வைரமுத்து ஏற்றிய மெழுகுவத்தி


வைரமுத்து கவிதைகளில் எது எனக்கு மிகவும் பிடித்த கவிதை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் சிரித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவேன். ஏனெனில் அதைத் தேடத் தொடங்கினால் அந்தத் தேடலில் நான் அப்படியே தொலைந்துபோய்விடக்கூடும்.

ஒவ்வொரு கவிதையிலும் தன் உயிரை எப்படித்தான் இவர் இறக்கி வைத்துவிடுகிறாரோ தெரியவில்லை. எதில் அவரின் எத்தனை சதவிகித உயிர் எப்படித் துடிக்கிறது என்று நான் கண்டறியும்முன் என் துடிப்புகள் உச்சத்துக்குப் போய்விடும்.

எனவே திருவுளச்சீட்டு எடுப்பார்களே அதுபோல ஏதோ ஒரு கவிதையைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்துக்கொண்டு நான் அதில் எதை ரசித்தேனோ அதை எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தபோது என் தமிழ்ப் பேராசிரியரால் வைரமுத்து எனக்கு அறிமுகமானார். வைகறை மேகங்கள் என்ற கவிஞரின் முதல் தொகுதியிலிருந்து இரு வரிகளை எடுத்து புதுமை வரிகள் என்று அடையாளம்காட்டியதுதான் அவர் செய்த அறிமுகம். ஆனால் நான் வாசித்த வைரமுத்துவின் முதல் கவிதை நூல் திருத்தி எழுதிய தீர்ப்புகள்தான். அதன் ஒவ்வொரு கவிதையும் என் வேர்களை அறுத்துக்கொண்டு என்னைப் பறக்கச் செய்தது. அதிலிருந்து ஒரு கவிதையைக் கண்ணை மூடிக்கொண்டு இன்று தொட்டேன். தொட்டது "மெழுகுவத்தி".

ஐம்பதைக் கடந்து சில ஆண்டுகளும் ஓடிவிட்ட, சாகித்ய அகாடமி விருதுபெற்ற, பத்மஸ்ரீ வைரமுத்துவின் இன்றைய கவிதைகள் அவரின் வலிமைமிக்க விரல்களின் வழியே வழிந்தோடுபவை. ஆனால் இந்த 'மெழுகுவத்தி' கவிதையோ விமரிசனக் கட்டுகளுக்குக் கட்டுப்படாத அவரின் இளமைக்கால முயற்சி. வெகு நாட்களுக்குப் பின் நான் இக்கவிதையை மீண்டும் வாசிக்கிறேன். அன்று அது எனக்குள் ஊட்டிய உணர்வுகள் இன்னும் காய்ந்துபோகாமல் இருந்தாலும் இன்று எனக்கு அது எந்த உணர்வுகளை ஊட்டுகிறதோ அவற்றை நான் அப்படியே பதிவு செய்ய முயல்கிறேன்.

பலரும் மெழுகுவத்தி எரிவதைப் பார்த்தவர்கள்தாம். அதைக் காண்பது ஒரு வித்தியாசமான அனுபவம். அதின் முன் அமர்ந்து இரவு உணவு உண்பது மேலை நாடுகளில் பலருக்கும் பிடித்தவிசயம். சில மகிழ்ச்சிகளை அது நெஞ்சில் சுடர்விடச் செய்யாமல் எவரையும் விடாது. விழிமூடாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் பலர். சிலர் அது எரிந்து ஓயும் கடைசி நிமிடத்திற்காகக் காத்திருக்கவும் செய்வார்கள். அவ்வளவு எளிதில் அது ஓய்ந்தும்விடாது.

வைரமுத்து என்ற வாலிபரும் எரியும் ஒரு மெழுகுவத்தியின்முன் அமர்ந்திருக்கிறார். ஆனால் அது அவரை வெறுமனே அமர்ந்திருக்கவிடவில்லை. கற்பனைச் சிறகுகள் படபடவென அடித்துக்கொள்கின்றன. விழிப்பறவைகள் அந்தச் சுடர்மலரைச் சுற்றியே வட்டமிடுகின்றன. எண்ணக்குருவிகள் கீச்கீச்சென்று உள்ளுக்குள் ஒலியெழுப்பிக்கொண்டு இங்குமங்கும் தத்துகின்றன. உயிர் மெல்ல கரைகிறது. அதை உள்ளம் சூடாக உணர்கிறது. கவிதை வந்து கொட்டுகிறது.

சுயநலமில்லாத ஒரு தாய் நின்றுகொண்டே அழுகிறாள். ஏன்? தன் வயிற்றின் கரு எரிகிறதே என்று. வெள்ளை மெழுகு இங்கே தாயாகவும் அதன் உள்ளிருக்கும் திரி கருவாகவும் வைரமுத்துவின் கண்களில் பட்டதால் வந்த வரிகள் இவை. அழுகை என்றால் எப்படியான அழுகை, தன்னை அப்படியே கரைத்துத் திரவமாக்கும் அழுகை. இதோ அந்த வரிகள்...

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள்


வார்த்தை முடிகளைப் பின்னிப் பின்னி தமிழை வசீகர கூந்தலாக மட்டுமே காணத் துடிக்கும் கண்கள் வைரமுத்துவினுடையவை. தமிழின் மீதுள்ள இவரின் அழகியல் தாகத்தை இவர் தன் ஒவ்வொரு சொல்லிலும் விருந்துவைக்காமல் விடுவதில்லை. பழந்தமிழின் செழுமைகளைப் பிழிந்து எளிமையாக நவீன யுகத்துக்குள் ஊற்றும் முயற்சி இவருக்கு இயல்பாய் வாய்த்திருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவராயிற்றே.

புதுக்கவிதைக்கு இசை கிடையாது என்பார்கள் அறியாதவர்கள். பேசும் பேச்சிலேயே இசை இருக்கும்போது இதயத்தை இயக்கும் புதுக்கவிதைக்குள் எப்படி இசை இல்லாமல் போகும். அது ஆரவாரம் கொண்ட தண்டவாளத்தின் தடக் தடக் இசையல்ல உயிரின் விரல்களைக் கோத்துக்கொண்டு மெல்ல மெல்ல அசையும் மென்மையான இசை. மலர் மலரும்போதும், இலைகள் வளரும்போதும், வேர்கள் நனையும்போதும் எழும் இசையைக் கேட்கும் அறிவு மனிதர்க்கில்லைதான். ஆனால் இசை எங்கும் உண்டு என்ற அறிவு உண்டு. வைரமுத்துவின் புதுக்கவிதைகளில் இசை துல்லியமாகவே பின்னிக்கிடக்கும். இந்தக் கவிதை முழுவதிலும்கூட அந்த இசையின் சுகானுபவத்தை ரசிக்கலாம்.

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது


வைரமுத்து கவிதைகளில் இருக்கும் இன்னோர் அழகு அவர் முரண்வைத்து நடக்கும் நேரிய நடை. இந்தக் கவிதை முழுவதும் அது சிறப்பாக அமைந்திருக்கிறது.

மரணத்தை வரங்கேட்டா
அந்த உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு நீர்ப்பயிர் வளர்க்கிறது


அடடா, ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு எத்தனை எத்தனை கோணங்கள். இவரின் கற்பனையின் அளவுகள் சுனாமி அலைகளைவிட எத்தனை உயரமானவை என்று வியக்கலாம். கவிதாகத்தால் தன்னை மறந்து பொங்கிய நிலையில் ஒரு விசயத்தின் பல சாத்தியக்கூறுகளையும் அலசி அலசி அழகுற சொல்லிப் போகும் தன்மை வைரமுத்துவினுடையது. ஒரு மரத்திற்கு எத்தனை வேர்கள் உண்டோ அத்தனையையும் நெய்தடவி நீவிவிட்டு காட்டிவிடவேண்டும் என்ற துடிப்பும் அதில் அமைதி பெறாத தவிப்பும் வைரமுத்து கவிதைகளில் காணலாம். இதன் காரணமாகத்தான் இவரின் பல கவிதைகள் தன் அளவில் நீண்டுவிடுகின்றன. அழகுதமிழ் வழிந்தோடும்போது அது நீளமானால் என்ன என்ற சமாதானத்தில் கவிதையின் புறநாறூற்று இறுக்கத்தைத் தியாகம் செய்யும் மனம் கொண்டுவிட்டவர் வைரமுத்து. மெழுகுவத்தி கவிதையில் மெழுகு எரிவதை இப்படி பல நிலைகளில் நின்று பார்க்கிறார். எல்லா நிலைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வேன் என்று துடியாய்த் துடிக்கிறார். பல தேர்ந்த கவிஞர்களும் ஆச்சரியப்படும் வண்ணம் நிறையவே சொல்லியும் இருக்கிறார். ஆனால் அவரிடம் கேட்டுப்பாருங்கள், இன்னும் நிறைய சொல்லவேண்டும் என்றுதான் இப்போதும் துடிப்பார். அந்தத் துடிப்புதான் வைரமுத்து.

