*வாய்த்தவாய்*

உன்
திருவாய் திறந்துவிட்டால்....

திட்டு மட்டும்தான்
கொட்டுமா

கூர்முனைக்
கொம்பு மட்டும்தான்
முட்டுமா

கொடுந்தேள்
கொடுக்கு மட்டும்தான்
வெட்டுமா

ஈதென்ன
அழிந்தொழியாத
உன்
கொட்டமா

0

உன்
வாய் முகூர்த்தம்
என்பதென்ன
பேய் முகூர்த்தமா

0

வசையே நீண்டால்
வைதலே மூண்டால்
வெறுப்பே புரண்டால்
விசமே திரண்டால்

அதென்ன
வாயா
வயக்காட்டுத் தீயா
நாக்கா
நடுக்கூடத் தூக்கா

0

பார்
உன் வாய் திறந்தால்
எத்தனைப் பிணங்கள்
செத்தபின்னும்
அலறியடித்துக்கொண்டு
ஓடுகின்றன

பார்
உன் வாயை மூடக்கேட்டு
கொடுநெருப்புத் தீப்பந்தங்களும்
கதறியழுது துடிக்கின்றன

பார்
உன் வாய் மூடிய
அந்நொடியில்
ஜென்ம ஜென்மயாய் அடைபட்ட
ஆகாய தேவதைகளெல்லாம்
சட்டென்று விடுதலைபெற்று
படபடக்கும் சிறகுகளின்
மாமதுர ஓசைகளோடு
பறந்து பறந்து
பூத்துக் களிப்பதை

0

இந்
நோய் தீரும் நாளென்று
ஓர் நாள் இப்பிறப்பில்
உனக்குண்டா

ஒரே ஒரு முறை
உன் திருவாய் மலர்ந்து
இன்னிசையாய்
ஒரு சொல்
சொல்லித்தான் பாரேன்

அந்நொடியே
அரளிவிதை நச்சுக் காயும்
அமுதாகும்
சபிக்கப்பட்ட வெறி நாயும்
முயலாகும்

அன்றித்
திறவாதே திறவாதே
உன் வாயை
திறந்து
மூடாதே முடிக்காதே
பலர் வாழ்வை

அன்புடன் புகாரி

No comments: