எட்டாத அதிசயம்  

விடாமல் கொட்டும்
விசுவரூபம்

குளிர் நீர்ச் சிறகுகள்
படபடத்துப் பறக்கும்
ராட்சசப் பறவை

விண்ணைத் தொட்டு
ஏழு வர்ணம் தீட்டும்
தண்ணீர்த் தூரிகை

நெருப்பையும் வெல்லும்
தீரா நீர்ப் புகை

நிலத்தின் மேனியில்
நீர்முத்தம் வரையும்
பருவ ஓவியம்

கவிதை மடியில்
கவிதை எழுதும்
நீரெழுத்துக் கவிதை

காற்றைக் கிழித்துக்
கரைகள் நிறைத்து
சந்தங்கள் பொழியும்
ஓயாத பாட்டு


துருவப் பனிக் குடங்கள்
துளித் துளியாய் உடைந்து
மில்லியன் கால்கொண்டு நடந்து
பேரரருவியாய் விழுந்து
கடல் சேரும் ஓட்டம்

இது நீரோட்டமல்ல
ரத்த ஓட்டம்

ஓர் ஐந்து வயது கேட்டது
ஞாயிற்றுக் கிழமையும்
விடுமுறை இல்லையா
நாளைக்கும் கொட்டுமா
நயாகரா

ஒரு
மூன்று வயது அழைத்தது
நடுவில் நின்று குளிக்கலாம் வா

பிஞ்சுமுதல் பிணக்கூடு வரை
எல்லோர்க்கும் அதிசயம்

அடடா
எத்தனை எத்தனை
ஆரவார ஆனந்தம்

விழுகிறாய் விழுகிறாய்
ஆனால்
சுவாரசிய முரணாய்
எழுகிறாய் எழுகிறாய்
எண்ணங்களில் இதயங்களில்

சூரியன் விழுந்தால்
பூமிக்கு உறக்கம்

முகில் விழுந்தால்
பச்சைக்கு விருப்பம்

நீ விழுந்தாலோ
உயிருக்கும் கர்ப்பம்

பறந்து பறந்து
தரையில் இறங்கும் தேவதையே

உன் திரவ தேகம் மட்டும்தான்
என்றும் என்றென்றும்
புதிது புதிது

ஓர் ஏரி
மற்றோர் ஏரியின் மடியில்
ஆறாத ஏக்கத்தில்
தீராது விழும்
ஜென்ம ஜென்ம தாகமே

கடல்முன் நின்றால்
மனம் அமைதி கொள்ளும்

உன்முன் நின்றால்தான்
மனம் காதலாய்ப் பொங்கிக் கொள்ளும்

விழுந்துகொண்டே இருக்கும்
உன்னைக் கண்டால்
எழுந்துகொண்டே உயரும்
தன்னம்பிக்கைதான்
அத்தனைக்கும் மேலான

அதிசயம் அதிசயம்
அதிசயத்திலும் அதிசயம்


உலகையே வாசிக்கலாம்

குனிந்து
நீ வாசிப்பது
கொஞ்சமோ கொஞ்சம்

உன்
தலை நிமிர்த்தி
வாசித்தாலோ
அந்த வானத்தின்
விரியழகும் மாயச்செய்தியும்
உன் கண்களின் விரல்களில்
கெட்டித் தேனென
வழியும்

v   

இன்னொரு விழி பார்த்ததை
நீ பார்க்கக் குனிவதே
காகிதங்களின் மேனியில்

மாறாக
உன் விழிகள் தானே நடந்து
நீயே பார்ப்பவைதான்
நிரம்பிக் கிடக்கின்றன
இயற்கையில்

v   


எத்தனை முறை வாசித்தாலும்
தீர்ந்தே போகாதவை
அண்டத்தின் கோள்களில்
திறந்தே கிடக்கின்றன

காணும் திசையெல்லாம்
ஓர் ஆகப்பெரு நூலகம்
உன் கண்ணில் தெரிகிறதா

v   

காட்சி ஒருதிசையாய்
கற்பனையோ பலதிசையாய்
பல்கிப் பெருகிய வண்ணம்
காலத்தின் கர்வம் வென்று
நீள்வதே இயற்கை

அதை
வாசிக்க வேண்டாமா

வா வா என்று
வற்றாமல் அழைக்கும்
கவிதைகளே
காடுகள்

எழுத்துக்களை அள்ளி உன்
கருத்துக்குள்ளும் கற்பனைக்குள்ளும்
ஊட்டிவிடும்
குளிர் அன்னையர்தாம்
குளம் குட்டை
ஏரி மேகம்
அருவி நதி
கடல்கள்

v   

வேர்களை வாசித்துப்பார்
வாழ்க்கை புரியும்
வியர்வையை வாசித்துப்பார்
பெரும் புரட்சியே தெரியும்

v   



கார்முகிலை வாசிக்க
இந்த மண்மீது அது கொண்ட
காதலின் காவியத்தை
எம்மொழியிலேனும்
செய்யவியலுமா

v   

ஒரு மொழியை
அறிந்திருந்தால் மாத்திரமே
அந்த மொழியின் நூல்களை
வாசித்தல் இயலும்

பிறந்ததும் பிள்ளை
எந்த மொழியினை அறியும்
ஆனால் அது இயற்கையின்
இயல்பு மொழிகொண்டு
இந்த உலகையே வாசிக்கும்