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?


எத்தனை அருமையான வரிகள் இவை? தீ மௌனமாய் நம்முடன் பேசுகிறது. உருகி வழியும் மெழுகினை வார்த்தைகளாய் தந்துகொண்டு சத்தமில்லாமல் உச்சக்குரலில் பேசுகிறது. அந்த வார்த்தைகளின் பொருள் தேடிச் சென்று பாருங்கள். இந்தக் கவிதையின் நீளம், இதில் உள்ள வரிகளைவிட எத்தனை பெரியது என்று விளங்கும். ஒரு கவிதை என்பது அதன் வரிகளோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி வாசிப்பவனின் இதயத்தில் நீண்டு வளர்வது. அப்படி இழுத்துச் செல்லும் இந்தக் கவிதையை வாசித்துவிட்டு விழிகள் நிலைகுத்திப் போகும் ஆபத்து அநேகமாக எல்லோருக்கும் நேரும் என்றுதான் தோன்றுகிறது.

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?


வைரமுத்து இயற்கையின் தீராத நேசன். இலைகளோடு இலையாய் கிளைகளோடு கிளையாய் வேர்களோடு வேராய் இயற்கையோடு வாழும் வேட்கை இவரின் ஒவ்வொரு எழுத்திலும் காய்த்துத் தொங்குவதைக் காணலாம். வயல், வரப்பு, பட்டி, தொட்டி என்ற இந்தியாவின் ஜீவன்களால் உருவானவை இவரின் செல்கள். இன்றைய நவீன சாலைகளில் திடமாக நடந்தாலும் இயல்பான கிராமிய நடை நடந்து இதயங்களைச் சிலிர்க்கவைப்பவர் வைரமுத்து. வட்டார வழக்கே ஒருவரின் உண்மையான தாய்மொழி என்ற உண்மையை உணர்ந்தவர். இவர் தன் வட்டார வழக்கில் கவிதை பேசும்போதெல்லாம் பலரும் வாயடைத்துப் போகிறார்கள்.

நிலா என்றால் அது தேயும்தான். தேய்ந்து முடிந்ததும் ஓய்ந்துபோவதில்லை அது. மீண்டும் வளரும். ஆனால் மெழுகுவத்தி ஒரு நிலவைப் போலத்தான் அழகாகத் தேய்கிறது. ஆனால் அது மீண்டும் வளர்வதில்லையே ஏன்? அது இழக்கும் ஒளி நம் இதயத்தில் பெருகி வளர்கிறதே அதனால் இருக்கலாம். ஆனாலும் அது ஒரு சாபம் போலத்தானே தெரிகிறது?

எப்பொழுதுமே
இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன சபிக்கப்பட்ட நிலவா?


பெண்ணுக்கு கற்பு உண்டு என்கிறார்கள். ஆணுக்கு இல்லாவிட்டால் பெண்ணுக்கு மட்டும் எப்படி அது இருக்கும் என்று தெரியவில்லை? கர்ப்பம்தான் பெண்ணின் கற்பு என்று முடிவு செய்ததினால் வந்த பிழையாக இருக்கலாம். கற்பு என்றால் அதனை ஆணுக்கும் பெண்ணும் பொதுவில் வைக்கவேண்டுமல்லவா? இல்லாவிட்டால் பாரதியின் சிரிப்புக்கும் சினத்திற்கும் ஆளாகமாட்டோமா? சரி ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் கற்பு உண்டா? ஒதுக்கீட்டுக் கடையில் வாங்கும் அரிசிக்கும்தான் கற்பு உண்டு. நாலு கல்லை அதில் கலந்து கள்ள வியாபாரி அதைக் கற்பழித்துத் தருகிறானே? ஆனால் வைரமுத்து கற்பு எதற்கும் உண்டு என்கிறார் என்று இந்த வரிகளில் பாருங்கள்.

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது


இப்படியாய்க் கவிதை முழுவதும் கற்பனை நிஜத்தின் தளங்களில் நின்றுகொண்டு விண்களம் விடுகிறது, கும்மாளம் போடுகிறது, அதிசயிக்க வைக்கிறது, அமைதியாய்த் தவழ்கிறது, நம்மை அசையாத பொருள்களாக்கி வேடிக்கையும் பார்க்கிறது.

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள் முட்டி மூழ்கும்


வைரமுத்து நம்மிடம் ரகசியமாய் எதையும் சொல்ல வருவதே இல்லை. அவர் சொல்வதெல்லாம் பகிரங்கமானவைதான். ஏனெனில் அவர் சொல்வது எதுவும் கிசுசிசுக்கள் அல்ல. சாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, களவு அரசியல் என்ற அனைத்துச் சிறுமைகளையும் கிழித்தெறியும் உரத்த குரலின் உச்சம் அவருடையது. சமூக அநீதிகளைச் சாடும்போது இவரின் தீப்பிடிக்கும் வரிகள் எந்த அவலத்தையும் பொசுக்கிப்போடும் வீரியம் கொண்டவை. பள்ளிநாட்களிலிருந்தே மேடையேறி உச்சக்குரலில் உயர்வான கவிதைகளை செவிகளும் சிந்தனைகளும் மெச்ச அரங்கேற்றியே வளர்ந்தவர். தனக்குமுன் வாழ்ந்த தமிழின் நீண்ட பெரும் கவிஞர்களின் முகங்களில் வேண்டிய பகுதிகளைமட்டும் கிள்ளிக்கிள்ளி தன் முகத்தின் வடிவாய் ஆக்கிக்கொண்டவர். அதோடு நின்றுவிடாமல் தனக்கென ஒரு முகத்தையும் தெளிவாக வெளிக்கொண்டுவந்து தனிநடை போடுபவர்.

புதிதுபுதிதாக பல இலக்கிய நடைகளை தமிழ்க் கவிதை ஆற்றின் இளைய கிளைகளாய் ஆக்கித் தந்தவர். மரபிலும் மன்னன், இவர் புதுக்கவிதையிலும் பேரரசர் என்று கலைஞர் கருணாநிதியால் புகழப்பட்டவர். நல்ல தமிழ்க் கவிஞர்கள் என்று பெருமையோடு உலகெங்கிலும் சொல்லிக்கொள்ள நம்மிடையே உள்ள மிகக்குறைவான கவிஞர்களுள் இவரும் ஒருவர். இவர் மெழுகுவத்தியின் அடுத்த வரிகளில் ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறார்

அங்கே வடிவது கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?


நல்ல கேள்வி. பதில்தேடி சற்றே சிந்திக்கிறான் வாசகன். தன் கவிதையை எழுதுவதில் வாசகனையும் உடன் அழைத்துக்கொள்வது எத்தனை சர்க்கரை விசயம்? வாசகனோ "வைரமுத்து, நீ என்ன சொல்கிறாய்? சீக்கிரம் சொல்லிவிடு என் ஆவல் என்னைக் கொல்கிறது" என்று அடுத்த வரிகளை வாசிக்கிறான்

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?


