நட்பென்னும் கவிதை - கவிஞர் சேவியர்

நட்பென்னும் கவிதை
(நட்புரை)

- கவிஞர் சேவியர்

கவிதைகள் குறித்த நோக்கமும் போக்கும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் எனக்குச் சொல்வது ஒன்றைத் தான். கவிதை இன்னும் இருக்கிறது. தென்றலென்றோ, வாடையென்றோ, புயலென்றோ பெயரிட்டழைப்பது காற்று இருக்கும் இடத்தில் தானே. பெயர்களைப் பார்த்துப் பதட்டப்படாமல் காற்று இருப்பதனால் கவலையற்று இருக்கக் கற்றுத் தந்திருக்கிறது காலம்.

குளிர் பற்றிய ஒரு கவிதையை ஒரு முறை இணையத்தில் வாசித்தேன். மனதுக்குள் பனியை விளையச் செய்து விழிகளில் வியப்புச் சொடுக்கெடுக்க வைத்த அற்புதக் கவிதையாய்த் தோன்றியது எனக்கு. அப்போது ஒரு மின்னஞ்சல் எழுதிப் போட்டேன் அதை எழுதியவருக்கு. அந்த அறிமுகம்தான் இன்று நட்புரை எழுதுடா என்று மின்னஞ்சல் மூலமாகத் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

நண்பர் புகாரியின் கவிதைகளை நான் நேசிப்பதற்கு முக்கியமான காரணம், கண்டு, கேட்டு, உண்டு , உயிர்த்து , உற்றறியும் ஐம் புலன்களுக்குள்ளும் அற்புதமாய்க் கிளர்ந்து வரும் அவரின் கவிதைகளை அதனதன் கனத்துடனும், கலைந்து விடாத கவனத்துடனும் கவிதைக் களத்தில் மிக சாமர்த்தியமாக அவர் எடுத்துக் கொடுக்கும் நேர்த்திதான்.

சமுதாயத்தில் நிகழும் ஏதேனும் ஒன்றைப்பற்றிய அதீத பாதிப்பு அவருடைய கவிதைகள் பலவற்றில் முகமூடி இல்லாமல் முன்நிறுத்தப் படுகிறது. தான் எழுதிய கவிதை சரியானதே என்று வாதிடுவதற்குரிய அத்தனை தளங்களையும் யோசித்துப் பார்த்துக் கவிதை எழுதும் அவருடைய ஈடுபாடு என்னைப் பல வேளைகளில் சிலிர்க்க வைத்ததுண்டு.

காதலைப் பற்றி நண்பர் கவிதை எழுதுகிறார் என்றால் பதின்ம வயதுக்கே பயணப்பட்டுவிடுகிறாரோ என்று எண்ணத் தோன்றிவிடும் எனக்கு. தளிர் மாவிலையின் நுனியில் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து ஒரு பெரும் துளியாக மாறி மண்ணில் வந்து வீழும் தங்கிய மழைத்துளி போல, காதலின் உணர்வுகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து மனதுக்குள் கொட்டிவிடும் மழைத்துளி அவர்.

தன்னை நேசிக்காத எவனும் முழுமையான மனிதனாக இருக்க முடியாது, தன் கவிதைகளை நேசிக்காத எவனும் முழுமையான கவிஞனாய் இருக்க முடியாது. புகாரி நேசிக்கிறார். சங்கத் தமிழை உள்வாங்கி சந்தத் தமிழில் கவிதை எழுதி, இது வெண்பா அல்ல என்பா என்று தைரியமாக முழங்கிக் கவிஞனாக வாழ்கிறார்.

அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்து விட்டால்
ஆவல் செத்துவிடும்

என்று ஆங்காங்கே வாழ்க்கைத் தத்துவங்களைச் சின்னச் சின்ன வரிகளில் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு போவது நண்பரின் பாங்கு. குருடன் கையில் கிடைத்த நவீன ஓவியம் போன்ற புரியாத கவிதைகள் படைப்பதில் புகாரிக்கு உடன்பாடு இல்லை. இதோ.. என்னிடம் இருப்பது இந்த ரோஜா மலர் தான். பிடித்திருக்கிறதா? என்று கேட்கின்றன அவருடைய கவிதைகள். கையில் இருப்பது என்ன மலர் என்று கண்டுபிடிக்கும் சிரமத்தை கவிஞர் தருவதில்லை. கண்டு பிடிக்கப் படாமல் போனால் குறிஞ்சி மலர்கள்
கூட நிராகரிக்கப் படலாம் அல்லவா?

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்க்கவிதைகள் பாடி விடாத எதுவும் இல்லை என்னும் கூற்று இனிமேல் மெய்யாக இருக்கச் சாத்தியமில்லை. எத்தனை காலம்தான் மயில்களைப் பற்றிப் பாடுவது? இ-மெயில்களைப் பற்றிப் பாடலாமே! கன்னிகளைப் பற்றியே கவிதை வடிப்பதை கொஞ்சம் நிறுத்திக் கணிணிகளைப் பற்றிக் கவிதை வடிக்கலாமே? நவீன யுகத்தின் அறிமுக முகங்களை கவிதைக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டுமே! நண்பரின் பல கவிதைகள் அதைச் செய்திருக்கின்றன.

இன்றைய வாசகனின் முன்னால் கவிதைகள் தங்கள் பல முகங்களையும் காட்டி நிற்கின்றன, பந்தியில் பரிமாறப் பட்டிருக்கும் விருந்து போல. நிராகரிப்பதும் வரவேற்பதும் வாசகர்களின் விருப்பம். இலக்கியக் கடலில் நீந்தும் வாசக மீன்களுக்கு பலவேளைகளில் உணவுத் தூண்டில்களில் வழங்கப்படுவது துயரமான உண்மை. கவிதைகள் புனிதமான பிறப்பினங்கள், அவை புனிதர்களால் எழுதப்பட்டு புனிதர்களால் வாசிக்கப்பட்டுப் புனிதத் தன்மை அடையவேண்டும் என்பவையெல்லாம் மீன்களைக் குழப்பும் மந்திரங்கள் என்பவற்றை புகாரி புரிந்து கொண்டிருக்கிறார்.

நான்காவது தொகுப்புடன் முன்னால் நிற்கும் நண்பரை மனமார வாழ்த்துகிறேன். பச்சை மிளகாய் இளவரசி நண்பரை கவிதை ராஜ்யத்தின் அரச இருக்கையில் அமர வைக்கட்டும்.

·

அன்புடன்
சேவியர்

No comments: