இரவு ஓர் அனாதை
இரவு
ஓர் அனாதை
அது
தனக்குத் துணையாக
என்னை
எடுத்துக்கொண்டது
மௌனமாய்த்
தன்
பாரங்களை
எனக்குள்
அது
இறக்கி வைக்கிறது
யுகம்யுகமாய் அதனிடம்
சேர்ந்த சாபங்கள்தாம்
இந்தத் தாபங்கள்
இரவின் கண்ணீர்
கறுப்பு
தன்
பௌர்ணமியால்
அதன்
கண்ணீர் துடைக்க
வெளிச்சக் கரம் நீட்டுகிறது
நிலா
தன்
உச்சிப் பகலால்
இரவின்
கவலைகளையெல்லாம்
தின்னப் பார்க்கிறது
சூரியன்
தன் மீது கிடத்தித்
தாலாட்டுப் பாடித்
தூங்க வைக்கப்
பார்க்கிறது
பூமி
சின்னச் சின்ன
நட்சத்திரங்களெல்லாம்
இரவின்
கண்ணீர் துடைக்கும்
விளையாட்டுக்
குருவிகள்
எல்லோருக்கும்
இரவின் மீது
அனுதாபம்
ஆனாலும்
இரவு
அழுதுகொண்டேதான்
இருக்கிறது
இரவின் துயரம்
அதை ஓர்
கருணைக் கடல்
ஆக்கிவிட்டது
அது தன்
அதீத கருணையால்
உயிர்களை ஆரத்தழுவி
அமைதியாய் உறங்க
இருட்டு இழைகளால்
ஊஞ்சலாட்டுகிறது
இரவு
சொல்லித்தரும்
பாடம்
ஒன்றே ஒன்றுதான்
உயிரே
இரவைப் போல்
நீயும்
தனித்திருக்காதே
துணையற்ற
நீ
இரவின்
மடி கிடந்தால்
மேலும் துயரப்படுவாய்
நீ உன்
துணையைத்
தேடு
பெற்றது
ஒரு தாய்தான்
என்றாலும்
பாசம் பொழியும்
அன்புள்ளம் அனைத்தும்
உனக்குத் தாய்தான்
தேடி வரும் எவரையும்
தூர நிறுத்தாதே
எட்டியோடும் உறவுகளைத்
தேடி ஓடாதே
அனாதை என்று
இங்கே எவரும் இல்லை
இந்த இரவு மட்டுமே
அனாதை
அதற்கு
நீ
அன்னையாய் இருக்க விருப்பமா
உனக்கொரு
பிள்ளையைத் தேடிக்கொள்
அதற்கு
நீ
பிள்ளையாய் இருக்க விருப்பமா
உனக்கொரு
அன்னையைத் தேடிக்கொள்
பிறகெல்லாம்
இரவு உனக்கு
அமைதியைத்
தரும்
இரவு
மிகவும் இனிமையானது
6 comments:
இரவு ஓர் அனாதை என்பது கவித்துவமிக்க வார்த்தைகள். அதனுள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரமாயிரம்!
உணர்ந்து ரசித்த ரசிப்புக்கு நன்றி சாய் ராம்
அன்புடன் புகாரி
ungal sinthanai vithiyasamanathu
thodaratum pala vithiyasangal
anpudan karthi
நன்றி கார்த்தி,
உங்கள் வித்தியாசமான கவிதைத் தேடலுக்கு இந்தக் கவிதை தீனியாகுமா என்று பாருங்கள்:
இருட்டு பேசுகிறது
http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_159.html
அன்புடன் புகாரி
புகாரி, கவிதையின் முதல் பாதிக்கும் ( முதல் ஒன்பது பத்திகள் ), இரண்டாவது பாதிக்கும் இடையே ஏதோ குறைகிறது.
எனக்கு அப்படித் தோன்றவில்லையே சேவியர். உங்களுக்கு ஏன் அப்படித் தொடர்பறுந்ததாய்த் தெரிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இரவு ஓர் அனாதை என்பது முன்னுரை, அது நமக்குத் தரும் பாடம் என்பது பின்னுரை, இடையில் அது கருணைக்கடலாக ஆனதைக் கூறப்பட்டுள்ளது.
உங்கள் வருகைக்கும் விமரிசனத்திற்கும் நன்றி சேவியர்
Post a Comment