*முகநூலும் நானும்*

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை

புது நட்புப் பூக்கள்
தினம் தினம்
மொட்டுடைத்துப் பூக்கின்றன
ஆனால் நான்
அப்படியானதொரு குறிக்கோளில்
முகநூலில் இல்லை

உறவுகள் வந்து
உற்சாகமாய் லைக் போடுகின்றன
ஆனால் நான் அதற்காகவும்
முகநூலில் இல்லை

நண்பர்கள் 
உறவுகள்
நன்கறிந்தவர்
சற்றே அறிமுகமானவர்
மறந்தே போனவர்
யாரென்றே தெரியாதவர்
என்று இன்று
5000 நண்பர்கள் இருக்கிறார்கள்
அதற்குமேலும் வருகிறார்
முகநூல்தான் 5000+ ஐ
ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர
நான் ஏற்கிறேன்

ஏனெனில்
என் இதயம் அப்படியே
விரிந்து பரந்தது
இந்தப் பிரபஞ்சத்திற்கும்
பெரியதாக

இந்த 5000+ ஐ அடையும்
லட்சியத்திலும் 
நான்
முகநூலில் இல்லை

பிறகு
ஏன் இருக்கிறேன்
நான் முகநூலில்?

என் கவிதைகள்
தென்றலாய் உலவ
ஒரு மன்றம் வேண்டும்
புயலாய் வீச
ஒரு கரை வேண்டும்

என் தென்றலின் தீண்டலை
என் புயலின் சீற்றத்தை
என் கருத்தின் புதுமையை
என் கவிநயத்தின் அழகை
ரசிக்கும் நண்பர்கள்
ரசித்ததைச் சிலாகித்து
*மறவாமல்
மறுமொழி இடவேண்டும் *

என் கவிதைகளின்
ஆணிவேர்வரைத்
துளைத்துச் சென்று
கண்ட சுகங்களையும்
கடும் விமரிசனங்களையும்
இணையான விருப்பத்தில்
இன்றே 
இப்பொழுதே
அள்ளித் தரவேண்டும்

நாலு லைக் வந்தாலும்
போதும்
அட 
அதுவும் இல்லாவிட்டாலும்
போதும் போதும்

ஆனால்
ஒவ்வொரு லைக்கும்
உண்மையின் கர்ப்பத்தில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

லைக்கைவிடப் பன்மடங்கு
நான் லைக் பண்ணுவது
வந்து விழும் உங்கள்
மறுமொழிகளைத்தான் 
என்பதை
என் முகநூல் நட்புகள்
அன்போடு
அறிந்து வைத்திருக்க வேண்டும்

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

அன்புடன் புகாரி
20171122

No comments: