*கண்ணீர் அஞ்சலி*

1984 அக்டோபர் 31ன் கொடுங்காலைப் பொழுதில் பீந்த்சிங் சத்வந்த்சிங் என்ற இரு மத வெறியர்களால் அன்னை இந்திரா சுடப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து கலங்கியபோது வெளிவந்த கண்ணீர்க்  கவிதை இது - 19841031

அன்றைய என் அறிவின் பார்வையில், எழுதப்பட்ட கவிதைதான் இது. தீபம் இதழில் வெளிவந்தது. ஆனால் அதன்பின் இதை என் எந்தக் கவிதை நூலிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒரு கவிதையாய்க் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதை வெளியிட வேண்டும் என்று தோன்றியது -20171124

*

இவ்வையகத்தின்
வைர நிலாவே

தேசக்கவி பாரதியின்
பொற்கனாவே

உலக சமாதானத்திற்காக
ஓயாது உழைத்த
புனிதப் புறாவே

இது நிசந்தானா?

இம்மாபெரும்
ஜனநாயகத் தோட்டத்தில்
காவல்காரர்களாலேயே
உன் ரோஜா உயிர்
கிள்ளியெறியப்பட்டதாமே
நிசந்தானா?

உனக்கோர்
உயிருள்ள இரங்கற்பா
வடிக்கலாமென்றால்
என்
பேனாவிலிருந்து
கண்ணீரல்லவா
பெடுக்கெடுத்து
எழுத்துக்களை மூழ்கடிக்கிறது

இந்திய மண்ணைத்
துண்டுபோடத் துடிக்கும்
துரோகிகள் உன்னைத்
துப்பாக்கிக் குண்டுகளால்
துளைத்துவிட்டார்களா

இந்தத் தேசத்தந்தைக்கு அன்று
தாய்க்கு இன்று
என்று
இவர்கள் செலுத்தும்
நன்றிக் கடனும் மரியாதையும்
இதுதானா

ஈடு செய்ய முடியாத
இழப்பு என்று
ஒரு
பேச்சுக்குச் சொல்வார்கள்
பலருக்கு

நிசத்தில்
உன்னை
அள்ளிக் கொடுத்துவிட்டுத்
தேம்பி நிற்கும்
இந்த தேசத்தின்
இழப்பல்லவா
ஈடு செய்யவே முடியாத
பேரிழப்பு

அன்புடன் புகாரி
19841031Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை விழா நன்றியுரை

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