*எல்.........லாம் இன்ப......மயம்......... 🎼 ....🎼.....🎼.....🎼.....*

இந்தப் பாடல் ஒலிபரப்பாகிவிட்டால், எங்கள் (ஒரத்தராடு) ஊர்த் திரையரங்கில் படம் போடப் போகிறோம், வீட்டுவேலைகளையெல்லாம் உடப்பில் போட்டுவிட்டு, உடனே படம் பார்க்க ஓடி வாருங்கள் என்று பொருள்.

ஆமாம் அந்த அழைப்பு பாடலோடு ஒத்துப் போகிறது. காலத்துக்கும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பது அப்படி ஒன்றும் அவசியமானதல்லை. அவற்றை எல்லாம் கொஞ்சம் மறந்து மகிழ்ச்சியின் பூங்காவனங்களில் சஞ்சரிக்க வேண்டும்.

மகிழ்ச்சி என்றால் ஏதுமற்ற ஏழை வாழ்வில், தமிழ்நாட்டில் திரைப்படங்கள்தான் எல்லா வயதினருக்கும்.

திருமணமானவர்களுக்கு உரிமைக்காதல். இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று கண்ணதாசன் உள்பட பலரும் சொல்வார்கள் 😉

விபரமறியாத மிகச் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பாடலை நான் கேட்கிறேன். இந்த வயதில் கேட்கும்போது பொருளை நன்றாகப் புரிந்துகொண்டதால் நான் அப்படியே நான் இந்தப் பாடலுக்குள் சொக்கி விழுகிறேன்.

அருமையான அடர்த்தியான பொருள் கொண்ட, எதையும் நேர்மறையாய்க் காணச் சொல்லும் இனிப்பான பாட்டு. தேர்ந்த சொல்லாட்சி, சிக்கன வரிகள், நீட்டி முழக்காமல் சில வரிகளையே கொண்ட இசையில் பெரிதும் மேலோங்கிய இனிமையான பாடல்.

இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி. நாராயணசாமி என்ற தன் இயற்பெயரை நாராயணகவி என்று மாற்றிக்கொண்டு திரைப்பாடல்கள் எழுதினார். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையானவர். தலை வணங்காத உறுதி உடையவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.

பாரதீ.... நீ யாரையும் விட்டுவைக்காத டிராகுலா தானடா. பார்ப்போரையெல்லாம் உன் நுனிப்பல் பதியும் வகையிலாவது  நீ கடித்துவைத்துவிடுவாய். பிறகெல்லாம் அவர்களும் உன்னைப் போலவே தீவிரத் தமிழனாய் புரட்சிக்காரனாய் உறங்கா விழிகளைக் கொண்டவர்களாய் ஆகிவிடுவார்கள்

https://youtu.be/UjKwSeTjYj0

இந்தப் பாடலைப் பாடியவர் எம்.எல். வசந்தகுமாரி.

திரைப்படத்தில் அழகுக் குவியலாய், சின்னஞ்சிறு கன்றுக்குட்டியாய்த் தொடைதட்டி அபிநயித்தவர் நம் நாட்டியப் பேரோளி பத்மினிதான். கூடவே அவரின் சகோதரி லலிதா.

இந்தப் பாடலின் ராகம் *சிம்மேந்திர மத்தியமம்* என்கிறார்கள். அதுமட்டும் எனக்கு இன்றுவரை விளங்கவே இல்லை. அத்தனை இசைஞான சூனியம் நான். என் ரசனையெல்லாம் இசைகேட்கும் பாமரச் செவிச்சுகமும் பாடல்வரிகளை ஆழ்ந்து ரசிக்கும் சிந்தனைச் சுகமும் மட்டுமே.

இந்தக் காலத்தில் இதே பாடலை மீண்டும் நித்யஸ்ரீ பாடி இருக்கிறார். அருமைதான் என்றாலும் அந்தப் பழைய பாடல்முன் சற்றே இடறிநிற்பதாகவே என் செவிகள் சொல்கின்றன எனக்கு. உங்களுக்கு?

https://youtu.be/2gVYogRIoEY

கவிஞர் புகாரி

No comments: