கடவுள் இல்லை என்று
அறிவித்த புத்தர்
அன்பைப் போதித்தார்
கடவுளாக்கப்பட்டார்

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அவனே இறைவன்
என்கிறது இஸ்லாம்

அன்பே சிவம் என்றார்
திருமூலர்

அன்பே கடவுள்
என்பதுதான்
ஆன்மிக அடிப்படை
என்பார் பலர்

இப்படியாய் யாவரும்
அன்பைத்தான் போதித்தார்கள்
அன்பாகத்தான் ஆனார்கள்
கருணையைத்தான் கற்பித்தார்கள்
கருணையாகவேதான் நின்றார்கள்

இனி நாம்
இறைவனை நோக்கிப்
பயணப்படுவது
எத்தனை எளிதானது
என்று சிந்தியுங்கள்

இறைவனை நெருங்க
ஒற்றை வழி
நாம் அவன்போலவே
அன்பாலும் கருணையாலும்
உயர்ந்துகொண்டே செல்லுதல்தான்

அதி உயர்ந்த
அன்பாய்க் கருணையாய்
நாமும் உயர உயர
அவனுக்கு அருகே அருகே
செல்கிறோம்

அன்புடன் புகாரி
20171126

No comments: