மதம்
ஒரு விநோதம்தான்

பலருக்கும் பலகாலும்
அறவாழ்வு தரவந்து
சிலர்கையில் சிலநேரம்
அரிவாளைத் தந்துவிடும்


மதம்
ஒரு விநோதம்தான்

நடந்தே
ஊர்கள் கடந்தோர்க்கு
குதிரைமுதுகு வாய்த்தநொடி
எல்லைதாண்டிப்
பரவத் தொடங்கிவிட்ட

மதம்
ஒரு விநோதம்தான்

மொழிவேறு இனம்வேறு
பழக்கம்வேறு பண்பாடுவேறு
நிறம்வேறு அறம்வேறு
என்றானப் பேருலகில்
தான்மட்டும் தனித்தே போதுமென்ற
பொதுநெறி பரவவிட்ட

மதம்
ஒரு விநோதம்தான்

பேரன்பே இறையென்று
பொன்னெழுத்தில் பொழிந்தாலும்
ஆதிக்கச் சக்திகளும்
அரசியல் வித்தைகளும்
போர்களையே ஏவிவிடப்
பகடைக்காய் ஆகிவிட்ட

மதம்
ஒரு விநோதம்தான்

மனிதநேயக் குரல்வளையை
நொறுக்கித் தூளாக்கும்
வக்கிரர் விரலொடிக்க
தாய்மன இணக்கம் தேடித்
தவித்தே தேம்பிநிற்கும்

மதம்
ஒரு விநோதம்தான்


No comments: