காணி நிலம் வேண்டும் பராசக்தி

கனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது

காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
ஒலிவெள்ள கீதவாணியே
உயர்வாய் நீ நாளுமே


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்குக்
கத்துங் குயிலொசை - சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..

பாரதிக்கு ஏன் இதெல்லாம் வேண்டுமாம்?

1. காணிநிலம்: வசதி என்றாலே சொந்தமாய் ஒரு நிலம் இருப்பதுதானே!

2. அழகிய தூய மாளிகை: நிலம்மட்டும் போதுமா? அதனுள் ஓர் அருமையான மாளிகை வேண்டாமா?

3. கேணியும் தென்னைமரமும்: ஆகா, அருமையான இயற்கைச் சூழல் பாலவனத்து மாளிகையாக இல்லாமல்... தண்ணீர், அது நிறைவாய் இருப்பதைச் சொல்லும் தென்னை. தென்னைமரம் ஓர் இயற்கையான விசிறி அங்கே அமர்ந்தால் தெரியும். நான் கிராமத்தில் பிறந்தவன். தென்னை இளங்கீற்றின் சுகமே தனி. தென்னைமரம் ஒன்றிரண்டா கேட்டான். ஒரு பத்துப் பனிரண்டு வேண்டும் என்கிறான். இடைவெளியே இல்லாமல் அவன் தோட்டத்தை நிறைக்க.

4. முத்துச்சுடர்போலே நிலவொளி: பூமியை முடித்துவிட்டு இப்போது வானம். இன்றெல்லாம் நிலாவைப் பார்க்க நாம் வெளியே வருவதே இல்லை. அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே என்று நிலா காதலின் தோழமை, தூண்டுகோள். அந்த நிலா எந்தத் தடையுமில்லாமல் முன்பு வரவேண்டும் என்கிறான்

5. கத்தும் குயிலோசை: குயில் பாடுமா கத்துமா? ஏன் கத்தும் என்கிறான் பாரதி? இதுவும் காதலைச் சொல்லும் ரகசியம்தானே? கத்துவது என்றால் கூவி அழைப்பது என்று பொருள். தூரத்தில் இருப்பவர்களை அழைப்பதற்கான சொல் கத்துவதுதான். கத்தித்தான் தன் காதலை அழைக்கிறது குயில். அந்தக் கத்தும் குயிலோசை அவன் காதில் படவேண்டுமாம். காதல் தூண்டுவதற்கா? அல்லது தன் உள்மனக் காதல் குரலுக்கு இசையாகவா?

6. தென்றல்: சித்தம் தனிந்திடத் தென்றல் வரவேண்டும். ஆகா! தென்னையும் தென்றலும் போதுமே போதுமே! கொதிப்பவன் குளிரவேண்டுமே என்ற கவலையும் கொள்கிறான். இந்த வியர்வை மழைக்கு ஒரு வழிபண்ணவேண்டாமா?

7. பத்தினிப்பெண்: யார் பத்தினிப்பெண்? தன்மீதுமட்டுமே தணியாத காதல் கொண்ட பெண்தானே பத்தினிப்பெண்? இணக்கமான பெண் இல்லாதவர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் உண்டா? இது மிக முக்கியம். எனவே பாரதி தெளிவாகக் கேட்கிறான். ஏதோ ஒரு பெண் வேண்டாம் எனக்கு, பத்தினிப் பெண்தான் வேண்டும். இணக்கம் என்பதை எப்படிச் சொல்கிறான் பாருங்கள். பாட்டுக்கலந்திடவே. பாட்டு எப்போது கலக்கும். இருவரும் ஒரு ரசனையில் ஓர் உணர்வில் கூடும்போதுதானே? கலக்கல் இல்லையா?

8. கூட்டுக்களியினிலே கவிதைகள்: அருமை அருமை! இன்பமென்றால் அதை இருவருக்கும் சமமாக்குவோம் என்று பட்டுக்கோட்டையார் பாடுவார். என்ன நடக்குது அங்கே? ஒரே கூட்டுக்களியா இருக்கே என்பார்கள். ஒத்துப் போனவர்களின் இன்ப விளையாட்டு. அது தரும் பல்லாயிரம் கவிதைகளை. அடடா கவிதை எழுத பாரதி தரும் சூழல் என்னமாய் மயக்குகிறது பாருங்கள்.

9. காவல்: காடுவெளியினிலே - பாருங்கள் காணிநிலம் வேண்டும் என்றான். அதுவும் எங்கே என்று இங்கே சொல்லிவிட்டான். காட்டுவெளியினிலே. தனிமை கவிஞனுக்குப் பிடித்த இடம். தீவுக்குப் போவாமா? நிலாவுக்குள் ஓடி விளையாடுவோமா? வேற்றுக்கிரகணம் தாவுவோமா என்றுதான் எல்லா கவிஞனும் கேட்கிறான். அங்கே தொல்லையில்லாமல் இருக்க காவலும் வேண்டுமாம் பாரதிக்கு. பராசக்தியின் காவல். இதில் இன்னொன்றும் இருக்கிறது. காட்டுவெளி என்று இந்தக் கேடுகெட்டப் பொறாமை உலகையும், அதிலிருந்து காப்பாற்ற பராசக்தியையும் அழைப்பதாய்க் கொண்டால் மேலும் சிறக்கும். இத்தனையோடும் இருந்தால் பொறுக்குமா நீலிக்கண்களுக்கு. அதைக் காக்க பராசக்தியின் துணை வேண்டுமாம்.

10. பாட்டுத் திறத்தால் வையம் பாலித்தல்: அருமையான நிலம், அதில் அழகான மாளிகை, தென்னைமரம் தரும் இதம், கேணிதரும் ஈர வசந்தம், முத்துச்சுடர்போல் நிலவொளியின் போதை, கத்தும் குயில்தரும் கிறக்கம், எழும் கொதிப்பைச் சீராக்கத் தென்றல், பக்கத்தில் காதல் வழியும் பத்தினிப் பெண், அவர்களின் விளையாட்டால் பொங்கும் கவிதைகள், பொறாமை உலகிலிருந்து காக்க பராசக்தியின் காவல், இத்தனையும் கிடைத்துவிட்டால்? இந்த வையத்தை மறந்து சுகங்களில் புறண்டு காணமல் போவேனோ? அப்படியாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள். அதுதான் என் மூச்சு. அதுதான் என் வாழ்க்கை அதுதான் என் உயிர் என்கிறான் பாரதி

பாட்டுத் திறத்தாலே
இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..

இந்த உலகையே சுபிட்சமாக்கும் பாட்டுவரிக்குச் சொந்தக்காரன் கேட்பது எத்தனை எளிமையான காதல் சூழல். கோடி பொன் கேட்டானா? எல்லோரும் எனக்குத் தலைவணங்க வேண்டும் என்று கேட்டானா? இந்த உலகை ஆளவேண்டும் என்று பேராசைப் பட்டானா? எழுத்தால் ஆளும் கவிஞனுக்கு புறஆட்சி தேவையே இல்லையே. அது அவனுக்குப் பிடித்தமில்லாத பணியல்லவா.

பாரதி கேட்டத்தைக் கொடுங்கப்பா என்று எல்லோருக்கும் கட்டளையிடத் தோன்றுகிறதல்லவா?

அன்புடன் புகாரி
20031211

2 comments:

பூங்குழலி said...

இந்த கவிதையைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு கடுப்பு தான் வருகிறது புகாரி .....நமக்கு இதெல்லாம் கிட்டுவது எக்காலம் ?

shanu said...

i love this poem