மாமனுக்கு அஞ்சலி

உறவினர் ஒருவர் இறந்திருப்பார். அம்மா என்னை அந்த மரணவீட்டிற்குச் சென்றுவா என்று கட்டளை இட்டிருப்பார். நானும் சென்றிருப்பேன். மருந்துக்குக்கூட அந்தச் சாவினால் எனக்கு ஒரு துளி கண்ணீர் வராது.

ஆனால்... நான் தொடர்ந்து அழுதேன் ஒரு மரணத்திற்கு. இறந்தவர் எனக்குச் சொந்தம் இல்லை. என் உறவினர் எவருக்கும் அவர் தூரத்து உறவும் இல்லை.

என்னை எடுத்து முத்தமிடும் என் வீட்டு வேலைக்காரர். என்னால் ‘மாமா’ என்று பாசமுடன் அழைக்கப்பட்ட அவர் ஒரு தெய்வப் பிறவி என்றே எனக்குத் தோன்றும். அத்தனை அன்புடன் வேறு எவரும் என்னிடம் இருந்ததாய் என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது.

அவர் ஒரு நாள் விபத்தில் இறந்துவிட்டார். பார்க்க இயலாத நெடுந்தூரம். இறந்த செய்தியே ஒரு வாரம் கழித்துத்தான் என்னை வந்து சேர்ந்தது. என் கண்ணீர் ஒரு நயாகராவாய் அவருக்கு என்றென்றும்...

*

அஞ்சலி...

ஓவெனக் கதறினால் தீருமோ - என்
       ஒப்பாரியுனையிங்கு மீட்குமோ
ஆவியும் இல்லையே போக்கிட - என்
       ஆவியே நீதானே மாமனே

தூவிய முட்களில் துவள்கிறேன் - மனந்
       தேறிடும் வழியற்றுத் தீய்கிறேன்
சாவெனும் அரக்கனவனெங்கே - என்
       சினத்தினில் எரியட்டும் இன்றே

அன்புடன் புகாரி
19870000

No comments: