மூச்சழியும் பொழுதிலும்

மனமொட்டுப் பருவத்தில்
மரகத நாளைகளின்
மந்திர வாசல்கள்
எதுவென்றறியாத

ஓட்டம்


மேலுதட்டு இளமேடை
மீசை மன்னர்களுக்காக
மென்மை இழக்கும்
மன்மத வாலிபத்தில்
இரத்தம் உறிஞ்சாத பெண்
எவளென்றறியாத

ஓட்டம்


மதிவளம் மிளிரும்
மத்தியப் பருவத்தில்
முடிவெடுக்கத் தடைநிற்கும்
முரட்டுக் கட்டைகளை
மிதித்தோடும் ஓட்டமறியா

ஓட்டம்





மூன்றாம் காலும்
மூச்சோடு நடுநடுங்கும்
முதுமையிலும்கூட
மரண முத்தத்தின்
மகத்துவமறியா

ஓட்டம்


தாக விழிகளின்
நிரந்தர சுமைதாங்கிகளே
தேடுங்கள் தேடுங்கள்

தேடியது கிட்டியதாய்த்
தேடிய எவரும்
இதுவரை சொன்னதில்லை

தேவை இதுதானென்று
நெருப்போடு
நிச்சயப்படுத்திக்கொண்டு
தேடலைத்
தெளிவாகத் தேடுங்கள்

அக்கினித் தேடல்களால்
அடைந்த
அரிய பொக்கிசங்களை
உங்களின்
கண்மூடியத் தேடல்களே
மண்மூடிப் புதைத்துவிடாமல்
மிக நிதானமாய்
மூச்சழியும் பொழுதிலும் கூட
முதன்மை எதுவென்றறிந்த
ஞானத்தோடு
தேடுங்கள் தேடுங்கள்

1 comment:

cheena (சீனா) said...

தேடிய எதுவும் எளிதில் முழுதுமாகக் கிட்டாது. காரணம் தேடலின் குறைவான வேகம்,ஈடுபாடு,நோக்கமெதெனத் தெளிவாகத் தெரியாத தேடல். என்ன செய்வது. தத்துவப் பாடல்.