ஞாபகங்கள் தேவையில்லை

நிலைத்திருக்கப்
போவதற்கு
ஞாபகங்கள் தேவையில்லை

புதுப்புது மாற்றங்களும்
அதனுள்
இதயங்களின் ஆட்டங்களுமே
அற்புத உறவு

நிலைக்காமல் போனாலும்
ஞாபகங்கள் தேவையில்லை

பறிபோன உறவுகளில்
பழைய ஞாபகங்கள்
சொரிவது வெறும்
விழித்துளிப்
பூக்களைத்தான்

பழுதுபட்ட இதயங்களை
பழைய ஞாபகங்கள்
வந்து ஒட்டித் தைக்கலாம்

ஒட்டவைத்தப் பூவும்
உயிர் மொட்டுப் பூவும்
ஒன்றாவதில்லை

ஒட்டுப் பூக்களில்
பழுதடைந்த ஞாபகங்களின்
தொடர்
விரிசலையே திறக்கும்

ஞாபகங்கள்
தேவையில்லை

4 comments:

மீரான் said...

ஒரு கவிஞர் என்ன மனநிலையில் அல்லது என்ன உணர்வில்,
என்னவிதமான அர்த்தத்தில் கவிதை எழுதி இருப்பார் என்பதை கண்டறிவது சற்று கடினம்தான்.

அது போல் உள்ள கவிதையாய், இது எனக்கு தெரிகிறது.







--
நட்புடன்
மீரான்

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

அற்புதம் ! அற்புதம் ! அற்புதம்.

பல சமயங்களில் மனதில் புதைந்த்ருக்கும் ஞாபகங்களை புரட்ட முனைந்தால் விழி
நீரே மிஞ்சும் என்பதை எத்தனை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தங்களுக்கு நிகர் தாங்களே தான்

அன்புடன்
சக்தி

பூங்குழலி said...

பறிபோன உறவுகளில்
பழைய ஞாபகங்கள் சொரிவது வெறும்
விழித்துளிப் பூக்களைத்தான்


அழகான சொல்லாடல்

ஒட்டவைத்தப் பூவும்
உயிர் மொட்டுப் பூவும் ஒன்றாவதில்லை

உண்மை தான் .ஆனால் ஞாபகங்கள் இன்றி வாழ முடியுமா ?

சீனா said...

அன்பின் புகாரி

கவிதை வழக்கம் போல் அருமை - சொல்லாடலும் அருமை

நினைவுகள் தேவை இல்லையா ? இன்பமும் துன்பமும் கலந்த கலவை தான் வாழ்வு

துன்ப நினைவுகளை மறக்க முயலலாம் - ஆனால் முடியாது
இன்ப நினைவுகளை மறக்க மறுக்கலாம் - ஆனால் முடியாது

என்ன செய்வது - பழைய நினைவுகளை நினைத்து மகிழ்ந்தோ ரணமான மனதினை சாந்தப்படுத்தவோ - அசை போடுவது என்பது மனித வழக்காமாகி விட்டது.

இருந்து விட்டுப் போகட்டுமே புகாரி