உயிரே
அமைதியை நோக்கித் தவழ்ந்துவிடு
சத்தங்கள் சத்தான உள்ளத்துக்கும்
கடும் விசங்கள்

இந்த பூமி மடி நிறைய மனித மொட்டுக்கள்
அவை மலர்களாய்ப் பூக்கும்
பிரிய விரல்களால் வருடும் பொழுதுகளில்
இருந்தும் எந்தப் பூவினுள்ளும்
நீ வீழ்ந்துவிடாதே

ஒருசில பூக்களிலோ முட்களிருக்கலாம்
ஆயினும் நம் சுடுசொற்களால்
மெல்லிய இதழ்களையே
முட்களாய் மாற்றிக் கொள்ளும்
பூக்களும் உண்டு இங்கே

நெஞ்சம் உண்மையின் ஊற்றாகட்டும்
செவியரும்புகள் பிறருக்காய்
பிரியமுடன் மலரட்டும்

மெலிந்தவனோ அறிவிலியோ
நீ விட்டு விலகும்
அந்த ஒன்றுமறியாதவனிடமும்
ஓர் கதை உண்டு
பிறர் பிணிக்குச் செவி மடுத்தால்
உன் பிணி தூசல்லவா

ஆயினும்
கடும் விசத்தை அமுதெனக் கலந்து
நுனி நாக்கில் பரிமாறும் கரு நாகங்களையும்
விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே கழற்றிக் கொள்ளும்
பிறவித் திருடர்களையும் விட்டு விலகிவிடு

இந்த மண்ணில்
நம்மிலும் உயர்ந்தோருமுளர் தாழ்ந்தோருமுளர்
வீணே ஒப்பிட்டு நெஞ்ச நீரோடையில்
நஞ்சினைக் கலப்பதைக் கைவிடு

உனக்கென ஓர் உள்ளம்
அதில் உன்னுடைய என்றுசில எண்ணங்கள்
பிறகென்ன?

மனசாட்சியெனும் வைரக்கால் பதிய
திடமாய் எழுந்து நில்
உன் இனிய எண்ணங்களில் வாழ்
ஈடற்ற சாதனைகளில் சிரி

1 comment:

பூங்குழலி said...

அருமையான கவிதை