****08

வேண்டும் அந்த வரம்



வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்

காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்

எட்டு மாடி கட்ட வேண்டாம்
எக்கச் சக்க அறைகள் வேண்டாம்
பட்டுத்திரைச் சீலை வேண்டாம்
பளபளப்புச் சுவர்கள் வேண்டாம்

கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்

கழுத்துப் பட்டை எனக்கு வேண்டாம்
கோட்டு சூட்டு எதுவும் வேண்டாம்
கப்பல் விட்டுக் காற்றில் ஏறி
கண்டம் தாண்டிப் போக வேண்டாம்

பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்

குடை விரிக்கும் கண்கள் வேண்டாம்
கொட்டும் அருவிக் கூந்தல் வேண்டாம்
நடை நிமிர்த்தும் படிப்பு வேண்டாம்
நல்லினியப் பேச்சும் வேண்டாம்

உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்

இப்படியாய் இருந்த தெல்லாம்
எப்படித்தான் மாறிப் போச்சோ
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அதுக்கு மேல கொடியை நட்டு

ஒய்யாரமா
வளந்து வளந்து
உசுரைத் தின்னு
வாழுதோ

வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ

தோண்டத் தோண்டப்
புதையல்கள்
தொலைந்து போகும்
இதயங்கள்

வேண்டாம் வேண்டாம் ஆசைகள்
வேதனையின் ஊற்றுக்கள்
வேணும் எனக்கு ஒற்றை வரம்
விபரமான மேன்மை வரம்

வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்

15 comments:

Anonymous said...

அன்பின் புகாரி, உங்கள் கவிதைகளை மீண்டும் ஒரு முறை படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி. அடிக்கடி சந்திப்ப்பொம்.. அன்புடன் உரையாட.

Unknown said...

அட சேவியரா, நட்புக் கவிஞர் சேவியரின் வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது

நீங்கள் தேர்வு செய்த கவிதைகளைத்தானே நான் நூல்களாய் இட்டேன். இங்கே அவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் ஆசையில் இப்படி...

மீண்டும் மீண்டும் வருக

அன்புடன் புகாரி

சத்ரியன் said...

//"வேண்டும் "களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ//

புகாரி,

நான் வியந்த முதல் கவிஞன் "வைரமுத்து".

நெடும் பயணத்தில்... 'மீண்டும் வியப்புடன்' என்னை விழுங்கும் எழுத்துகள் உன்னிலிருந்து..!

( உன் கவிதைத் தொகுப்புகள் எனக்குக் கிடைக்க வழி செய்வீர்களா? )

Unknown said...

நன்றி சத்ரியன்,

என் நூல்கள் கிடைக்கும் இடம்:

http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_1450.html

கிடைக்கவில்லை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் புகாரி

அரசி said...

மனிதன் வேண்டும் என்று ஆசை பட்டதால் தான் இன்று மற்ற விலங்குகள் இருந்து முன்னேறி வந்து இருக்கிறான்...
பறவை, காட்டு விலங்கு எல்லாம் அப்படியே இருக்கிறது... மனிதனின் வளர்ச்சியை பாருங்கள்... ஏன் வேண்டாம் என்று மனம் வேண்டும்?
அத்தனைக்கும் ஆசை படு... இதுவே மந்திரம்! மற்றவர்களுக்கு சங்கடம் தராத எந்த வேண்டுதலும்
நன்மையே!
நீங்கள் வேண்டாம் என்று சொன்னது எல்லாம் இருந்தால் நல்லாதானே இருக்கும்?!

அரசி.....

பூங்குழலி said...

//கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்//

இந்த வரிகள் நன்றாக இருக்கின்றன ...


//வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்//

இது மட்டும் கிட்டிவிட்டால் ....

அழகான நடையில் கவிதை

mohamedali jinnah said...

அருமையான கவிதைப் புதையல்கள்.

சாதிக் said...

வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்





அருமையான வரிகள் புஹாரி சார். உங்கள் கவிதைகளில் வரிக்கு வரி ரசித்து படித்தது... என் மனதைத் தொட்டது இந்த வேண்டும் இந்த வரம் கவிதை.


பாராடுக்கள்... வாழ்த்துக்கள்... உங்கள் பணி நீண்ட நாள் வாழ நீங்கள் பல்லாண்டு இறைவனருளோடு வாழுங்கள்.

சீனா said...

அன்பின் புகாரி

உலகில் எவரும் ஆசைப்படக்கூடாது என ஆசைப்பட்டவன் புத்தன்

ஆசை அறுமின் எனப் பாடியவரும் உண்டு

ஆசைக்கு அளவில்லை எனச் சொல்லியவரும் உண்டு

வேண்டாம் வேண்டாம் என எண்ணும் வரம் வேண்டும் வேண்டும்

ஆகா ஆகா நல்ல கவிதை

நன்று நண்பா நல்வாழ்த்துகள்

பிரசாத் said...

ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்…
உலகில் எவரும் ஆசைப்படக்கூடாது என ஆசைப்பட்டார் புத்தர்….அவர் ஆசைப்பட்ட
விஷயத்தால் அவராலேயே ஆசையில்லாமல் இருக்க முடியவில்லை என்பதை உண்ரலாம்.
புத்தர் பொதுநலனுக்காக ஆசைப்பட்டார்… மற்றவர்கள் சுயநலத்திற்காக
ஆசைப்பட்டனர்…. ஆசை இருந்தது புத்தனுக்கும்-சரியா?
வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இருக்க வேண்டும் என்று என்னும்போதே வேண்டும்
என்ற எண்ணம் வந்துவிடுகிறதல்லவா?
ஆகையால் இவை இரண்டும் நடக்காதவைகளாகி விடுகின்றனவே….

Unknown said...

அரசி மற்றும் பிரசாத்,

வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ


இதுதான் மையக் கருத்து.


காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்


கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்


பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்


உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்


என்ற அளவான தேவைகளை (ஆசைகளை) தவறென்று கவிதை சொல்லவில்லை

அன்புடன் புகாரி

வேந்தன் said...

வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்

காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்


கவிதை நன்று.
ஆனால் கையளவு கிட்டியபின் வாழை இலை விருந்து கேட்குமே மனம்

கல்யாணம் ஆன போதும்னு இருந்தான் டைகர் வுட்சு
இப்போ கூத்தியா ஒன்னுக்கு மூனா வச்சுக்க ஆசைப்படறான்

ஆண்களில் ராமர்களே இல்லை


வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

யோகியார் said...

ஆகா!
ரொம்ப நாள் கழித்து என் அன்பர் புஹாரியிடமிருந்து ரொம்ப சிறப்பான, க்ரிஸ்ப் ஆன
மிக நல்ல உருக்கமான கவிதை
வாழ்க!புஹாரி.
யோகியார்

தஞ்சை மீரான் said...

கவிஞர் புகாரி அவர்களின் கவிதை ரசிக்கும் படியும், சிந்திக்கும் படியும் இருக்கிறது.


எனக்கு தெரிந்து ஒன்று சொல்லனும் என்றால்,

சூழ்நிலையும், சந்தர்ப்பமும்தான் ஒரு மனிதனின் நிலையை உருவாக்குகிறது.

பயம் உள்ள மனிதர்கள் இன்பத்தை சுருக்கி கொள்கிறார்கள்.
பயமற்ற மனிதர்கள் இன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள்.

mohamedali jinnah said...

வேண்டுதல்

வேண்டுதல் வேண்டி வேண்டப்படுபவனை வேண்டி நாடினேன்
வீணானதை வேண்டி வேண்டாதவை வந்து சேர வம்பு ஏன் !
வேண்டாமல் வீடு வந்து சேர்ந்தேன்

முறையாக அட்டவனைப்போட்டு அனைத்தையும் எழுதினேன்
எழுதியத்தை மனனம் செய்து வேண்டப்படுபவனை வேண்டி நாடினேன்
வேண்டப்படுபவன் கேட்டான் 'வேண்டியதைக் கேள் தருகிறேனென்று

வேண்டிப் போனது மறந்துப் போனது அவனைக் கண்டு
விரும்பியதைச் சொல் விரும்பியதைத் தருகிறேனென்றான்
வந்தது வார்த்தை என்னை அறியாமல்
' நான் வேண்டுவது உன்னைத்தான் எனக்கு நீயே வேண்டு'மென்றேன்
வேண்டிக் கேட்டதில் நிறைவு கொண்டேன்,
வேண்டியது அனைத்துமே கிடைத்த நிம்மதி கொண்டேன்

அவனைக் நினைக்க நல்லவையே நினைக்க வைக்கும் நல்லதே வேண்ட வைக்கும்