v   

எவனோ
திணிக்கத் திணிக்க
உன் நரம்புகளில் ஏறுவது
மாற்றான் ரத்தம்தான்

இயற்கையை
வாசிக்க வாசிக்க
உன் நரம்புகளில் ஏறுவது
உனதே உனதான
ரத்தமல்லவா

v   

சொல்லித் தெரியாக்
கலையான காதலைச்
சொல்லித்தந்தது
யார்

பார்த்துப் புரியாத
பசியை
வார்த்துக் கொடுத்தது
யார்

அறிவுரையில் வராத
உறக்கத்தை
அள்ளித் தருவது
யார்

ஒரு சிங்கத்தின்
வீரம்
எந்த வழியே
வந்தது

ஒரு சிறுத்தையின்
பாய்ச்சல்
எந்த காகிதத்தில்
படிக்கப்பட்டது

குஞ்சுகளைக் காக்க
கோழிக்குப் பாடம் எடுத்தக்
கொம்பன்
யார்

எந்த நூலகத்தை மேய்ந்துவிட்டு
எறும்புகள்
அற்புத வாழ்க்கையை
வகுத்துக்கொண்டன

எந்த கட்டுரையை வாசித்துவிட்டு
தேனீங்கள் தேனெடுக்கும்
சாதுர்யத்தைக்
கற்றுக்கொண்டன

இயற்கையை
விஞ்சும்
எழுத்தொன்றுண்டா

மறந்துபோன
மனித வாழ்க்கையை
மீண்டும்
சொல்லித்தரவல்லன
எழுதப்படாத எழுத்துக்களால்
நம்மைச்
சுற்றிச் சுற்றி இறைந்துகிடக்கும்
இயற்கையல்லவா

v   

மூதாதையர் காவியம்
உன் மரபணுக்களில்
எழுதிக் கிடக்கின்றது
ஆழ்ந்திருந்து
வாசித்துப் பார்த்தாயா

v   

உன் அகங்காரங்களைப்
பழிக்கும் கவிதைகள்
ஆகாயத்தில்
நிரம்பிக் கிடக்கின்றனவே
பாடிப்பார்த்தாயா

நீ வாழும் சூழலை
சூரியன் சொல்லித் தருகிறதே
ஒருநாளேனும் கேட்டிருப்பாயா

உன்
நிலையில்லா வாழ்வை
அழியும் அலைகளும்
உதிரும் இலைகளும்
எழுதி எழுதிச் செல்கின்றனவே
ஞானம் பெற்றாயா

v   

புலன்கள் ஐந்தாலும்
அண்டமனைத்தையும்
வாசிப்பதென்பதே
வாசிப்பு

நீ
புத்தகம் வழியாக
வாசிப்பதெல்லாம்
கடல்முன் நின்று
ஒரு துளி யாசிக்கும்
உன் குற்றுயிர் நேசிப்பு

v   

சன்னலோர இருக்கைகள்
பேருந்தின்
சாலையோரப் புத்தகங்கள்

மொட்டைமாடிப் படுக்கைகள்
ஆகாயத்தோடு
அலுக்காத பேச்சு வார்த்தைகள்

மரங்களின்
மந்திரக் குரல்களை
இலைகளின்
வண்ண வண்ண
நாக்குகள்
வனமேடைகளில்
சலசலப்பாய் அரங்கேற்றுவதை
என்றேனும்
சிலுசிலுப்பாய் ரசித்தோமா

நதியில்
இறங்குகையில்
நம் கால்களின்
காதுகளில்
கிசுகிசுக்கும் கவிதைகளை
வேறு எங்கேனும்
சுகிக்க ஒல்லுமா

கடலின் கரைகளில்
நிலைமாறும் வாழ்க்கையின்
நித்தியத் தத்துவங்கள்
அத்தனையும்
ஈரமணல் எழுத்துக்களால்
பொழுதுக்கும் எழுதப்படுகின்றனவே
பார்த்தோமா படித்தோமா

v   

கவிழ்ந்த விழிகளும்
குனிந்த தலையுமாய்
வெகுநேரம் கிடந்தால்
புத்தகங்கள்
நிறையவே வாசிக்கலாம்

ஆனால்
சற்றே உன் தலை
நிமிர்ந்தாலே போதும்
இந்த உலகையே வாசிக்கலாம்

v   

ஓர் இரவின் கருமை
வழிய வழிய
கொட்டிக் கொண்டிருக்கின்றது
ஏராளமான கவிதைகளை

ஒரு பகல்
எத்தனை முயன்றாலும்
இரவின் மடிகளில்
மெத்தெனத் தலைசாய்த்து
அதன் நிம்மதி விரல்கள்
நெற்றிமுடி கிழித்துப் பாய
நிசப்தங்களின் சப்தங்கள்
குளிர்ச்சியாய்ப் பாடும்
ரகசியப் பாடல்களைக்
கேட்க முடிவதே இல்லை

உன்னால் முடியுமே
நீ கேட்பதில்லையா

நீ காண்கின்ற
ஒவ்வொரு விழிக்குள்ளும்
பலநூறு நூலகங்கள்
பதுங்கிக் கிடக்கின்றனவே
பார்வையாவது இட்டாயா

v   

மொழிகள் எழுதியவற்றை
தாள்களில் வாசித்தால்
அவை சாதாரண விழிகள்

ஆனால்
விழிகள் எழுதியவற்றை
மொழியாக்கி வாசித்தால்
அவையே சாதுர்ய விழிகள்

உன்
சாதாரண விழிகளை
எப்போது
சாதுர்ய விழிகளாகுவாய்

v   

கவிழ்ந்த விழிகளும்
குனிந்த தலையுமாய்
வெகுநேரம் கிடந்தால்
நிறையவே வாசிக்கலாம்

ஆனால்
சற்றே உன் தலை
நிமிர்ந்தாலே போதும்
இந்த உலகையே வாசிக்கலாம்