அர்ச்சனைகள் சுலோகங்கள் என்று இந்துமதம் சார்ந்த அனைத்தும் சமஸ்கிரதத்தில் இருப்பதால், தமிழனுக்கு அவன் ஓர் இந்து என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

பைபிள் ஹீப்ரு, அராமிக், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு கிருத்தவன் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

குர்-ஆன் அரபியில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு முஸ்லிம் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா?

இந்து முஸ்லிம் கிருத்தவம் எல்லாம் மதங்கள். மதங்களின் வழியேதான் மொழியுணர்வும் இருக்க வேண்டுமென்றால் உலகில் பல ஆயிரம் மொழிகள் அழிந்து மிகச் சில மொழிகளே வாழநேரிடும்.

மதம் என்பது ஏற்பதால் வருகிறது. இன்று நீ ஒரு மதத்தில் இருக்கலாம். நாளை இன்னொன்றுக்கு மாறுவாய் அல்லது மதமற்றவனாய் ஆவாய்.

ஆனால் மொழி என்பது அப்படியல்ல. அது தாயோடு வருகிறது. அதை அந்தத் தாயே நினைத்தாலும் அழிக்க முடியாது.

இன்றெல்லாம் தாயே தமிழை அழித்துத் தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஊட்டுகிறாள். ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள். ஒரு தமிழனின் மரபணுக்களில் ஓடுவது தமிழெழுத்துக்கள். அதை அவளால் அழிக்கவே முடியாது.

அது ஒருநாள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியேறும். ஐம்புலன்களுடனும் ஐக்கியம் ஆகியிருக்கும் தாய்மொழியை அழிப்பது அத்தனை சுலபமான விடயம் அல்ல. வெளி உணர்வுகளுக்குத்தான் பூட்டு. உள்ளுணர்வுகளை மாற்ற அத்தனை எளிதில் முடியுமா?

ஆங்கிலம் மட்டும் படித்து ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தமிழன் ஒரு தமிழ்ப்பாட்டு கேட்டு தன்னை மறப்பான். ஏன்?

ஒரு சொற்பொழிவைக் கேட்டுச் சொத்தெழுதித் தர தயாராகும் உள்ளங்களும் உண்டு.

தாய்மொழி காப்போம், அது நம் செவிகளுக்கு நெருக்கமாகவே இருக்கட்டும்.

தாய்மொழி காப்போம், அது நம் நாவுக்குள் தேன் வார்ப்பதைத் தடுப்பவர்களாய் நாம் இருக்க வேண்டாம்.

தாய்மொழி காப்போம், அது நம் விழிகளுக்குள் கனவுகளாய் விரிந்தவண்ணமாகவே இருக்கட்டும்.

தாய்மொழி காப்போம், அது நம் உயிருக்குள் உயிராய் உட்கார்ந்திருப்பதை நம்மால் வெளியேற்றவே முடியாது என்பதை உணர்ந்தவர்களாய்... தாய்மொழி காப்போம்

அன்புடன் புகாரி
20160612

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்