கனடா கவிஞர் புகாரி - ஜெயபாரதன்

கனடா கவிஞர் புகாரின் தனித்துவப் பண்புகள் என்ன ? அவரது கவிதைகள் யாவும் பொரி உருண்டை போல் சிறியவை. கற்கண்டு போல் இனிப்பவை சில! பாகற்காய் போன்று கசப்பவை சில! ஆனால் அவை யாவும் சிறு சிறு கவளத் துண்டுகள். பச்சிளம் குழந்தைகள் கூட தமது பிஞ்சுக் கரங்களில் அள்ளித் தின்ன வசதியானவை! கவிதைகள் எல்லாம் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை! வெறும் வெளி உதடுகளில் பிறந்தவை அல்ல! அவரது கவிதைகள் தெய்வங்களைப் பற்றியோ, வேத விற்பன்னங்களைப் பற்றியோ விளக்குபவை அல்ல! மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளை கவளம், கவளமாக பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கிறார்.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதாக நமது புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல் நமது கனடா கவிஞருக்கு ஆறு அம்சங்கள் உள்ளன:
முதலாவது அம்சம்: ஆக்க உணர்ச்சி, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்னும் ஆத்மீகத் துடிப்பு. தொடர்ந்து கவிதைகள் ஆக்க வேண்டும் என்னும் உந்தல் உணர்ச்சி. உருவமின்றி உள்ளக் கருவில் களஞ்சியமாகத் தேங்கிப் பின்னால் கவிதையாகப் பிறக்கும் திணிவு சக்தி அது. பூமிக்குள்ளே இப்படி இருக்கும் திணிவுச் சக்திதான் வெடிப்பாக, எரிமலையாகப் பீறிட்டு எழுகிறது!
இரண்டாவது அம்சம்: ஆத்ம உணர்ச்சி அல்லது ஞான உணர்ச்சி. நமது கவிஞருக்கு மூன்றாவது கண்ணான ஞானக்கண் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் அவருக்குத் தீர்க்க தெரிசனம் கிடைக்கிறது! வரப் போகும் புதுயுகம் அவரது ஞானத் திரையில் தோன்றுகிறது! அவர் தேவையான வேளைகளில் அதை நெற்றிக்கண்ணாகப் பயன்படுத்தி நாட்டுத் துரோகிகளைச் சுட்டெரிக்கிறார். ‘சுட்ட வீரப்பன் வேண்டுமா, அல்லது சுடாத வீரப்பன் வேண்டுமா, ‘ என்ற கேள்வியைக் கேட்டு, இரண்டு பேரும் வேண்டா மென்று தன் நெற்றிக் கண்ணால் துரோகியைச் சுட்டுத் தள்ளுகிறார்.
மூன்றாவது அம்சம்: அன்புணர்ச்சி. கவிஞர் மனித நேயம் உடையவர். அவர் ஒரு மனிதாபிமானி. எல்லாம் அன்புமயம் என்று நினைப்பவர். பெண்மைக்குத் தலை வணங்குபவர். தினமும் பிளாஸ்டிக் வெடிகளில் தற்கொலை புரிந்து மற்றவரைக் கொல்லத் துணியும் மூர்க்க வர்க்கத்தாரை அறவே வெறுப்பவர்.
நான்காவது அம்சம்: அழகுணர்ச்சி. கவிஞனுக்கு அழகுணர்ச்சி இல்லாவிடில் ஒளியற்ற கண்களைக் கொண்டவனாகக் கருதப் படுவான். எல்லாம் வனப்பு மயம்! இயற்கை அழகு அவனை ஈர்க்கிறது! பொங்கி வரும் பெருநிலவு போன்ற பெண்ணின் முகப் பொலிவு, கண்களின் காந்தசக்தி, கொடி உடல் வனப்பு, நடை அழகு, இடை நளினம் ஆகியவைக் கவிஞனைக் கவர்கின்றன. ஓவியம், காவியம், நாட்டியம் அனைத்திலும் கவிஞன் மனதைப் பறிகொடுத்து அங்கே அழகின் நடனத்தைக் காண்கிறான். பிறகு அவற்றைக் கவிதைகளாய் வடிக்கிறான்.
ஐந்தாவது உணர்ச்சி: ஆவல் உணர்ச்சி. படைப்புக்கு வேண்டிய தூண்டுகோல் அல்லது உளவு சக்தி அது. அதாவது தேடல் உணர்ச்சி, ஆக்க உணர்ச்சிக்கு வேண்டிய தாகம், வேட்கை, ஆர்வம் அவை! ஆய்வு உணர்ச்சி, உளவி உண்மை காணும் பண்பு.
ஆறாவது உணர்ச்சி: விடுதலை உணர்ச்சி. நாட்டு வேலிக்குள், இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு அடிமையாய்க் கிடக்கும் மனிதருக்கு விடுவிப்பு! இதைத்தான் பாரதி, ‘சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே, ‘ என்று பாடிப் பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க வீறுகொண்டு எழுந்தான். ஆனால் பாரதிதாசன் பாரதியின் பெயரில் புகழ் பெற்றாலும், பாரத விடுதலையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய பாரதியாருக்கு இருந்த தீர்க்க தெரிசனம் பாரதிதாசனுக்கு இல்லாமல் போனது எனது நெஞ்சில் ஒரு முள்ளாய்க் குத்துகிறது!
கனிவுடன்,
சி. ஜெயபாரதன்
கனடா

No comments: