கோபம் இறைவன் தந்த வரம்

கோபம் கொள்ளுதல் வேண்டும்
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

v   

சித்தார்த்தர் கோபப்பட்டார்
அன்பு வளர்த்தார்

காந்தி கோபப்பட்டார்
சுதந்திரம் பெற்றுத்தந்தார்

பாரதி கோபப்பட்டார்
புரட்சிக் கவிதை எழுதினார்

v   

கோபம் இல்லா இதயத்தில்
நியாயம் இருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லாக் கண்களில்
கருணை இருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லா எதிர்பார்ப்பில்
அன்பிருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லா உடலில்
வீரம் இருக்க வாய்ப்பில்லை

கோபம் இல்லாக் குணத்தில்
கற்பிருக்க வாய்ப்பில்லை

v   

கோபத்தை
வெளிக்காட்டுவதில்
அளவற்ற
நாகரிகம் வேண்டும்
ஆனால்
கோபமற்ற பிணமாய்
ஒருநாளும்
ஆகிவிடக்கூடாது

v   

கோபம் வந்தவன்தான்
நேர்மையை நிரூபிக்கிறான்

கோபம் வந்தவன்தான்
போட்டியில் வெல்கிறான்

கோபம் வந்தவன்தான்
சுயமறியாதை உயர்த்துகிறான்

கோபம் வந்தவன்தான்
சுதந்திரக்கொடி ஏற்றுகிறான்

v   

ரத்தம் கொதித்தால்தான்
வக்கிரங்கள் வெந்துமடியும்

அறிவு கொதித்தால்தான்
ஆராய்ச்சிகள் வெற்றிபெறும்

அன்பு கொதித்தால்தான்
உறவுகள் வலுப்படும்

உயிர் கொதித்தால்தான்
வாழ்க்கை உண்மையாகும்

v   

கோபம் கொள்ளுதல் வேண்டும்
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்ததும் சிறப்பு...

வாழ்த்துக்கள்...