அடடா, இது எங்கோ இட்டுச்செல்கிறதே. மெழுகுவத்தி தன் கண்களை வேண்டி நிகழ்த்தும் உருகுவிரதமா இங்கே நிகழ்வது? இப்படியாய் இந்தக் கவிதைக்குள் மூச்சைப் பிடித்துக்கொண்டே எத்தனை தூரம் பயணப்படுவது? அடுத்தடுத்த வரிகள் மேலும் மேலும் கனமாகவே வந்து விழுகின்றனவே? தன் முதல் தொகுப்பிலேயே யாப்பிலக்கணத்துக்குள் புதுக்கவிதை எழுதியவர், புதுக்கவிதைகளுக்குள் மரபின் வாசனைகளை ஊற்றுபவர் வைரமுத்து. கனியன் பூங்குன்றனோடும், கம்பனோடும் வள்ளுவனோடும், பாரதியோடும், பாரதிதாசனோடும், கண்ணதாசனோடும் என்று மட்டுமல்லாமல் இன்றைய கடைக்குட்டியோடும் இணையாக அமர்ந்து சிறப்பாகப் பாடி பாராட்டுகளைப் பெறும் ஆற்றல் பெற்றவர். எத்தனை எழுதினாலும் எத்தனை பாராட்டுகளைப் பெற்றாலும் புத்தகம் வாசிப்பில்தான் அதிகம் சுகம்பெறுபவர். புத்தகம் இல்லாத பூமியில் இவர் நாசிக்கான மூச்சுக்காற்று இல்லை. பாட்டு, கவிதை, பயணக்கட்டுரை, மேடைப்பேச்சு, நேர்காணல் என்று இலக்கியத்தில் எதையும் விட்டுவைக்காதவர். அனைத்திலும் முத்திரை பதிப்பவர். அறிவும் உணர்வும் போட்டிபோட்டுக்கொண்டு உச்சத்தில் நிற்கும் வாய்ப்பினைப் பெற்ற அரிய கவிஞர்கள் இவரைப்போல் மிகச் சிலர்தான்.

இவர் கவிதைகளில் அடிக்கற்களாய் உறுதியாய் நிற்பவை நம்பிக்கை வரிகள்தாம். எந்த ஒரு நிலையிலும் நம்பிக்கையை ஊட்டிவிடாமல் எந்த ஒரு கவிதையையும் இவர் வெளியேற்றிவிடுவதில்லை. இந்த வரிகளைப் பாருங்கள். நடப்பது ஒரு அழிவு. ஒரு மெழுகு எரிந்து உருகி உருகி சிதைகிறது. இதில் எப்படி நம்பிக்கையை ஊட்டமுடியும். முடியாதல்லவா? ஆனால் வைரமுத்துவால் முடிகிறதே...

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகுதான்
உயிர் வருகிறது


ஒவ்வொரு கவிதையின் கடைசி வரிகளிலும் இவர் தன் உயிரை அடர்த்தியாய் எப்படியோ இறக்கி வைத்துவிடுகிறார். ஒவ்வொரு கவிதையின் முடிவின் பின்னும் இவர் மீண்டும் பிறக்கிறார். இவர் கவிதை எழுதுகிறாரா அல்லது செத்து செத்து பிழைக்கிறாரா என்ற கேள்வி வருகிறதல்லவா? இந்தக் கவிதையின் கடைசி வரிகளையும் பாருங்கள். பல கற்பனைகளால் ஒரு மெழுகுவத்தி எரிவதை நம் முன்னே உலக விருதுபெற்ற படங்களாய் ஓட்டிக்காட்டிவிட்டு, அது சொல்லும் பாடத்தை மிகத் தெளிவாய் நமக்குச் சொல்லிவிடுகிறார். அப்படியே சிலிர்த்துப் போகிறது

மனிதனைப் போலவே
இந்த அஃறிணையும்
நான் அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.


மரணம் என்பது இல்லாத ஒன்று. அது மரணமடைந்துவிட்டதற்காக நாம் மௌன அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும். இக்கவிதையை ஒருமுறை வாசித்துவிட்டவர்களுக்கு, பின் எப்போதும் எங்கும் மெழுகுவத்தி எரியும்போதெல்லாம் சிந்தனையும் உணர்வுகளும் சேர்ந்தே எரிவதைத் தடுக்கவே முடியாது.

3 comments:

சீதாம்மா said...

அன்பு

உன் மெழுகுவர்த்தி என்னை உன் மும் கொண்டு வந்து நிறுத்தியிரூகின்றது. என்ன அழகாய் எழுதி இருக்கின்றாய். எடுத்துச் சொல்லும் விதம் மயக்குகின்றது. கவிதைகள் எழுது. ஆனால் இது போல் உரை நடையில் ஏதாவது எழுதிக் கொண்டே இரு. நீ உனக்குச் சொந்தமில்லை. உன்னை அங்கே கண்டு சமாதனம் அடைவேன். இந்த சீதாம்மாவுக்காக இந்த உதவி செய். என் உயிர்த் தாகத்திற்கு உன் எழுத்து வேண்டும். உயிர் போகும் பொழுது தொண்டை நனைக்க தண்ணீரோ, பாலோ கொடுப்பார்கள். என் மரண காலத்தில் நீ கொடுக்கும் நீர் உன் உரைநடை எழுத்துக்கள். வைரமுத்துவை நீ புகழ்கின்றாய். உன் வைர வரிகள் அவனைவிட உன்னை அடையாளம் காட்டுகின்றது. நான் உன் எழுத்துக்கு ரசிகை. நீ சாதனையாளனாக வேண்டும் என்று சொன்னேனே. உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து மகிழ்கின்றேன். அன்பு, நீ இதுபோன்று எழுதிக் கொண்டே இரு. உன் உரை நடை எனக்கு மிகவும் பிடிக்கும். உன் உரை நடையும் ஓர் சங்கீதமே.
உன் ரசிகை
சீதாம்மா

மயூ மனோ (Mayoo Mano) said...

நீங்கள் விமர்ச்சித்த கவிதையை நான் படிக்கும் போது கவிதையாகவே இருந்தது. இப்போதுதான் உயிர் வந்தது.

சாந்தி said...

எல்லோரும் பாராட்டிவிட்டார்களே மிச்சம் வைக்காமல்..

கவிதைக்கான விமர்சனம் கவிதையை அல்லவா தூக்கி சாப்பிட்டது...


அந்த வார்த்தைகளின் பொருள் தேடிச் சென்று பாருங்கள். இந்தக் கவிதையின் நீளம், இதில் உள்ள வரிகளைவிட எத்தனை பெரியது என்று விளங்கும். ஒரு கவிதை என்பது அதன் வரிகளோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி வாசிப்பவனின் இதயத்தில் நீண்டு வளர்வது. அப்படி இழுத்துச் செல்லும் இந்தக் கவிதையை வாசித்துவிட்டு விழிகள் நிலைகுத்திப் போகும் ஆபத்து அநேகமாக எல்லோருக்கும் நேரும் என்றுதான் தோன்றுகிறது.


தனக்குமுன் வாழ்ந்த தமிழின் நீண்ட பெரும் கவிஞர்களின் முகங்களில் வேண்டிய பகுதிகளைமட்டும் கிள்ளிக்கிள்ளி தன் முகத்தின் வடிவாய் ஆக்கிக்கொண்டவர்.

:) என்ன ஒரு கற்பனை.

"வைரமுத்து, நீ என்ன சொல்கிறாய்? சீக்கிரம் சொல்லிவிடு என் ஆவல் என்னைக் கொல்கிறது" என்று அடுத்த வரிகளை வாசிக்கிறான்.

கதை கேட்கும் குழந்தையின் ஆவலோடு..


இந்த வரிகளைப் பாருங்கள். நடப்பது ஒரு அழிவு. ஒரு மெழுகு எரிந்து உருகி உருகி சிதைகிறது. இதில் எப்படி நம்பிக்கையை ஊட்டமுடியும். முடியாதல்லவா? ஆனால் வைரமுத்துவால் முடிகிறதே...


மகுடம் சூட்டும் அழகு..


பின் எப்போதும் எங்கும் மெழுகுவத்தி எரியும்போதெல்லாம் சிந்தனையும் உணர்வுகளும் சேர்ந்தே எரிவதைத் தடுக்கவே முடியாது.


உங்கள் விமர்சனம் அல்லவா கண்முன் கூட வரும்..:)




--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..