரோ
ஏதேதோ சொல்வாரே
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

இருப்பவனோ ஒரு வீட்டில்
இல்லாதான் பல வீட்டில்
உனக்கென்று ஏன் வீடு
நீதானே பெரும் வீடு

ஆளுக்கொரு பேரு வெச்சு
ஆயிரமா வீடு கட்டி
ஆண்டவனே உனக்காக
ஆள்வெட்டிச் சாகையிலே

ஐயோன்னு அழுவாயோ
அடங்காமச் சிரிப்பாயோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

ஆண்டவனே உனக்கென்று
அறிமுகமும் ஒன்றல்ல
ஆண்டவனே உனக்கிங்கே
அடையாளம் பலகோடி

ஆண்டவனும் ஒருவனென்று
ஆளாளும் சொல்லுகிறார்
யாரென்று கேட்டாத்தான்
ஆளுக்கொண்ணு காட்டுகிறார்

யாரென்று முகங்காட்ட
நீயென்ன சின்னவனா
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

லாட்டரிக்குப் பத்து ரூபா
உண்டியலில் ஒத்தை ரூபா
ஆண்டவனே உன்னிடத்தில்
வேண்டுதலோ பலகோடி

எனக்கேநீ தாவென்று
எழுநூறு குரல்கேட்க
யாருக்காய்க் கொடுப்பாயோ
எப்பவும்போல் இருப்பாயோ

உண்டியலின் சில்லறைக்கு
உழைத்துத்தான் களைப்பாயோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

கோழியா முட்டையான்ன
கேள்விக்கோ பதிலில்லை
அறிவியலில் சொன்னதிலும்
அவ்வளவாத் தெளிவில்லை

கணக்குக்கு எட்டவில்லை
கற்பனைக்குச் சிக்கவில்லை
இறந்தவனும் சொன்னதில்லை
இருப்பவனும் கண்டதில்லை

ஆத்திகனோ துதிக்கின்றான்
நாத்திகனோ சிரிக்கின்றான்
பார்த்தவனே இல்லாமல்
பலகாலம் வாழ்கின்றாய்
.

எனக்குள்ளே நீ இருக்க
உனக்குள்ளே யார் இருக்கா
உனக்குள்ளே நான் இருந்தா
எனக்குள்ளே யார் இருக்கா

பூமிக்கோ வயசிருக்கு
சூரியனின் வயசிருக்கு
உனக்குமொரு வயசிருக்கா
உசுருன்னு ஒண்ணுருக்கா

அத்தனைபேர் சொந்தத்தில்
அனுதினமும் திண்டாட
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

எது உனக்குப் பேரென்று
எது உனக்கு முகமென்று
எது உனக்கு ஊரென்று
எது உனக்கு நாடென்று

வெட்டருவா வேல்கம்பு
பட்டப்பகல் வீதிகளில்
வெட்டித்தினம் ரத்தஆறு
பாய்ந்தோடி நிக்கையிலே

பக்தி கண்ட வேதனையில்
பழகிப்போன மௌனத்தில்
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

தடவைக்கொரு வேடமிட்டு
தரையிறங்கி நீயும் வந்து
ஒண்ணுஞ்செய்ய முடியாம
ஓய்ந்துபோய் விட்டாயோ

இன்று நீ எவரெவர்க்கோ
ஏதேதோ ஆகிவிட்டாய்
நேற்று நீ யாரென்று
அறிந்தோரும் யாரிருக்கா

நாளை நீ யாரென்று
அறியலாமோ ஆண்டவனே
அன்றைக்குக் கண்விழிப்பாய்
அதுவரைக்கும் கண்ணுறங்கு
16
கடவுளைக் கண்டுகொண்டேன்

முன்பே நிகழ்ந்துவிட்டதல்ல
தொடக்கம் இனிதான் வரவேண்டும்

இனிதான் வரப்போவதல்ல
முடிவு எப்போதோ வந்துவிட்டது

இரு வேறு புள்ளிகளல்ல
தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளிதான்

தொடக்கமும் முடிவும்
அறியத் தராத மாயம் பிரபஞ்சம்

பிரபஞ்சமே இறைவன்

05

கரையா நெடு இரவு முழுவதும்
மூச்சுமுட்ட உன்னை நினைத்துக்
கரைந்துவிட்டுத்தானே உறங்கப்போனேன்

கண்விழிக்கும் முன்பே
இமை தட்டித் திறவாமல்
இதயம் நுழைந்து
நினைவுகளை எழுப்பிவிட்டு
அது
கைக்குழந்தையாய்
மலங்க மலங்க விழிக்க
இப்படிக் கைதட்டிச் சிரித்தால்
எப்படி

என் பல்துலக்கும் முன்பே
உனக்கு நான் தேநீர் ஆகிறேன்

நீ
பருகப்பருக
நிரம்பி வழிகிறது
என் காதல் கோப்பை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

05 இணையம் என்றொரு வேடந்தாங்கலில்


இணையம் என்றொரு வேடந்தாங்கலில்
எத்தனை எத்தனை அஞ்சல் பறவைகள்

ஒவ்வோர் அஞ்சலும் உணர்வை ஏந்துது
உயிரில் கரைந்தே உறவைத் தேடுது

இணைய நட்பெனும் புனிதம் பூக்குது
இதய மொத்தமும் இனிப்பில் மூழ்குது

விழிகள் கொத்தாத உருவக் கனிகளை
விருப்பம் போலவே மனங்கள் செதுக்குது

கண்கள் காணாத நட்பில் வாழ்வதும்
கருத்தைக் குறிவைத்த கலப்பில் மலர்வதும்

உலகச் செய்திகள் அலசிப் பார்ப்பதும்
உள்ளூர்க் கதைகள் கிள்ளிச் சுவைப்பதும்

கவிதை கட்டுரை கொட்டிக் கொடுப்பதும்
கலைகள் பேசியே கரைந்து போவதும்

சின்னச் சின்னதாய்த் துணுக்கு மெல்வதும்
சிரிப்புச் சில்லறை அள்ளி இறைப்பதும்

தனிமைக் கொடுமையில் இனிமை நிறைப்பதும்
கருணை அன்புடன் கதைகள் கேட்பதும்

அழுகைத் துயரினில் அள்ளி அணைப்பதும்
எண்ண விரல்களால் கன்னம் துடைப்பதும்

முன்னம் முன்னூறு வருசம் தாண்டியே
முதிர்ந்து வந்ததாய் பந்தம் கொள்வதும்

நேற்று சிங்கையில் இன்று தஞ்சையில்
எங்கு நிற்பினும் இணைய மடிகளிள்

உள்ளம் பாடுது விரல்கள் ஆடுது
உயிரும் மாறியே அஞ்சல் ஆகுது

இணைய நதிகளில் தமிழும் வளருது
தமிழர் பண்புகள் தரணி நிறையுது

இதனை விஞ்சியோர் வரமும் உள்ளதோ
இணைக்கும் இணையமே என்றும் வாழ்க நீ
**15

முற்றும் என்பதும் தொடர்தான்

எவற்றுக்கும்
முடிவு என்பது ஓர் அபத்தம்

இந்தப் பிரபஞ்சம் முடிவற்றிருக்கும்போது
அதனுள் சுழலும் யாவும்
முடிவற்றவையே

மாற்றம் பெறுவதென்பதை
முந்தைய மாற்றத்திற்கான முடிவென எண்ணினால்
நொடியின் நுண்நொடிகளில் நிகழும் மாற்றங்கள்
ஓர் அதிநுண் நிகழ்வுகள்

அதிநுண் நிகழ்வுகளின் அதிவேக ஊர்வலம்
முற்றும் என்பதையே
மகா தொடர் என்று ஆக்கிச் சிரிக்கிறது
*****
04

ஆகாயத்தில்
சில நட்சத்திரங்கள்
தொலைந்து போகலாம்

ஆகாயமே
தொலைந்துபோகும்
நிகழ்வுதான்
காதல்

*காதலிக்கிறேன் உன்னை எப்போதும்*

அன்புடன் புகாரி

04 ஆண்மையை எப்போது உணர்ந்தேன்


பிள்ளைப் பிராயத்தில்
சிவந்த அல்லிக் குளத்துமேட்டில்
அரைக்கால் சட்டையில்
அரையணா இடைவெளியில்
அனாயாசமாய் நின்றுகொண்டே
சிறுநீர் வார்த்தபோது
நான் உணரவில்லை

பறக்கத் துடிதுடிக்கும்
குயிலிறகுக் கூட்டங்களாய்
கருத்தடர்ந்த அழகு மீசை
மேலுதட்டு மொட்டை மாடியில்
குப்பென்று வளர்ந்து நின்று
கம்பீரம் காட்டியபோது
நான் உணரவில்லை

மேற்குமலைத் தொடர்களாய்ச்
செழித்துத் திரண்ட தோள்கள்
வான் நிமிர்த்தி வாட்ட சாட்டமாய்
யானை நடை பயிலவைத்தபோது
நான் உணரவில்லை

