தனித்தமிழா தனித்துவிடப்பட்ட தமிழா?
*
*
மேதாவித்தனமாய்
நாங்கள்தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள 
பழஞ்சட்டத்தைத்
தூசுகூடத் தட்டாமல் கொண்டுவந்து
கவிஞரே மயக்கம் தீருங்கள் என்கிறீர்கள்
யாருக்கு மயக்கம்?
யார் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை?
இப்படித்தான்
கவிதை எழுத உட்கார்ந்தவனை
மரபுக்கவிதை மட்டும்
எழுதச் சொல்லிக்
கொன்று கொலையெடுத்தார்கள்.
விரட்டியடித்து முடிப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது
அவர்களிடமும்
இதைத்தான் சொன்னேன்.
மரபுக்கவிதை வேண்டுமென்றால்
நீங்கள் எழுதுங்கள்.
குசுப்பும் (குஷ்பு)
இடமாசுகசுவும் (டமாஸ்கஸ்)
தேவையென்றால்
நீங்கள் எழுதிக்கொண்டு போங்கள்
நாங்கள் தமிழை வாழவைப்பவர்கள்!
தமிழை அடுத்த தலைமுறைக்கும்
எடுத்துச் செல்பவர்கள்
அப்படியே
பழைய பஞ்சங்கப் பாட்டுப் பாடியே
தமிழைக் கொன்றெடுப்பவர்கள்
அல்லர்
தமிழ்
வெறும் நான்கே எழுத்துக்களைக் கொண்டு
அயலவன் அத்தனை பேரையும்
உண்டு இல்லை என்று பார்க்கிறதென்றால்
நான் பெரிதும் மகிழ்கிறேன்.
வாழ்க தமிழ்
வளர்க கணியுகத் தமிழ்
நிலைக்க பன்நாட்டுக் கூடத்திலும் இளைய தமிழ்
மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்த நான்கு எழுத்துச் சேர்க்கை எனும் மாற்றம்
இன்று நேற்று வந்ததல்ல.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது
++ ஹ
++ ஸ
++ ஜ
++ ஷ
அறியாமல் செய்யவில்லை
அன்றைய அறிஞர்கள்.
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டுபவர்களுக்கும்
கிணற்றுத் தவளைகளுக்கும்
புரியவைப்பது
இயலவே இயலாது
ஏனெனில்
அவர்கள் நோக்கம்
புரிந்துகொள்வதல்ல
நாங்கள் மேதாவி என்று
காட்டிக்கொள்ளும்
பச்சைப் போலித்தனமே
தமிழுக்கு எது முக்கியமோ
அதைவிட்டுவிட்டு
இதில் வரட்டுத்தனமாய்
தானும் சிக்கி
மற்றவர்களையும் சிக்க வைக்கப்
படாத பாடு படுகிறார்கள்.
அதைவிட்டு
அடுத்த தலைமுறைக்கும்
தமிழை அள்ளிக்கொண்டு போகும்
அனைத்தையும் செய்ய வேண்டாமா?
நான் செய்கிறேன்...
இன்று
199 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.
ஆனால் அத்தனை நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளும்
ஆங்கிலத்திலும் அந்தந்த நாட்டு மொழியிலுமே
பேசுகிறார்கள்.
அதை மாற்றுவதற்கு
ஏதாவது செய்தீர்களா?
செய்யும் எண்ணம்தான் உண்டா?
நான்
செய்யப் போகிறேன்
’எங்கள் தமிழ்மொழி’
எனும் தொண்டியத்தில் சேருங்கள்
தமிழன் கால்பதித்த
நாடெல்லாம்
தமிழின் நாடே
என்று காட்ட வாருங்கள்
புலம்பெயர்த் தமிழனின்
அடுத்த தலைமுறைப்
பிஞ்சுநாவுகளிலும்
ஈர இருக்கை
இட்டுத்
தமிழை வாழும் மொழியாய்
அமரச் செய்யுங்கள்
வாருங்கள்
வந்து
என் தொண்டு இயக்கத்திற்குத்
துணை நில்லுங்கள்
எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
அன்புடன்
கவிஞர் புகாரி

No comments: