காதல் என்பதே
சாதி மதம் இனம் நிறம் மொழி கடந்து
சின்னச் சிறகுகள் விரித்து
மனிதப் பெருவானில்
எழுந்து பறக்கத்தானே

லவ் ஜிகாத் என்று
நேரெதிர்ப் பெயர் சூட்டி
முற்போக்குப் பிஞ்சுப் புறாக்களை
அடித்துச் சூப்பு வைக்கும்
காட்டுமிராண்டிக் கூத்தென்பது
வெட்கத் தலைகுனிவின்
உச்சமல்லவா

எங்கோ
பல்லாயிரம் ஆண்டுகள்
பின்னோக்கிச் செல்கிறோமா

அதன் காரணம்
சாக்கடைச் சாதிமத பேதமா

அகிலா
ஹதியாவானாலோ
ஹதியா
ஜெனிலாவானாலோ
ஜெனிலா
அகிலாவானாலோ

உனக்கென்ன
கேடு

எங்கே
வன்முறைக்கு
விருந்தாகாமல்
வயதுவந்தோர்
முடிவெடுக்கிறாரோ
அங்கேதான்
சுதந்திரம்
தன் வேர்களில்
உயிர்நீர் அருந்துகிறது

சட்டமும்
கடமையைச் செய்வதில்லை
நீதியும்
நியாயத்தை நிறுவுவதில்லை

வெறிக்குப் பலியாகி
வீதியில் அம்மணமாய்
மனிதவாழ்வு
இங்கே

அன்புடன் புகாரி
20171121












No comments: