காதலா வீரமா


கேள்வி:
எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' காதல் எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி.


பதில்:
இந்த உலகத்துக்கு எது தேவை? மனித நேயம் காக்க எது அவசியம்? தீவிரவாதமா வன்முறையா விரோதமா அல்லது அன்பு கருணை பாசமா?

தமிழ் சினிமாவில் இரண்டு விச்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கமுடியும். ஒன்று காதல் இன்னொன்று சண்டை. அத்தனை படங்களும் இவற்றைச் சுற்றித்தான். விதிவிலக்குகளை ஓரங்கட்டுவோம்.

சரி சங்ககாலத்தை எடுப்போம், தமிழர் காதலையும் வீரத்தையும்தான் இரு கண்களாய்க் கண்டனர். இந்த இரண்டையும் பற்றித்தான் அகநாநூறுகளும் புறாநாநூறுகளும்.

மனிதனை ஆக்கிரமிப்பதில் இந்த காதலுக்கும் வீரத்திற்கும் அதீத சக்தியுண்டு. இதில் எது உயர்ந்திருந்தால் உலகம் அமைதியில் தவழும் என்று நாம் சிந்திப்பது மிக அவசியம். காதலையோ வீரத்தையோ முற்று முழுதாக நம் வாழ்விலிருந்து அகற்றிவிடமுடியாது என்றாலும் ஒன்றை உயர்த்திப்பிடித்து இன்னொன்றை உள்ளுக்குள் வைத்திருப்பது இயலக்கூடிய ஒன்றுதான்.

காதல் என்பது அன்பு, கருணை, பாசம், அமைதி என்ற திசையில் பயணப்படும்போது வீரமோ வன்முறை, தீவிரவாதம், சிறுவர்கள் கையில் அரிவாள், இப்போது சின்னதாய் துப்பாக்கி. சொல்லுங்கள், இந்த உலகத்துக்கு எது தேவை?

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்துசெய்த கலவைதான் மனிதன். அவனிடம் இருக்கும் கடவுளை வெளிக்கொண்டுவருவதே நாம் போற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். மிருகத்தைக் கொன்றழிக்க காதலைத்தவிர வேறு எதுவும் கைகொடுக்காது.

மனிதன் ஏதோ ஒரு பிடிப்பில் தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கும்போது, மென்மையாகிவிடுகிறான். அது காதலென்றுவிட்டால் சொல்லவே வேண்டாம்.

இப்போது கூறுங்கள் இந்தப் பிரபஞ்சத்துக்கு எது வேண்டும்? காதலா அல்லது வீரமா? சமாதி எது? சாகும்வரை காதலே போற்றும் வீரம் கொள்வோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளையும் நாம் காதலிப்போம். அதுவே உண்மையான காதல். அதற்கு ஆதாரமாய் அமைவது ஆண் பெண் மீது கொள்ளும் காதலும் பெண் ஆண்மீது கொள்ளும் காதலும்தான்.

பிரபஞ்சச் செடியில் காதல் ரோஜாக்கள் பூக்கப்பூக்க, வன்முறை முட்களெல்லாம் உதிர்ந்து போய்த் தொலையட்டும்.

No comments: