இணையத்தோரே

தேனீர்க்கடை தாண்டி
தெருமுக்குக் கூட்டம்தாண்டி
தேதி குறித்துக் கூடும்
இலக்கிய வட்டங்கள் தாண்டி
இணையமென்ற மேற்தள மாடம் வந்து
அகம்பூக்க அமர்ந்தால்

ஐயகோ...
இங்குமா அந்தச்
சில்லறை அரசியலின்
நச்சுமுள் விளையாட்டு

ஒருவன்
இருவனாகிக் கூடும்போதே
பேயாட வந்துவிடுகிறது
பொல்லாத அரசியல்

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்

காரணம்...

அவரின்
அரைகுறைச் சொல்லைப்
பாராட்ட ஆளற்றுப் போனதே
அந்தச் சோகம்

தன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே படுபாவி
அந்தப் பொறாமை

இவன் என்
எதிரி எழுத்தாளனின்
தாசனாயிற்றே
அந்த விரோதம்

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
தன் கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனம்

கண்டதுக்கும்
மறுமொழியிட்டுவிட்டால்
நாம் பணிப்பளுவால் சிக்குண்டு
தவிக்கிறோமென்று எப்படி நிரூபிப்பது
அந்தச் சாதுர்யம்

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணம்

இப்படியாய்ப் பலரழிய...

நாலுவரி என்று நாம் மூச்சுவிட்டால்
நாநூறு பிழை என்ற
நம் ஆஸ்துமாவல்லவா
அறிவிக்கப்பட்டுவிடும் என்றே
இன்னும் சிலர்

இவை போதாதென்று
இந்தக்குழு அந்தக்குழு என்ற
இணையக் குழுக்களின்
தன்மானத் துவேசத்தால்
குரல்கிழியும் குற்றச்சொற்கள்
காமநோய்க் கிருமிபோல்
கணக்கற்ற பெருக்கத்தில்

சின்ன வட்டத்துக்குள்ளும்
குட்டிக் குட்டி
குண்டூசி வட்டங்கள் போடுவதையா
சுதந்திர எழுத்து சொல்லித்தருகிறது

ஆயிரம் வட்டங்களையும்
மாண்போடு உள்ளடக்கிக் கொள்ளும்
மாசறு வட்டமல்லவா எழுத்தாளன் இதயம்
அதை எங்கே தொலைத்துவிட்டு
இங்கே வந்து உப்புக் கரிக்கிறீர்

ஆக...
அதி உயர் நவீன தமிழ்ச்சங்கமான
நம் இணையக் கோபுரமும் இன்று
நாற்றமெடுக்கும் நரகல் தொட்டிக்குள்

நாம் மாறாமல்...
நம் எண்ணக் கப்பல்
நங்கூரம் இட்டுக்கிடக்கும்
நரக நினைப்பை மாற்றாமல்
எந்த நவீனம் வந்து இங்கே
என்னவாகப் போகிறது?

கோட்டும் சூட்டும் அணிந்திருந்தாலும்
உள்ளத்தில் ஏற்றம் இல்லாதுபோனால்
நாற்றம்தானே வீசும்

நெஞ்சின் நேர்மைக்குக்
கருஞ்சாயம் பூசி
காணாதொழிக்கும் நண்பர்களே
இனியேனும் உங்கள்
நெஞ்ச வஞ்சங்களைக்
காலைக் கடனாகக்
கழித்துத் தொலையுங்கள்

அத்தனைக்கும் உச்சாணிக் கொம்பு
இவ்வுலகில் எழுத்துமட்டும்தான்
அதை இருட்டுக்குள் இருந்து
கிறுக்கிப் பார்க்காதீர்கள்

வெளிச்சத்தைத் தட்டி எழுப்ப
விரலிடுக்கில் எழுத்து நீர்க் குவளையோடு
நிற்கும் நீங்கள் முதலில்
வெளிச்சத்தை முத்தமிடுங்கள்

தாய்மொழி தமிழுக்கும்
தரமான இலக்கியத்துக்கும்முன்
இவையாவும் வெட்கக் கேடுகள்

4 comments:

GG said...

சில நேரங்களில் பதிவர்கள் தம்மை
பின்னூட்டம் இடக்கூட தகுதி இல்லை
என நினைத்திருக்கலாம்...என்னைபபோல
(தாழ்வு மனப்பான்மை இன்னும் தமிழனை விட்டு அகலவில்லை)

செல்வன் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா:-)

விஷாலம் said...

அன்பு புஹாரி எல்லாமே அன்பு வளையத்துக்குள் வந்து அன்பினால்
புரிந்து நடக்க அங்கு அமைதியைத்தவிர வேறு என்ன வரமுடியும் ?

அப்பண்ணா said...

வாழ்த்த மனம் வேணும்
வாழும் மனம் வரும்
அன்பு காட்ட மனம் வேணும்
அது பாட்டுக்கு கொட்டும்
அன்பு கணக்கு பாக்காது
கணக்கு பாத்த அன்பு
காண போய்டும்

அம்பட்டு மவராச(சி)னும்
வாழ்க வளமுடன்