அந்திவெயில் குடையின்கீழ்
குறுகுறுவென்ற கிளிக் கண்கள்
பலநூறு... கூட்டமாகக்
கொத்திக்கொத்தித் தேன்தின்று
குறும்பாகப் பார்த்தபோது
நான் உணரவில்லை

முட்டவந்த முரட்டுக் காளை
எட்டியோட முட்டி விரட்டி
நெஞ்சு வேர்க்க நின்றபோது
நான் உணரவில்லை

கல்யாண ஊர்வலத்தில்
மணமகன் கோலத்தில்
ஊரறிந்த நாயகனாய்
பேரின்பக் கண்கொதிக்க
ஊர் உலா வந்தபோது
நான் உணரவில்லை

நான் கருவான முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

பனிக்குடப் பிசுபிசுப்போடு
எட்டி இந்த உலகு பார்த்து
நானழுத முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

சட்டப்படிப் பெண்ணொருத்தியைப்
பட்டு மெத்தையில்
தொட்டுப்பார்க்கும் இரவுதான்
எனக்கு முதலிரவாம்

அடடா...
பாலுறவில் உள்ளதோ
நம் பண்பாடு?

அந்தச் சமுதாயப்
பண்பாட்டு இரவிலும்கூட
நான் உணரவில்லை

பின்
எப்போதுதான் உணர்ந்தேன்
நானென் ஆண்மையை?

என்னுயிர் தொட்டுத்
தன்னுயிர் கலந்து
புத்துயிரென்னும்
கருவோடு மிளிர்ந்தாள்

பெண்மை என்னும்
கர்வத்தோடு எழுந்தாள்

என் தாகத்திற்குத்
தாகத்தாலேயே
தண்ணீர் தந்த தேவமல்லி

என் மோகத்திற்கு
மோகத்தாலேயே
தீர்வு தந்த பவளமுல்லை

அப்போதுதான்
ஆம்... ஆம்...
அப்போதுதான் நான்
சத்தியமாய் உணர்ந்தேன்
என் ஆண்மையை

பெண்மையை உணர்த்துவது
ஆண்மையுமல்ல

ஆண்மையை உணர்த்துவது
பெண்மையுமல்ல

இயற்கையின் துணையோடு
இருவரும் சேர்த்துச் சமைக்கும்
உயிர்க்கரு என்ற
உன்னதக் கூட்டு முயற்சியே

இதில்
ஆண்மையும் ஆனந்திக்கும்
பெண்மையும் பூரிக்கும்

ஆண்மை பெண்மை
இரண்டும் ஒன்றாய்க் கலந்த
அழியா இயற்கையும்
பூத்துக் குலுங்கும்!
***14

வெட்கப்பட நேரமின்றி

சின்ன அலைகளின் முத்து நீர் விழுங்கி
முத்தமிடும் தென்றலை
எட்டி எட்டிப் பார்த்து
தெளிந்த நீரில் நீந்தித் திரியும்
சின்னஞ்சிறு தங்கமீனை
செதிள்கள் பெயர்ந்து சுக்குநூறாக
கருங்கல்லின் சொறசொறப்பில்
முன்னும் பின்னும் அழுந்தத் தேய்க்கும்
ராட்சச இறும்புக் கரங்களாய்தான்
ஒவ்வோர் உயிருக்கும்
வாழ்க்கை இங்கே அறிமுகமாகிறது

இதை
இப்படியாய் வகுத்துக்கொண்ட
நாம்
அதன் கோரத்தில் சிக்கிக்கொண்டு
வெறுமனே வெட்டியாய்
விதியே என்று
சுழன்றுகொண்டிருக்கிறோமா
வெட்கப்படவும் நேரமின்றி?

03

உன்னைக் கலந்த
சிறு பொழுதும்
அதற்கென தவித்திருந்த
தனித்த
முன் பொழுதும்
கலந்த நினைவுகளால்
தொடர்ந்து காணாமல் போகும்
மிகப்பெரும் பிற்பொழுதும்
நானெனப்படும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

***13

அதே நிலா

மூன்றாம் பிறையும்
அமாவாசையும்
நிலவிடமில்லை

பார்வைகளும் கோணங்களும்
முட்டிக்கொள்ளும்போது
எங்கோ தொலைதூரத்தில்
தேம்பி அழுகிறது
உண்மை

நிஜம்
வெளிவராமலேயே
புதைக்கப்படுவதும்
சுகமாகப் பிரசவிக்கப்படுவதும்
ஆழ்ந்த அனுபவத்திடமும்
நம்பிக்கையிடமும் உள்ளது

வாதிடுவதற்காகப்
பேசத் தொடங்கினால்
எதுவும்
பேசப்படப் போவதே இல்லை

பேசுவதற்கே
வாதிடக் கூடிய நிலை
அதனினும் அவலம்

எவ்வழியே யாதறியினும்
முடிவிலா
ஞான அலசலுக்குள்ளாக்குவதே
தெளிந்த நல்லறிவு

****5 வெட்டிப் பயல்கள் பேச்சு


*வெட்டிப் பயல்கள் பேச்சு*

சில மாடுகள் முட்டத்தான் செய்யும். அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? 

மாட்டைத் திருப்பி முட்டப் போகிறோமா? 

ஒன்று மாட்டை வெட்ட வேட்டும் அல்லது அந்த மாட்டைவிட்டு விலக வேண்டும். 

இதில் முதலாவதைச் செய்வது என் மனதுக்கு ஏற்றதல்ல. இரண்டாவதைச் செய்தே பழகிவிட்டேன் பிறந்ததிலிருந்தே. 

பிறகு சில காலம் கழிந்ததும் நான் அந்த முட்டலை மூர்க்கத்தை மறந்து மன்னித்து இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன். நெஞ்சில் எனக்கு எந்த வஞ்சமும் கூடுகட்டிக் குடியிருந்ததே இல்லை. 

ஆனால் இது மாடு ஆகவே தூரமாகத்தான் நிற்க வேண்டும் என்பது மட்டும் என் ஆழ் உயிரில் அழுத்தமாகப் பதிந்துவிட்டிருக்கும். 

அது என் ஆய்வு மூளை பாசமிகு தகப்பனைப்போல என்னைப் பாதுகாக்க எனக்குக் கத்துக்கொடுத்து வழிநடத்தும் மேன்மை.

1999 தொடங்கி பல வருடங்கள் நான் யாஹூ கூகுள் தமிழ் உலகக் குழுமங்களில் நிறைய எழுதிக்கொண்டிருந்தேன். என் வளர்ச்சியில் தன் வீழ்ச்சியைக் கண்ட இரு கண்கள் சிவந்து வெகுண்டு முட்ட வந்தன. முட்டி முட்டி நின்றாலும் அதில் நிறைவு காணாது மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டே இருந்தன.

அர்த்தம் விளங்காத அந்த முட்டல்களுக்கு விடையாய், இறுதியாய் இக்கவிதையை எழுதி முடித்துவிட்டு நான் என்னளவில் அமைதியடைந்தேன்.

ஆமாம் என் கவிதைகள் எனக்கு நல்ல ஆசான்கள். அவ்வப்போது என் கவிதைகளை நான் மீள் வாசிப்புச் செய்து என்னை நான் பக்குவப்படுத்திக்கொள்வேன்.

இன்றும் வாசித்துத் தெளிவு பெற்றேன். நன்றி கவிதைகளே!

இதோ அந்தக் கவிதை. 

இந்தக் கவிதையை நான் என் மனதின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெடித்து எழுதி இருக்கிறேன். இயல்பான உண்மையான அந்த உணர்வுக்குத் தமிழ் அதைத் தன் வல்லினச் சொற்களால் அழகுபடுத்தி இருப்பதைப் பாருங்கள். 

மெல்லினத் தமிழில் மென்மையாகப் பாசம் நேசம் பொழிவதும் இடையினத் தமிழில் இடையோடு காதல் நட்பு அன்பு பொழிவதும் வல்லினத் தமிழில் உணர்வு பொங்க எழுந்தாடுவதும் தமிழ் தரும் தங்கச் சுரங்கங்கள்

என் பொன்னன்புத் தமிழுக்குப் பேரன்பு நன்றி.

*


முட்ட வருது மாடு - கொஞ்சம்
         எட்டி நில்லு ராசா
வெட்டி முட்டு முட்டி - சும்மா
         வேதனை ஏன் ராசா

வட்ட நிலா ஊரும் - அந்த
         வனப்பு உயிரில் ஏறும்
சிட்டு விழிகள் கூடும் - சின்னச்
         சிறகு விரித்து ஆடும்

கெட்ட உள்ளம் காணும் - கண்ணு
         கொள்ளிக் கட்டை ஆகும்
எட்டு ஊரு கூட்டி - பொழுதும்
         ஏளனந்தான் பேசும்

விட்டு விலகு ராசா - மெல்ல
        வஞ்சம் மாறும் லேசா
கொட்டுந் தேளின் காதில் - கேட்கும்
       குரலும் உண்டோ ராசா

மொட்டு ஒண்ணு பூக்கும் - வாசம்
       மொத்தத் தெருவும் வீசும்
வெட்டிக் காம்பு வெடிக்கும் - கொடிய
       விசத்தை அள்ளிப் பூசும்

திட்டும் வாயின் கொட்டம் - என்றும்
        எட்டு நாளில் தீரும்
திட்டம் இட்ட எழுத்து - மண்ணில்
        தொன்று தொட்டு வாழும்

வெட்டிப் பயல்கள் பேச்சு - சேற்றில்
       வெட்கம் இன்றிப் புரளும்
ஒட்டு மொத்த உலகோ - உன்றன்
       ஒற்றை வரியில் புலரும்

கெட்டித் தேனைத் தொட்டு - நாளும்
        பட்டுக் கவிதை எழுது
வட்டியோடு சேர்த்து - இந்த
        வானம் தாண்டி உனது

அன்புடன் புகாரி
20030000
20171121

02

யாரோடு பேசினாலும்
அது என் மொழியாய் இல்லை
எவரோடு சிரித்தாலும்
அது என் மகிழ்ச்சியாய் இல்லை

என்னை எனக்குத்
திருப்பித் தந்துவிடாதே
வினோதமாய் இருந்தாலும்
இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****12 

முடிவு


முடிவெடுக்க
முடிவெடுத்து
முடிவெடுத்த
முடிவு
முடியாத
முடிவாக
முடிவான
முடிவில்
முடிவெடுக்காது
முடிவான
முடிவு
முடிவானது
முடிந்த
முடிவாக

1 புனிதமானது


*புனிதமானது*

நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்

நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்

பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ இழப்பாய்
பயமே இன்றி
ஓர் உரிமையை நீ பெறுவாய்

நீ விளைத்த பழங்களெல்லாம்
நீ உண்ணமாட்டாய்
நீ உண்ணும் கனிகளையும்
நீ விளைத்திருக்கமாட்டாய்

வாழ்க்கை என்பது இப்படியாய்த்
தட்டுப்பாடற்ற திடீர்ச் சம்பவங்களின்
தொழிற்சாலைதான்

அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்துவிட்டால்
ஆவல் செத்துவிடும்
தேடாதபோதும் தேடிவரும் முத்தத்தால்
சித்தம் பூத்துவிடும்

பிறப்பே
இந்த அதிசய விளையாட்டரங்கின்
நுழைவு வாயில்தான் - இறப்போ
புதிய புல்லரிப்புகளோடு பூமியில் பிறக்கும்
இளைய இதயங்களுக்கு இடம் விடத்தான்

எல்லாச் சிலிர்ப்பையும் இழந்த முதுமையை
எலும்பில் சுமந்து
இருப்பது ரணம் இறப்பதே பூரணம்

ஆடி முடித்த அனுபவ வேர்கள்
அளவற்ற அறிவுரைகளை அள்ளியள்ளி அளந்தாலும்
புத்தம்புதுத் திருப்பங்களின் படையெடுப்போ ஓய்வதில்லை
பிஞ்சு நெற்றியில் புதிய சுருக்கங்களைப்
பிறப்பிக்காமல் விடுவதில்லை

தோல்விகளாகும் நம் முயற்சிகள் எல்லாம்
சேமிக்கப்படுகின்றன
ஒருநாள் வீசும் வசந்தம் உன் அதிர்ஷ்டமல்ல
நீ நிதமும் எறிந்த நம்பிக்கைக் கற்களுக்கு
மொத்தமாய்க் கிடைத்த கனிகள்

அடடா...
அலுத்துக்கொள்ளாமல் இப்படிக்
கொடுத்துக் கொடுத்துப் பூத்து நிற்கும்
இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது
இதை வாழக் கிடைத்த பாக்கியம்தான்
என்றும் புனிதமானது

அன்புடன் புகாரி

01


உன் கண்களை ஒருநாள்
என்னிடம் கொடு
அதனுள் இருக்கும்
கனவுகளை எல்லாம்
வேடிக்கை பார்த்துவிட்டு
திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
11 

பட்டாம்பூச்சி

வெறுமனே ஒரு
செத்த புழுவாய்த்தானே
வெளியேறியது
ஓர் அரை நொடிக்கு முன்

இறக்கை
எப்படி முளைத்தது
வர்ணங்கள்
எப்படி வந்தன இப்போது

அடடா...
வெற்றித் திலகங்களை
நெற்றியில் அணிந்து
வெளியேற்றியவனிடமே
விரைந்து வந்து நின்று
என்னமாய்ச்
சிறகடித்துப் பறக்கிறது
இந்தப்
பொய்யெனும் பட்டாம்பூச்சி