நீயும்கூட கவிதை எழுத வந்துவிட்டாயா?

எழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து. இதிலிருந்து கவிஞன் விலக்கல்ல. குப்பைகளைக் காலம் முடிவு செய்யும். எழுதுவோரின் விரல்களை ஒடிப்பது தமிழை ஒடிப்பது. படைப்பு நதி எந்த அணைகளாலும் தடைபடக்கூடாது

வளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான். பாவம் இளையவன்
மருண்டு மயங்கி விலகக்கூடும். அது தமிழுக்குப் பெரு நட்டம்

கவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான். மாறாக கவிதை மலிந்துவிட்டது நீயும் எழுதவந்துவிட்டாயா என்று காயப்படுத்தினால் பாவம் இளையவன் செத்துப்போவான்.

இது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதையாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.

ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

நான் கவிதையல்ல என்று சொன்னதை எவரும் கவிதை என்று ஏற்கக்கூடாது வாழ்த்தக்கூடாது பாராட்டிவிடக் கூடாது என்று வம்படிப்பதில் நகைப்புதான் இருக்கிறது.

கவிதை கால ஓட்டத்தில் தன் வடிவையும் அழகையும் பலவாராய் மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அனைத்தையும் ரசிப்போரும் இருக்கிறார்கள், சிலவற்றை மட்டுமே ரசிப்போரும் இருக்கிறார்கள்.

சிலரின் விருப்பு பலரின் வெறுப்பு, சிலரின் வெறுப்பு பலரின் விருப்பு என்பதை உணர்வதே நடுநிலை.

கவிதை உயிர்த்துடிப்புகளோடு இருக்க வேண்டும் என்பதே கவிதைக்கான பொது அடையாளம். ஆனால் உயிர்த்துடிப்புகளை அடையாளம் காண்பதில் ஆளுக்கொரு வழி வைத்திருப்பார்கள் அந்த வழியை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கு அதை அடுத்தவருக்கு வரையறுத்து மிகச்சரியாகக் கூறவும் தெரியாது.

பலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.

மனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.

7 comments:

சீதாம்மா said...

பதிக்கப்படவேண்டிய, மதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள்
ஒவ்வொருவரும் இதனைப் படித்தால் மட்டும் போதாது.
தெளிவுடன் உணர்தல் வேண்டும்.
நுனிப்புல் மேய்தல் இதில் வேண்டாம்
புகாரியைப் பாராட்டுகின்றேன்
சீதாலட்சுமி

பூங்குழலி said...

--எழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து.

ரொம்ப சரி .

--குப்பைகளைக் காலம் முடிவு செய்யும்.

அந்த பொறுப்பை காலத்திடம் விடுவது சரிதான் .

---வளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான்.

சிலர் வளர்ந்த பிறகு தாங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விழைகிறார்கள் .

----கவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான்.

உண்மை

---ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

இதை வன்முறை என்று சொல்வது சரிதான்

ஹரன் ஜாபர் said...

உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை.

மிகவும் ரசித்த உண்மைகள்:

இது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதையாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.

ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

பலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.

மனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.
”கூர்ந்த பார்வையாலும், நிறைந்த வாசிப்பாலும்” என்பதோடு நேர்மையான அலசலாலும் என்பதனையும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இல்லையேல், 'தன் குஞ்சு பொன் குஞ்சு' மனோபாவம் நம்மைக் கொன்றுவிடும்.

அன்புடன்
ஹரன்

விஷ்ணு said...

அருமையான கருத்துக்கள் .. அன்பின் புகாரி ..

விஷ்ணு ...

துரை said...

நன்று ஆசானே

எனது எழுத்தெல்லாம் எங்கே இருக்கும் என்ற பயம் எனக்கும் உண்டு :)

ருத்ரா said...

"புகாரிப்"பல்கலைகழகத்தில் கவிதை பற்றிய ஆழமான அழகான ஆராய்ச்சிக்
கட்டுரை இது.
பாராட்டுகள்
அன்புடன் ருத்ரா

சாதிக் அலி said...

புஹாரி சார்,

நீங்கள் இன்னும் ஆயிரமாயிரம் எழுதனும் என்று விரும்புகிறேன். எதிர்கொள்ளும் விமர்சனங்கள் உங்களை பாதித்ததென்றால் விமர்சிப்பதையும் விவாதிப்பதையும் நிறுத்திக்கொண்டு ரசிக்க மட்டும் பழகிக்கொள்கிறோம்.

------------------- அன்புடன் சாதிக் அலி, ஜித்தா, சவூதி.