குறையுள்ள மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போனால்
கல்லும் வைரமாக
கையிலேயே இருந்தால்
வைரமும் கல்லாக

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போகுமென்று
முன்பே அறிந்திருந்தால்
உயிரைக் கரைத்து ஊற்றி
ஒட்டுப்பசை நெய்திருப்பேன்

கையை விட்டுப் போகாதென்ற
கர்வத்தில்தானே நான்
கயிறிழுத்துப் பார்த்தேன்

வைரக் கல்லும் போனது
வைராக்கியக் கயிறும் போனது

கனவின் இழையும் பிரிந்தது
உயிரின் உயிரும் மரித்தது

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

வந்ததில் தவறில்லை
சென்றதும் தவறில்லை

வருவதும் போவதும்
வாய்ப்பதும் கழிவதும்
வாழ்க்கையின் நிகழ்வுகள்

வந்தது கல்லாக
சென்றது வைரமாக
கருத்துப் பிழை
வருவதென்ன நியாயம்

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

6 comments:

cheena (சீனா) said...

அழகு தமிழ் - எளிமையான சொற்கள். இருக்கும்போது புரியாத பெருமை சென்றவுடன் புரியும். பாடாய்ப் படுத்தும். என் செய்வது. இறைவன் நிறையுள்ள மனத்தினைத் தான் தந்திருக்கிறான். நமக்குத் தான் புரியவில்லை.

N Suresh said...

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா..

என்றொரு பாடலுண்டு. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

இந்த கவிதையின் தலைப்பை பார்க்கும்போதும் இந்த கவிதையை படித்து முடித்த போதும் அதே பாடல் என் நினைவுகளில் பாடிக்கொண்டிருக்கிறது. மலையாளத்தில் ஒரு பழஞ்சொல் உள்ளது " கண் இருக்கும்போது கண்ணோட அருமை தெரியாது".

இந்த பழஞ்சொல் எனக்கும் பலமுறை பல பாடங்கள் கற்பித்து தந்துள்ளது. எல்லோருக்கும் தொடர்ந்து கற்றுத்தருகிறது.

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சை தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா

எனப்போகும் அந்த பாடல் நமக்கு
எத்தனை அறிவுரை கூறுகிறது?

அதே போன்று நல்லதோர் கவிதை தந்த கவிஞரே, என் இனிய வாழ்த்துக்கள்.

பாசமுடன்
என் சுரேஷ்

Aruna said...

//வந்ததில் தவறில்லை
சென்றதும் தவறில்லை
வருவதும் போவதும்
வாய்ப்பதும் கழிவதும்
வாழ்க்கையின் நிகழ்வுகள்//

ரொம்ப எளிமையாக, இனிமையாக,வைரமாக மின்னியது கவிதை!!
அன்புடன் அருணா

Unknown said...

அன்பின் சீனா,
நிறைவுள்ள மனதாய் ஆக்கும் போராட்டமே இந்த மனித வாழ்க்கை என்று எண்ணத் தோன்றுகிறது

அன்பின் சுரேஷ்,
குறையில்லா பக்தியைக் கொடுத்திருக்கின்றான் இறைவன் உங்களுக்கு

அன்பின் அருணா,
கவிதையின் ஜீவனை மிகச் சரியாக கண்டெடுத்துவிட்டீர்கள். பாராட்டிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்

சாந்தி said...

கையை விட்டுப் போனால்
கல்லும் வைரமாக
கையிலேயே இருந்தால்
வைரமும் கல்லாக

என்ன ஒரு வர வரிகள்..



குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போகுமென்று
முன்பே அறிந்திருந்தால்
உயிரைக் கரைத்து ஊற்றி
ஒட்டுப்பசை நெய்திருப்பேன்
ம்.



கையை விட்டுப் போகாதென்ற
கர்வத்தில்தானே நான்
கயிறிழுத்துப் பார்த்தேன்

அனைவரும் செய்யும் தவறு..



வைரக் கல்லும் போனது
வைராக்கியக் கயிறும் போனது
கனவின் இழையும் பிரிந்தது
உயிரின் உயிரும் மரித்தது

படிப்பினை.



குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

வந்ததில் தவறில்லை
சென்றதும் தவறில்லை
வருவதும் போவதும்
வாய்ப்பதும் கழிவதும்
வாழ்க்கையின் நிகழ்வுகள்

வந்தது கல்லாக
சென்றது வைரமாக
கருத்துப் பிழை
வருவதென்ன நியாயம்

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

குறை நம்மிடம் என உணரும்போதே ஒருவன் நிறையுள்ளவனாகிடுவானே..

செந்தில் குமார் said...

எளிதான சொற்கள் கொண்டு சிறப்பாக உள்ளது. கவிதையும் கருத்தும்.