இருள்

விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது

பதறிப்போய்
ஊதி அணைத்தேன்

ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்

9 comments:

N Suresh said...

ஹைக்கு படிவத்தில் உங்கள் கவிதை இருளை அணைத்துக்கொண்டதே!

அன்புடன் என் சுரேஷ்

Unknown said...

வெளிச்சத்தைக் காட்டுவதற்காகத்தான் சுரேஷ்

அன்புடன் புகாரி

சீதாம்மா said...

எதிர்மறைக் கற்பனைக் குதிரையில் எப்பொழுதும் சவாரி செய்வது சரியா

வேந்தன் said...

இன்னும் பத்து மாதத்தில் குட்டி இருளை ஈனுவீர்களோ?

சாந்தி said...

இருள்தானே மேன்மை என சொன்னீர்கள் அன்று..

வெளிச்சம் பயமா?

இது என்ன இருள்.. விறுப்பா வெறுப்பா?

Unknown said...

சாந்தி,

இந்த இருள் வேறு அந்த இருட்டு வேறு. அந்த இருட்டு பிரபஞ்சத்தின் மிகப்பெரும்பான்மை. சரி இந்த இருள் என்னவென்று பார்ப்போம்.

இந்தக் கவிதையை நாம் நம் சூழலுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். ஒரு சூழல் சொல்கிறேன்:

விளக்கு என்பது கேள்வி. அறிவின் தேடலால் வந்த கேள்வி. ஒரு நண்பன் எனக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நட்பில் அன்பில் இனிமையாய்ச் செல்கின்றன என் நாட்கள். ஆனால் அவன் மீது சந்தேகம் வந்துவிடுகிறது. அதனால் அறிவு விளக்கை ஏற்றினேன். வெளிச்சம்தான் வரவேண்டும். ஆனால் எனக்கு இருள் வந்தது. அவனின் குறைகள் அறிய நேர்கிறது அல்லது சந்தேகம் வலுப்படுகிறது. இப்போது நான் அவனை இழக்கிறேன். அதாவது என் மனம் அவனை என் மதிப்பிலிருந்து கீழே இறக்குகிறது. ஆனால் அப்படி இறக்குவது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் மிகுந்த சந்தோசத்தையும் பெரிய நம்பிக்கையை நான் இழப்பேன். ஒரு வகை நட்பு அனாதையாவேன்.

ஆகவே, பதறிப்போய் ஊதி அணைக்கிறேன். அதாவது இனி சந்தேகம் கொள்ளக்கூடாது. ஏன் அப்படி நினைத்துத் தொலைத்தேன் என்று என்னை நானே நொந்துகொள்கிறேன்.

ஆனால் சந்தேகம் என்பது ஒரு தீப்பொறியைப் போன்றதல்லவா? எனவே அதன் விளைவான அவநம்பிக்கை அதாவது இருள் என்னைப் புணர்ந்துவிடுகிறது. சூழ்ந்துவிடுகிறது. நான் என் எண்ணத்தில் முழுவதும் கெட்டுவிடுகிறேன்....

இதே போன்ற சூழலை காதலன் காதலி, கணவன் மனைவி, பார்ட்னர்கள், பிற உறவுகள் என்று எதனுடன் வேண்டும் மானாலும் பொருத்திப் பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல, மதத்தின் மீதான நம்பிக்கை, இறைவனின் மீதான நம்பிக்கை. அவற்றின் சிதைவுகள் என்றும் கொள்ளலாம்.

ஒருவரியில் சொல்வதானால், கேள்விகள் கேட்காமல் நம்புவது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் அது மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும், உறவுகளையும், அமைதியையும் தரும்.

அன்புடன் புகாரி

சாந்தி said...

அதன் விளைவான அவநம்பிக்கை அதாவது இருள் என்னைப் புணர்ந்துவிடுகிறது. சூழ்ந்துவிடுகிறது. நான் என் எண்ணத்தில் முழுவதும் கெட்டுவிடுகிறேன்....

அருமை..


இதே போன்ற சூழலை காதலன் காதலி, கணவன் மனைவி, பார்ட்னர்கள், பிற உறவுகள் என்று எதனுடன் வேண்டும் மானாலும் பொருத்திப் பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல, மதத்தின் மீதான நம்பிக்கை, இறைவனின் மீதான நம்பிக்கை. அவற்றின் சிதைவுகள்.

மீண்டும் அருமை..


ஒருவரியில் சொல்வதானால், கேள்விகள் கேட்காமல் நம்புவது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் அது மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும், உறவுகளையும், அமைதியையும் தரும்.


நிச்சயம்.. இதுதான் தெளிவு... நமக்கு இப்பிறவியில் தேவை என்ன மன நிம்மதி... கேள்விகள் கேட்பதோ யோசிப்பதோ சந்தேகப்படுவதோ தவறேயில்லை.. ஆனால் முன்முடிவோடு இருக்கணும் ... அதாவது எந்த பதில் கிடைத்தாலும் அது என் மன நிம்மதியை குலைக்காது என்பதில் மிக உறுதியாய்...

இது அனுபவத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு வெற்றி...


இனி இருள் புணராதிருக்கட்டும்....
--
சாந்தி

பூங்குழலி said...

ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்

அசத்தல் ..இருள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது .ஒளி மட்டும் வந்து போகிறது

சீனா said...

அன்பின் புகாரி

இருக்கும் இருள் - வந்த ஒளியினால் - இன்னும் சூழுகிறது
அணைத்த பின் புணர்ச்சி நடக்கிறது

கவிதையின் கற்பனை அருமை
நல்வாழ்த்துகள் புகாரி