அன்று
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறிய
நற்றமிழ் உலகம்

இன்று
நூற்றிப் பதினெட்டு
நாடுகளுக்கும் மேலேறி

கொட்டும் பனிமூடிய
வழுக்குக் கார்ச் சாலைகளிலும்

வெள்ளைச்
சீருடையணிந்த
வைர வேர்ச் சோலைகளிலும்

விரிந்து பரந்து
தமிழ்மூச்சு வீசித்
தளைத்துக் கிடக்கின்றது

இன்னும் பல நாடுகளுக்கும்
தாவிப் பறக்கின்றது

தமிழா தமிழா
தமிழ் நாட்டைவிட்டுப்
புலம்பெயர்ந்த உலகத் தமிழா

தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தும்
தமிழைவிட்டுப் புலம்பெயர்ந்த
தரங்கெட்டத் தமிழா

நீ சென்றேறி வாழுமிடத்தில்
முற்றித் தடித்த
உன் முதிர்ந்த நாவினில்
மட்டுமின்றி

அங்கு நீ பெற்றெடுத்த
உன் பிஞ்சுகளின்
கொஞ்சு நாவுகளிலும்
ஈர இருக்கை அமைத்துத்
தமிழைக் கர்வமாய்
வீற்றிருக்கச் செய்யும்
நாள் எந்த நாளடா?

புலம்பெயர் நாடுகளெங்கும்
இலவசத் தமிழ் வகுப்பும்
இலவசத் தமிழ் உணவும்
வழங்கப் போகும்
நாளெந்த நாளடா?

அன்புடன் புகாரி

No comments: