உறக்கமெனும் மலர்...

கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக

உருண்டு உருண்டு
புரண்டு  புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து

எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்

அதிகாலை வந்ததும்
எப்படித் துடித்துத் துடித்துக்
கண்களை விரிக்க முயன்றாலும்
விடாமல் உள்ளிழுத்து
விடியல் மடிகளில் புதைத்து
போர்வைக்குள் அள்ளியணைத்து

உச்ச உறக்கமாய்
தேவ தூக்கமாய்
சொர்க்க நித்திரையாய்
மலரும் அதிசயம்தான்
என்ன என்ன?

உறக்கம் என்பதும்
ஒரு மலரோ
அது
சூரியனின் வரவில்தான்
மலருமோ?

அன்புடன் புகாரி
20171113

No comments: